தலைச்சேரி ஆடு
“ஒரு
தலைச்சேரி ஆடு 2 வருஷத்தில் மூணு தடவை குட்டி போடும். ஒரு தடவைக்கு 3
முதல் 5 குட்டி வரை போடும். ஒரு குட்டி பிறக்கும் போதே 4 கிலோவுக்கு
குறையாமல் இருக்கும். மூணே மாசத்தில் அது 20 கிலோவாக வளர்ந்திடும்.
அடர்த்தியான பால் ஒரு நாளைக்கு 2 லிட்டர் வரை கிடைக்கும். முழு
வளர்ச்சியடைந்த கிடா வருஷம் முடிஞ்சா 50 முதல் 60 கிலோ வரை கூட எடை வரும்.
இறைச்சின்னு பார்த்தீங்கன்னா சாதாரண ஆடு ஒரு வருஷம் தாண்டினாலே
கறியாக்கினால் வேக்காடு சரியா கிடைக்காது. ஆனா தலைச்சேரியைப் பொறுத்தவரை 4
வருஷம் வளர்ந்த ஆட்டுக்கறி கூட படு ஸ்மூத்தா இருக்கும். சீக்கிரம் வெந்தும்
விடும். அதனால இப்பவெல்லாம் தலைச்சேரி ஆடுகளுக்குத்தான் செம கிராக்கி!”
-ஆடுகளைப் பற்றி பேச ஆரம்பித்தால் போதும் பெரிய ‘விரிவுரை’யே நடத்துகிறார்
அப்பாஸ். கோவை குனியமுத்தூரில், குறிஞ்சி காலனியில், குறிஞ்சி ஆட்டுப்
பண்ணை நடத்தும் இளைஞர். பண்ணை என்றதும் ஏதோ ஏழெட்டு ஏக்கரில் ஆயிரக்கணக்கான
ஆடுகளை வைத்து பெரிய அளவில் வியாபாரம் நடத்துகிறார் என்று எண்ணி
விடாதீர்கள். வெறும் ஏழு சென்ட் வசிப்பிடத்தில் தன் குடும்பத்துக்கும் ஒரு
வீடு அமைத்துக் கொண்டு, எஞ்சியுள்ள பகுதியில் சிறிய ஆட்டுப்பட்டியை
உருவாக்கிக் கொண்டு சுயமாகத் தொழில் நடத்துகிறார். சொன்னால் நம்ப
மாட்டீர்கள். இவரது சொற்ப இடத்தில் தலைச்சேரி மட்டுமல்ல; வால்குரும்பை,
உஸ்மேனியாபதி, சிரோய் என்று ஆடுகளில் லேட்டஸ்ட் ரகங்கள் எத்தனை உண்டோ,
அத்தனையும் இருக்கின்றன. தினம்தோறும் 20, 30 ஆடுகள் புதிதாக வருகிறது
என்றால் அதே அளவுக்கான ஆடுகள் வெளியாட்கள் விலை கொடுத்து வாங்கிச் சென்றபடி
இருக்கிறார்கள்.
“சின்ன வயசுல ஹாபியாகத்தான் ஆடு வளர்த்தறதுல
ஈடுபட்டேன். இப்ப அதுவே தமிழ்நாடு முழுக்க மட்டுமல்ல, மற்ற
மாநிலங்களுக்கும் சப்ளை செய்யக்கூடிய வியாபாரமா மாறிடுச்சு. சொன்னா
ஆச்சர்யப்படுவீங்க. ஒரு ஆள் ஒரு தலைச்சேரி ஆடு செனையில வாங்கி வச்சு
வளர்த்தார்ன்னா ஆறே மாசத்துல அது ஆறாகி, ஒரு வருஷத்தில் அதுவே
முப்பத்தாறாகி இரண்டு வருஷத்தில் நூற்றுக்கணக்கில் பெருக்கம் செய்யக் கூடிய
தொழில் இது. இறைச்சி கணக்குல ஒரு கிலோ ரூ. 250 கணக்கிட்டு மொத்த
வியாபாரிக்கு கொடுத்தா கூட ஒரு ஆடு ஆறாயிரம் முதல் பத்தாயிரம் ரூபா வரை கூட
விலை போகும். நூறு ஆடு கணக்குப் போட்டு பாருங்க பத்து இலட்சம் ரூபா.
இரண்டு வருஷத்துல முதலீடு 5 லட்சம் கழிச்சா கூட மீதி அஞ்சு இலட்சம் சுளையா
கிடைக்கும்!” என்று நம்பிக்கை ததும்பப் பேசுகிறார். பொதுவாக ஆடுகள்
வளர்ப்பு என்றால் குதிரை மசால் தழை, இளம் புற்கள், செடி கொடிகள்தான்
போடணும். அதற்கு நிறைய செலவு பிடிக்கும். பசுந்தழைகள் வறட்சி காலத்தில்
கிடைப்பது கடினம் என்று நினைக்கிறார்கள். இதற்கு அவசியமேயில்லை என்கிறார்
அப்பாஸ். “ஆடுகளைப் பொறுத்தவரை நாம் எதை சாப்பிடக் கொடுத்துப் பழக்குகிறோமோ
அதற்குத் தானாகவே பழகி விடும். பருத்திக் கொட்டை, புண்ணாக்கு, அரிசி,
பருப்பு, வைக்கோல், வாழை மட்டை கழிவுகள்னு எதைவேண்ணா சாப்பிட்டு வளரும்.
அதிலும் நாங்கள் பண்ணையில் வைத்திருக்கிற ரகங்கள் எங்கு இருந்தாலும் அந்தச்
சூழ்நிலைக்கேற்ப கொடுப்பதைச் சாப்பிட்டு வளரக்கூடிய ரகங்கள்!” என்றும்
விளக்கினார் அப்பாஸ்.
ஆடுகளில் வால் குரும்பை 2 வருஷத்தில் 100 கிலோ
வரை எடை வரும். தவிர அதன் முடி 12 அங்குலம் வரை வளருமாம். இந்த முடி கம்பளி
நெய்தலுக்கு நல்ல விலை போகிறது. மகாராஷ்டிராவைச் சேர்ந்த இந்த ரகத்திற்கு
நோய் எதிர்ப்புச் சக்தி அதிகம். எங்கு வளர்த்தாலும் நோய், நொடிகள்
அண்டாதாம். இதன் குட்டிகள் ஒரு மாதத்திலேயே முப்பது கிலோ வரை வளரக்
கூடியவை. ஊர் ஊராக மேய்ச்சலுக்குக் கொண்டு சென்று பட்டி போட்டு வளர்க்கும்
தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் இதை வளர்த்து கோடீஸ்வரர்கள் ஆன கதைகள் உண்டாம்.
இந்த ஆடுகள் பட்டி போடும் இடத்தில் புழுக்கைகள் பெரிய அளவு இயற்கை உரமாகப்
பயன்படுவதால் விவசாயிகள் பட்டி போடுவதற்குத் தனியாகப் பணமும் கொடுப்பதால்,
இதன் மூலம் உபரி வருமானமும் கிடைக்கிறது.
சிறுவகை என்று ஒரு ரகம்.
ராஜஸ்தானிலிருந்து தருவிக்கப்பட்டவை. வருஷத்துக்கு ஒரே குட்டி போடும்.
அபூர்வமாக 2 குட்டிகள் போடும். 3 மாசத்தில் 30 கிலோ எடை வந்து விடும். ஒரு
வருஷத்தில் அறுபது கிலோ எடையை எட்டி விடும். “ஆடு வளர்ப்பில் பிஸினஸுக்கு
எது சரியோ அதையே தற்போது விரும்புகிறார்கள். ஆனால் விவசாயப் பெருமக்களுக்கு
இது எட்டுவதில்லை. ஆடுகள் மூலம் அவர்களை ஈர்ப்பதும், அவர்களின்
பொருளாதாரத்தை மேம்படுத்துவதையுமே எனது இலட்சியமாகக் கொண்டு இயங்கி
வருகிறேன்!” என்கிறார் அப்பாஸ்
The contact numbers of Mr.Abbas are 7667643724, 9865711155, 9944623619
No comments:
Post a Comment