Wednesday, March 7, 2012

ஏழை விவசாயிகளுக்கு ஏற்ற சில்பாலின் முறை மண்புழு உரத்தயாரிப்பு


 உழவர்களின் நண்பன் என்று அழைக்கப்படும் மண்புழுக்களை கொண்டு உரம் தயாரிக்கும் முறை பரவலாகி வருகிறது. இது நல்ல தொழிலாகவும் விவசாயிகள் சிலரால் தொடங்கப்பட்டு லாபமுள்ள தொழிலாக சிறப்பு பெற்றுள்ளது.
மண்புழு வாழ உதவும் சூழ்நிலை
மண்புழு உரத்தயாரிப்பில் குழி முறை,குவியல் முறைதொட்டி முறை மற்றும் சில்பாலின் முறை என்ற முறைகளில் மண்புழு உரத்தை தயாரிக்கலாம். ஆனால் மிகக்குறைந்த செலவில் மண்புழு உரத்தை தயாரிக்க சில்பாலின் என்ற முறையை கையாளலாம். இந்த முறையானது ஏழை விவசாயிகளும் மண்புழு உரத்தை சொந்தமாக தயாரிக்க ஏற்ற முறையாக இருக்கிறது.
மண்புழுக்கள் அதிக அளவில் பெருகினால் மட்டுமே அதிக அளவு தரமான மண்புழு உரம் கிடைக்கும்.  இதனை பெற, குவியலில் விடப்படும் மண்புழுக்கள் நல்ல நிலையில் வளர்ச்சியடைந்து, இனப்பெருக்கம் செய்வது முக்கியம். மண்புழுக்களின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு நல்ல காற்றோட்டம், ஈரப்பதம், உணவு மற்றும் சரியான வெப்பநிலை ஆகியவை இருக்க வேண்டும். மண்புழுக்கள் வசிப்பதற்கான இடத்தில் நிலவும்  ஈரப்பதம் எப்போதும் சரியான அளவில் இருப்பது அவசியம். ஈரப்பதம் குறைந்து போனால் புழுக்கள் பாதிக்கப்படும். இதே போல் ஈரப்பதம் அதிகமானால் புழுக்கள் மூச்சு விட முடியாமல் திணறி இறந்து போகும். இதற்கு காரணம், மண்புழுக்கள் அவற்றின் தோல் மூலம் தான் சுவாசிக்கின்றன. ஈரப்பதம் அதிகமாகும் போது இந்த தோலின் வழியாக சுவாசிக்க முடியாமல் அவை மடிகின்றன.
இதே போல் மண்புழுக்களுக்கு உணவாக காய்கறி மற்றும் இயற்கை கழிவுகளை மாட்டுச்சாணத்துடன் கலந்து கொடுக்க வேண்டும். மண்புழுக்கள் இதை உண்டு கழிவுகளை வெளியேற்றுகின்றன. இந்த கழிவுகளில் தான் பயிர்களுக்கு வேண்டிய அனைத்து சத்துக்களும் நிரம்பியிருக்கின்றன. மண்புழு வாழ்வதற்கான வெப்பநிலை என்பது 16 முதல் 28 டிகிரி சென்டிகிரேட் ஆகும். வெப்பநிலை அதிகம் உள்ள இடங்களில் நிழலில் புழுக்களை வளர்த்து நீர் தெளித்து குளிர்ச்சியை ஏற்படுத்த வேண்டும்.
சில்பாலின் முறை மண்புழு உரத்தயாரிப்பு
மண்புழு உரத்தை தயாரிப்பதற்கு ஏழை விவசாயிகளுக்கான சிறந்த முறையாக சில்பாலின் முறை உதவுகிறது. சில்பாலின் பை என்பது சந்தையில் கிடைக்கக்கூடிய ஒரு வகை செயற்கை பொருளால் ஆன பை ஆகும். சிறிய அளவில் மண்புழு உரத்தயாரிப்பில் இறங்க விரும்பும் விவசாயிகள் 12 அடி நீளம், 4 அடி அகலம் மற்றும் இரண்டரை அடி உயரம் இருக்கும்படியான சில்பாலின் பையை வாங்கிக் கொள்ள வேண்டும். இந்த பையை பொருத்துவதற்கு 13 அடி நீளமுள்ள நான்கு சவுக்கு மரங்களை வாங்கிக் கொள்ள வேண்டும். இதே போல் 4 அடி உயரமுள்ள 14 சவுக்கு மரங்களை வாங்கிக் கொள்ள வேண்டும்.
சில்பாலின் பையில் நீர் வெளியேறுவதற்காக துளைகள் உள்ள பகுதி தாழ்வாக இருக்கும்படி சற்று தொய்வாக நிலை நிறுத்த வேண்டும். சவுக்கு மரத்தை சில்பாலின் பையுடன் சேர்த்துக் கட்ட கட்டுக்கம்பியையோ, பிளாஸ்டிகள் கயிற்றையோ பயன்படுத்தலாம். அதிகப்படியான நீர்வெளியேறுவதற்காக அமைக்கப்பட்டுள்ள வடிகால் பகுதியின் வெளியில் 2க்கு2க்கு2 என்ற அளவில் குழி அமைத்து மண்புழு வடிநீரை பெறலாம். சில்பாலின் பையின் கீழ்பகுதியில் ஜல்லிக்கற்களையோ அல்லது தென்னை நார்க்கழிவையோ அல்லது இளநீர் மட்டைகளையோ இட்டு ஒரு படிவம் போன்ற பகுதியை ஏற்படுத்த வேண்டும்.
