Thursday, March 29, 2012

வேகவைத்த உணவே ஆரோக்கியம்


`கண்டதையும் படிப்பவன் பண்டிதன் ஆவான்' என்ற பழமொழி போல, ``கண்டதையும் தின்பவன் பலவான் ஆவான்' என்ற புது மொழியும் வழக்கத்தில் இருக்கிறது. `கல்லைத் தின்றால் கூட கரைந்து போகும் வயது' என்று வாலிப வயதினரைச் சொல்வதுண்டு. `தின்பது' அதாவது சாப்பிடுவது, இவை இரண்டுமே ஜீரணத்தோடு சம்பந்தப்பட்டதாகும்.

ஜீரணம்- இதை செரித்தல்,செரிமானம் என்று சொல்வதுண்டு. வேக வைத்த உணவு, வேக வைக்காத உணவு, என நாம் சாப்பிடும் உணவு இரு வகைகளாக இருக்கின்றன. சில பச்சைக் காய்கறிகள், கீரைகள், பழங்கள், காய்களை, நாம் வேக வைக்காமல் அப்படியே சாப்பிட முடியும். ஆனால் சிலவற்றை வேக வைத்துத் தான் சாப்பிட முடியும்.

வெங்காயம், வெள்ளரிக்காய், தக்காளி, கேரட், முட்டைகோஸ் போன்ற காய்கறிகளை, பச்சையாக, வேக வைக்காமல் அப்படியே சாப்பிட முடியும். அதற்காக `நான் பச்சைக் காய்கறிகளைத்தான் சாப்பிடுவேன் என்று அடம் பிடித்து, ஒரு கத்திரிக்காயை நம்மால் கடித்துத் தின்ன முடியுமா? முடியாது. அப்படியே சாப்பிட்டாலும் அரை குறையாக ஜீரணமாகி, வயிற்றுப் பிரச்சினையைத் தான் உண்டு பண்ணுமே தவிர, சும்மா இருக்காது.

சமைத்த உணவு அதாவது வேகவைத்த உணவு பற்றிக் கவலைப்படத் தேவையில்லை. சமைக்காத அதாவது வேக வைக்காத உணவுகளில் பாக்டீரியாக்கள் உயிரோடு இருக்க வாய்ப்புண்டு. உணவுப் பொருட்கள் வேக வைக்கப்படும் போது, இந்த பாக்டீரியாக்கள் அழிந்து விடுகின்றன. எனவே பாதுகாப்பான உணவு சாப்பிட, உணவை வேக வைப்பது நல்லது.

மேலும் வேக வைக்கப்படுவதால், உணவுப் பொருள்கள் மெல்லுவதற்கும், விழுங்குவதற்கும், ஜீரணம் ஆவதற்கும் மிக மிக உபயோகமாக இருக்கிறது. `வேக வைக்காத உணவு சாப்பிடும் பெரும்பாலானோருக்கு, சாப்பிடும் உணவு சரிவர ஜீரணம் ஆகாமல், உடலுக்கு ஒத்துக்கொள்ளாமல், அஜீரணம் ஆகி விடுகிறது. எனவே மனிதனுடைய உணவு மண்டலம், வேக வைத்த உணவு சாப்பிடுவதற்கு ஏற்ற மாதிரிதான் உருவாக்கப்பட்டிருக்கிறது என்று இன்னொரு ஆய்வு கூறுகிறது.

மனித உடலுக்குத் தேவையான சக்தியும், சத்தான பொருள்களும், நாம் சாப்பிடும் உணவிலிருந்துதான் கிடைக்கிறது. நாம் சாப்பிடும் இட்லி, தோசை, சாதம், பிரியாணி, முந்திரி, பாதாம், பிஸ்தா, அக்ரூட் முதலியவைகளில் உள்ள சத்துக்களை, நமது உடம்பு நேரடியாக எடுத்துக் கொள்ள முடியாது. நாம் சாப்பிடும் உணவுப் பொருள்கள் அனைத்தும் துண்டு துண்டாக்கப்பட்டு, தூள் தூளாக்கப்பட்டு, கடையப்பட்டு, கூழாக்கப்பட்டு, முழுவதும் ஜீரணமாகி, கடைசியாகத் தான் உடலுக்கு உபயோகமாகும் பொருளாக மாற்றப்படுகிறது.

எனவே ஜீரணம் என்பதே ஒரு கூட்டு முயற்சியாகும். அதாவது நாம் சாப்பிடும் உணவுப் பொருள் உணவுப் பாதையில் துண்டு துண்டாக்கப்பட்டு, சிறுசிறு துகள்களாக்கப்பட்டு, கூழாக்கப்பட்டு, பின் அந்த சிறு உணவுத் துகள்களிலுள்ள சக்திகளெல்லாம் ஒன்று சேர்க்கப்பட்டு, உறிஞ்சப்பட்டு, அதன் பின் இரத்தத்தில் கலக்கப்பட்டு, ரத்தம் மூலமாக உடல் முழுவதுக்கும் கொண்டு போகப்பட்டு, நமது உடல் ஆரோக்கியமாக இருக்க, உதவுவதுதான் `ஜீரணம்' ஆகும்.

ஜீரணமாகாத எஞ்சிய உணவுப் பொருட்கள், அதாவது ஜீரண வேலை நடக்கும் போது, ஜீரணத்துக்குக் கட்டுப்படாத சில உணவுப் பொருள்கள், ஜீரணப்படுத்தப்படாத சில உணவுப் பொருள்கள் ஒன்று சேர்ந்து, கடைசியாக `மலம்' என்ற பெயரில் உடலை விட்டு வெளியேறுகிறது. `உணவு செரிமானம்' உணவுப் பாதையில் தான் நடக்கிறது.

உணவுப் பாதை என்பது வாயில் ஆரம்பித்து, பின் நெஞ்சுப் பகுதியிலுள்ள உணவுக் குழாய், அடுத்ததாக இரைப்பை, அதற்கடுத்து சிறுகுடல், அதற்கடுத்து பெருங்குடல் தாண்டி கடைசியாக ஆசன வாயில் முடிகிறது. வாயில் ஆரம்பித்து, ஆசன வாயில் முடியும் உணவுப் பாதை ஒரு குழாய் போன்று சுமார் இருபத்து நான்கு அடி நீளம் இருக்கிறது.

ஒரு மனிதனின் சராசரி உயரமே, சுமார் ஆறு அடிதானே. இதில் எப்படி இருபத்து நான்கு அடி நீளத்துக்கு உணவுப் பாதை இருக்கிறது என்ற சந்தேகம் உங்களுக்கு வரலாம். உணவு மண்டலத்திலுள்ள சிறுகுடல் மற்றும் பெருங்குடல் இரண்டுமே, வயிற்றுக்குள் வளைந்து, வளைந்து சுருண்டு கிடப் பதால், நீளம் தெரிவதில்லை.

மனிதனின் மொத்த உணவுப் பாதையில் சிறுகுடல் மட்டுமே சுமார் இருபத்தி இரண்டு அடிநீளம் இருக்கிறது. அதே மாதிரி அகலம் சுமார் மூன்று செ.மீ. இருக்கிறது. அதே நேரத்தில் பெருங்குடல் சுமார் ஐந்தடி நீளம்தான் இருக்கும். சிறுகுடலை விட பெருங்குடல் அகலமாகவும, நீளம் குறைவாகவும் இரு க்கும். மொத்த உணவுப் பாதையில் ஐந்தில் ஒரு பங்கு நீளம் பெருங்குடலுடையது.

மனிதர்களை ஒப்பிடும்போது, அநேக விலங்கு களுக்கு சிறுகுடலின் நீளம், அதனுடைய உடல் நீளத்தை மாதிரி, சுமார் மூன்றரை மடங்கு அதிகமாக இருக்கும். ஒரு மிகப்பெரிய நாயின் சிறுகுடலின் நீளம், மனிதனை மாதிரியே சுமார் இருபது அடி வரை இருக்கு மாம். மிகப்பெரிய விலங்காகிய யானை ஒரு நாளைக்கு சுமார் இருநூறிலிருந்து மூன்னூறு கிலோ வரை இலை, தழை, காய், கனிகளை உணவாக சாப்பிடுமாம்.

ஆனால் யானையின் ஜீரண சக்தி மிகவும் குறைவாம். சாப்பிடும் அவ்வளவு பொருளையும் அதனால் ஜீரணிக்க முடியாதாம். எனவே சாப்பிடும் மொத்த உணவில், சுமார் ஐம்பது சதவீதம் உணவு மட்டும் தான் ஜீரணமாகி, உடலுக்கு உபயோகப்படும். மீதி ஐம்பது சதவீதம் உபயோகம் ஆகாதாம். சாப்பிடும் உணவு ஜீரணமாகி உணவுப் பாதையிலிருந்து காலியாகி, கழிவாக வெளியே வர, யானைக்கு சுமார் இரண்டரை நாட்கள் ஆகிறது.

இதே மாதிரி நாய்க்கு சுமார் ஒன்பது மணி நேரமும், குதிரைக்கு சுமார் இரண்டு நாட்களும் ஆகுமாம். உணவுப் பாதை நான்கு முக்கிய வேலைகளைப் பார்க்கிறது.

1) நாம் சாப்பிடும் உணவை தொண்டையிலிருந்து உணவுப் பாதைக்குள் இழுத்துக் கொள்கிறது.

) பின் இந்த உணவுப் பொருளை, துண்டு துண்டாக்கி, கூழாக்கி, பின் ரசாயன மாற்றம் செய்யப்பட்ட அதிலுள்ள சத்துப் பொருளையும், சக்திப் பொருளையும் தனியாகப் பிரிக்கிறது.

3) பின் இந்த சத்துப் பொருளையும், சக்திப் பொருளையும் சிறுகுடல், பெருங்குடலிலுள்ள சுவர்கள் வழியாக உறிஞ்சி, உடலின் ரத்த ஓட்டத்திற்கு அனுப்புகிறது.

4) எல்லா சத்துக்களையும் உறிஞ்சி எடுத்த பின்னர், கடைசியாக எஞ்சியுள்ள உணவுச் சக்கையை, கழிவுப் பொருளை வெளியே தள்ளுகிறது.

அதாவது நாம் சாப்பிடும் உணவு, வாயிலிருந்து அப்படியே வழுக்கி, தொண்டையைக் கடந்து, நெஞ்சுப் பகுதியிலுள்ள உணவுக் குழாய் வழியாக கீழே இறங்கி, இரைப்பையை வந்தடைகிறது. பின் இரைப்பையிலிருந்து, சிறுகுடலின் மூன்று பகுதிகளைக் கடந்து, பெருங்குடலுக்கு வந்தடைகிறது.

முக்கால்வாசி ஜீரண வேலையும், சத்துப் பொருட்கள் உறிஞ்சப்படுவதும் இரைப்பையிலும், சிறு குடலிலுமே முடிவடைந்து விடுகிறது. மீதி இருக்கும் தண்ணீரும், கழிவுப்பொருளும், பெருங்குடலின் மூன்று பகுதிகளைக் கடந்து, ஆசன வாய் வழியா `மலம்' என்ற பெயரில் வெளியேற்றப்படுகிறது.

No comments: