புற்று நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள்
உயர்ந்துகொண்டிருக்கும் அதேவேளையில் இந்த நோய்க்கான நவீன சிகிச்சைகளும்
வளர்ந்துகொண்டுதான் இருக்கின்றன.
ஆனால், புற்றுநோய்க்கு எதிரான இந்த மருத்துவ
முயற்சிகளுக்கு எல்லாம் சிம்ம சொப்பனமாய் இருப்பது ஒரேயொரு பிரச்சினைதான்.
அது, புற்றுநோய் உயிரணுக்கள் அழிக்கப்படும்போது பாதிப்புக்குள்ளாகி
இறந்துபோகும் ஆரோக்கியமான உயிரணுக்களால் ஏற்படும் மோசமான பின்விளைவுகள்!
புற்றுநோய் சிகிச்சையில் உள்ள இந்த தலையாய
பிரச்சினைக்கு ஒரு தீர்வை சொல்ல வந்திருக்கிறது புற்றணுக்களை தேடிக்
கொல்லும் திறனுள்ள டி.என்.ஏ. நானோ ரோபோ! `டி.என்.ஏ. ஓரிகேமி'
தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்த நானோ ரோபோவை உருவாக்கியிருப்பவர்
அமெரிக்காவிலுள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர் ஷான் டக்ளஸ்.
ரோபோ தெரியும், அதென்ன டி.என்.ஏ. நானோ ரோபோ?
மனித மரபணுக்கள் டி.என்.ஏ. எனும் மூலக்கூறுகளால்
ஆனவை. டி.என்.ஏ.வால் ஆன, நானோ அளவுடைய ரோபோ டி.என்.ஏ. நானோ ரோபோ
எனப்படுகிறது. டி.என்.ஏ.வை பல வடிவங்களில் உருவாக்கும் திறனுள்ள
தொழில்நுட்பம்தான் டி.என்.ஏ. ஓரிகேமி! டி.என்.ஏ.வின் வேதியியல்
கட்டமைப்பினை புரிந்துகொள்ளும் டி.என்.ஏ. மாடலிங் சாப்ட்வேரில், நமக்கு
தேவையான ஒரு வடிவத்தை `க்ளிக்' செய்தால்,
டி.என்.ஏ.வைக் கொண்டு அந்த வடிவத்தை அது உருவாக்கிவிடும்.
டி.என்.ஏ.வைக் கொண்டு அந்த வடிவத்தை அது உருவாக்கிவிடும்.
இந்த டி.என்.ஏ. ஓரிகேமி சாப்ட்வேரை பயன்படுத்தி
சிப்பி வடிவத்தில் உள்ள ஒரு டி.என்.ஏ. நானோ ரோபோவை உருவாக்கினார் ஆய்வாளர்
ஷான் டக்ளஸ். இதற்குள் புற்றுநோய் மருந்தை வைத்து, அதை நோயாளியின்
உடலுக்குள் செலுத்தி புற்றணுக்களை அழிப்பதே டக்ளஸின் திட்டம்.
இந்த சிப்பி நானோ ரோபோக்கள், புற்றணுக்களை
எதிர்கொள்ளும்போது மட்டும் தன்னுள் இருக்கும் மருந்தை வெளியேற்றி அவற்றைக்
கொல்ல வேண்டும். அதற்காக சிப்பி நானோ ரோபோவுக்கு இரண்டு பூட்டுகள்
வடிவமைக்கப்பட்டன. ஜிப் போல திறந்து மூடிக்கொள்ளும் தன்மையுடைய இந்த
பூட்டுகள் ஒவ்வொன்றும் `ஆப்டாமர்' எனப்படும் டி.என்.ஏ. இழைகளாலானவை. இவை
குறிப்பிட்ட ஒரு மூலக்கூற்றை எதிர்கொள்ளும்போது மட்டும் திறந்துகொள்ளும்
வண்ணம் வடிவமைக்கப்பட்டவை.
இந்த நானோ ரோபோக்களின் சிகிச்சை திறனை பரிசோதிக்க,
ரத்த புற்றணுக்களான லியூக்கீமியா உயிரணுக்களின் மேற்புறத்தில் இருக்கும்
மூலக்கூறுகளை எதிர்கொள்ளும்போது திறந்துகொண்டு மருந்தை வெளியேற்றும் வண்ணம்
ஒரு சிப்பி நானோ ரோபோ வடிவமைக்கப்பட்டது. பின்னர் அந்த சிப்பிக்குள்,
உயிரணுக்களின் வளர்ச்சியை தடை செய்து அவற்றை கொல்லும் திறனுடைய ஒரு மருந்து
வைக்கப்பட்டது.
இறுதியாக, மருந்து தாங்கிய சிப்பி நானோ ரோபோக்கள்
ஆரோக்கியமான ரத்த அணுக்கள் மற்றும் ரத்த புற்றணுக்கள் கலந்த ஒரு உயிரணு
கலவைக்குள் செலுத்தப்பட்டன. மூன்று நாட்கள் கழித்து, ரத்த புற்றணுக்களுள்
பாதி அழிக்கப்பட்டன. ஆனால் ஆரோக்கியமான ரத்த உயிரணுக்களில் ஒன்றுகூட
பாதிக்கப்படவில்லை என்பது கண்டறியப்பட்டது.
இந்த சிப்பி நானோ ரோபோவுக்குள், புற்றணுக்களின்
செயல்பாடுகளை தடை செய்யும் திறனுள்ள ஒன்றுக்கு மேற்பட்ட மருந்துகளை
புகுத்தி உடலுக்குள் செலுத்தினால், லியூக்கீமியா உயிரணுக்களை ஒன்று விடாமல்
மொத்தமாக அழித்துவிடலாமாம். இதன் மூலம் லியூக்கீமியா வகை ரத்த
புற்றுநோய்க்கு முழுமையான சிகிச்சையளிக்க முடியும் என்கிறார் டக்ளஸ்.
முக்கியமாக, சிப்பி நானோ ரோபோக் களின் ஆப்டாமர்
பூட்டுகளை மாற்றுவதன் மூலம், உடலின் எந்த வகையான உயிரணுவையும் தாக்கி
அழிக்க முடியும் என்கிறார் டக்ளஸ். இதுதான் மருத்துவ உலகின் தற்போதைய
பரபரப்பான செய்தி.
எந்தவித பாகுபாடுமின்றி வேகமாக வளரும் திறனுள்ள
எல்லா உயிரணுக்களையும் கொன்றுவிடும் தன்மையுள்ளது கீமோதெரபி சிகிச்சை.
கீமோதெரபியில் இருக்கும் இந்த முக்கியமான சிக்கலை, இரண்டு பூட்டுகளைக்
கொண்ட சிப்பி நானோ ரோபோக்கள் தீர்த்து வைக்கும் என்றும் நம்பிக்கை
அளிக்கிறார் டக்ளஸ்.
அதாவது, சிப்பி நானோ ரோபோவுக்குள் இருக்கும் மருந்தை
வெளியேற்ற அதன் இரண்டு பூட்டுகளை திறந்தாக வேண்டும். இந்த பூட்டுகளை
திறக்க, சிப்பி நானோ ரோபோக்கள் சந்திக்கும் உயிரணுக்களின் மேற்புறத்தில்
குறிப்பிட்ட சில மூலக்கூறுகள் இருக்க வேண்டியது அவசியம். இந்த
மூலக்கூறுகள், புற்றணுக்களில் மட்டும்தான் இருக்கும். ஆக, சிப்பி நானோ ரோபோ
சிகிச்சையில் புற்றணுக்கள் மட்டுமே கொல்லப்படும். எந்தவித பின்விளைவுகளும்
இருக்காது!
ஆமாம் என்று ஆமோதிக்கிறார் டென்மார்க்கிலுள்ள ஆர்ஹஸ்
பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர் யூர்கன் ஜெம்ஸ். மேலும், டி.என்.ஏ. ஓரிகேமி
தொழில்நுட்பத்தின் மூலம் புத்திசாலியான மருந்துகளை கண்டுபிடிக்க முடியும்
என்பது உண்மைதான். இதை டக்ளஸின் ஆய்வுக்குழு ஆதாரப்பூர்வமாக
நிரூபித்திருப்பது பாராட்டத்தக்கது என்கிறார் ஜெம்ஸ்.
டி.என்.ஏ. ஓரிகேமி கொடுத்திருக்கும் இந்த டி.என்.ஏ.
நானோ ரோபோ, புற்றுநோய் மருத்துவத்துக்கு கிடைத்த ஒரு மகத்தான பரிசு என்பது
மறுக்க முடியாத உண்மைதான் என்கிறார்கள் பால் ராத்மண்ட் உள்ளிட்ட உலகின் பிற
புற்றுநோய் ஆய்வாளர்கள்.
No comments:
Post a Comment