இந்த படிவ பகுதியின் ஆழமானது 10 முதல் 15 செ.மீட்டர் அளவில் இருந்தால் போதுமானது. இந்த படிவத்தின் மீது மாட்டுச்சாணத்தையும், மற்றக்கழிவுகளையும் கலந்து பாதிமக்கிய கலவையை இடவேண்டும். விவசாயக் கழிவுகளை நன்கு வெட்டி எடுத்து மாட்டுச்சாணத்துடன் கலந்து, 20 முதல் 25 நாட்கள் தண்ணீர் தெளித்து வந்தால் பாதி மக்கிய கழிவு கிடைக்கும். பின்னர் இதன் மீது நீர் தெளித்து அதன் மேல் மண்புழுக்களை இடவேண்டும். மேல் சொன்ன அளவில் அமைக்கப்பட்ட சில்பான் பாய் அமைப்பில் ஒன்றரை டன் அளவுக்கு கழிவுகளை கொட்டி வைக்க முடியும். இந்த அளவு கழிவை மண்புழு உரமாக மாற்ற சுமார் 3 கிலோ என்ற அளவில் மண்புழுக்களை இட வேண்டும்.
செரிமானமாகும் கழிவுகள்
இவ்வாறு கழிவுகளில் விடப்பட்ட மண்புழுக்கள் அந்த இயற்கை கழிவுகளை உண்டு செரித்து எச்சத்தை வெளியேற்றும். இந்த நிலையில் கழிவின் ஈரப்பதமானது மண்புழுக்கள் வாழ ஏற்றதாக இருக்கிறதா என்பதை கவனித்து வர வேண்டும். ஈரப்பதத்தை தக்க வைக்க கழிவுக்குவியலின் மேல், அதாவது சில்பாலின் பாயின் மேல் புறத்தில் வைக்கோல் அல்லது சணல் சாக்குகளை கொண்டு மூடி வைக்கலாம். இவ்வாறு பராமரித்து வரும் போது 50 முதல் 60 நாட்களில் மண்புழு உரம் தயாராகி விடும். மண்புழு வெளியிடும் எச்சத்தைக் கொண்டே மண்புழு உரம் தயாராகி விட்டதை அறிந்து கொள்ள முடியும். மண்புழு உரம் தயாரானதும், பச்சை சாணத்தை கால் பந்து போல் உருண்டை வடிவில் உருட்டி சில்பாலின் பாயில் ஆறு இடங்களில் லேசாக இரண்டு முதல் மூன்று செ.மீட்டர் ஆழத்தில் வைக்க வேண்டும். ஒரு நாள் கழித்து, அந்த மாட்டுச்சாண உருண்டையை எடுத்து மண்புழுக்களை பிரித்துக் கொள்ளலாம். அதாவது, சில்பாலின் பையில் போடப்பட்ட கழிவுகளை எல்லாம் ஏற்கனவே உண்டு செரித்து விட்ட மண்புழுக்கள் சாண உருண்டையை உண்டு செரிக்க ஏதுவாக அதில் வந்து ஒட்டிக் கொள்ளும். அப்போது மண்புழுக்களை சேகரித்து விட முடியும்.
புழுக்கள் பராமரிப்பு
இவ்வாறு மண்புழுக்களை சில்பாலின் பாயில் கழிவுக்குவியலில் இருந்து எடுத்த பின் சில்பாயின் பாயில் குவிந்திருக்கும் மண்புழு உரத்தை சேகரிக்க வேண்டும். இந்த உரத்தை 24 முதல் 36 மணிநேரத்திற்கு நிழலில் உலர்த்த வேண்டும். இது காய்ந்த பின் சல்லடையில் சலித்து எடுத்தால் மிகவும் தரமுள்ள மண்புழு உரம் கிடைக்கும். மண்புழு உரமானது அடர்ந்த டீத்தூளின் நிநத்தில் இருக்க வேண்டும். இந்த உரத்திலிருந்து கெட்ட துர்நாற்றம் எதுவும் வரக்கூடாது. இவ்வாறு கிடைக்கும் மண்புழு உரத்தை சாக்குப் பைகளில் சேமிப்பதை விட திறந்த வெளி நிழலில் சேமிப்பது நல்லது. திறந்த வெளியில் சேமிக்கும் போது லேசாக இதன் மீது நீர் தெளித்து ஈரப்பதத்தை காக்க வேண்டும். இதனால் மண்புழு முட்டைகளையும், நன்மை செய்யும் நுண்ணுயிரிகளும் இந்த உரத்தில் அப்படியே இருந்து பயிர்களுக்கு நன்மை செய்யும்.
இந்த முறையில் ஏழை விவசாயிகள் தங்கள் நிலத்திற்கு தேவையான மண்புழு உரத்தை தயார் செய்து கொள்ள முடியும்.

No comments: