Monday, August 5, 2013

இருமடிப்பாத்தி...
வரும்படி ஜாஸ்தி!

இயற்கை விவசாயத்தில்
கலக்கும் இரு நண்பர்கள்!


‘தென்னை மரங்களுக்கு இடையில் உள்ள இடைவெளியை சரியாகப் பயன்படுத்தி, அதில் பல்லடுக்கு ஊடுபயிர்களை சாகுபடி செய்ய வேண்டும்’ என்பதுதான் இயற்கை வேளாண் விஞ்ஞானிகள் தொடர்ந்து வலியுறுத்தும் கருத்து. இயற்கை வழி விவசாயிகளில் பெரும்பாலானவர்கள், இதைச் சரியாகக் கடைபிடித்து, கூடுதல் லாபத்தை ஈட்டி வருகிறார்கள்.

இந்நிலையில், தென்னைக்கிடையில் இருமடிப்பாத்தியில் காய்கறி சாகுபடி என்றபடி களத்தில் குதித்து கலக்கிக் கொண்டுள்ளனர் திருப்பூர் மாவட்டம், அவினாசியைச் சேர்ந்த நண்பர்கள் உமாசங்கர் மற்றும் வாசுதேவன்!
அவினாசி புதுப்பேருந்து நிலையத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் கைகாட்டிப்புதூர் பகுதியில்தான் இருக்கிறது இவர்களது காய்கறித் தோட்டம்.

தீவிரமாகத் தோட்ட வேலைகளில் இறங்கியிருந்த நண்பர்களை சந்தித்தோம்.
‘‘நான் பனியன் ஏற்றுமதி முகவரா இருக்கேன். நண்பர் வாசுதேவன், ஆட்டோ மொபைல் தொழில் செய்றார். ஈஷா யோக மையத்துலதான் ரெண்டு பேரும் நண்பர்களானோம். அந்த மையத்தோட அவினாசி நாத்துப் பண்ணையை நான்தான் பராமரிச்சுக்கிட்டு இருக்கேன்.

போன வருஷம் கிட்டாம்பாளையத்துல நடந்த நம்மாழ்வார் பயிற்சியில ரெண்டு பேரும் கலந்துகிட்டோம். அங்கதான் இருமடிப்பாத்தி பத்தி தெரிஞ்சுக்கிட்டோம். அது எங்களுக்கு ரொம்ப பிடிச்சுப் போகவே... அதை செயல்படுத்திப் பாக்கணும்னு ஆசை வந்துச்சு.

ஈஷா நாத்துப் பண்ணையிலயே இருமடிப்பாத்தி அமைச்சு, அதுல காய்கறி விதைகளை விதைச்சோம். நல்ல விளைச்சல் கிடைச்சுது. அதனால, தனியா இடம் பார்த்து, இருமடிப்பாத்தி முறையில காய்கறி விவசாயம் செய்றதுனு முடிவெடுத்தோம்.
மழைபோல் தெளிப்புநீர்ப் பாசனம்!

இருமடிப்பாத்தி அமைக்கறதுக்கு தோதான இடத்தைத் தேடி அலைஞ்சோம். எங்களோட ஆர்வத்தைப் பாத்துட்டு, வாசுதேவனோட சொந்தக்காரர் ஒருத்தர், தன்னோட அரை ஏக்கர் தென்னந்தோப்பையும் அதோட சேர்ந்த கால் ஏக்கர் காலி நிலத்தையும் எங்களுக்குக் குத்தகைக்குக் கொடுத்தார். இயற்கை விவசாய ஆலோசகர் ஒருத்தரை அழைச்சுட்டு வந்து காட்டினப்போ, ‘25 அடி இடைவெளியில தென்னை இருக்கறதால, ஊடுபயிரா காய்கறி விவசாயம் பண்ணலாம்’னு சொன்னார்.

உடனே இருமடிப்பாத்தி போட்டு நிறைய காய்கறி விதைகளைக் கலந்து விதைச்சுட்டோம். எல்லாத்துக்கும் தெளிப்பு நீர்ப்பாசனம்தான். மழை பெய்யுற மாதிரி பயிருக்குத் தண்ணி கிடைக்கறதால பயிர்களோட வளர்ச்சி நல்லா இருக்கு’’ என்று முன்னுரை கொடுத்த உமாசங்கரைத் தொடர்ந்து, இருமடிப்பாத்தி அமைப்பு பற்றி பாடமே நடத்த ஆரம்பித்தார் வாசுதேவன்.

பசுமை விகடன், 25-11-2010

No comments: