Wednesday, August 21, 2013

தென்னை குருத்தழுகல் நோய்

ஒரு வகைப் பூசணத்தால் வரும் குருத்தழுகல் நோய் தமிழ் நாட்டில் உள்ள தென்னை மரங்களைத் தாக்கும் கொடிய நோய் ஆகும். இன்று தமிழக தோப்புகளில்பல பண்ணைகளில் நீர் குறைந்தாலும் காண்டாமிருக வண்டுகள் தாக்குதலாலும், குருத்தழுகல் நோயாலும் அழிந்துவருகின்றன. பல விவ சாயிகள் இந்நோய் தாக்கிய மரங்களைப் பராமரிப்பதை நிறுத்திவிடுகின்றனர்.
இளம் வயது மரங்களை இந்நோய் அதிகம் பாதிக்கிறது. முதலில் இந்தப்பூசணம் தென்னையின் குருத்துப்பகுதியைத் தாக்குகிறது. பூசணத்தின் விதைகள் போன்ற ஸ்போர்கள் குருத்துப்பகுதியில் விழுந்ததும், முளைத்து பூசண இலைகளை வளரச்செய்து குருத்தில் பரவுகிறது. இதன் இழைகளும் விதைகளும் தாக்கப்பட்ட பகுதிகளில் பல மாதங்கள் வரை உயிருடன் இருக்கும்.
இந்த விதைகளும் இழைகளும் பலவித பூச்சிகள் மூலம் தென்னை மரங்களுக்கும் பரவும். தாக்கப்பட்ட மரங்களில் முதலில் ஒருசில இளம் ஓலைகள், அதுவும் நடுப்பகுதியில் உள்ளவை மஞ்சள் நிறம் அடையும். இலைகளின் அடிமட்டைகள் எளிதில் அழுகி வலுவிழக்கும். கையால் பிடித்து இழுத்தால் பிரிந்து வந்துவிடும்.
பின் சுற்றியுள்ள இலைகளுக்கும் நோய் பரவிவிடும். இந்த இலைகளில் சிறு பள்ளங்கள் கொண்ட புள்ளிகள் தோன்றும். குருத்து அழுகியதும் ஒருவித துர்வாசனை தோன்றம். ஒரு வாரத்தில் குருத்தை அழுகச் செய்துவிடும். குருத்து தோன்றும் வளர்ச்சிப்பகுதி அழிக்கப்பட்டு, மரமே வாடிவிடும்.
வெப்பம் குறைந்த காலங்களிலும் மழைக்காலங்களிலும் இந்நோய் அதிகம் தாக்குகிறது. இதனைத் தவிர்க்க எந்த மரத்திலாவது இளம் இலைகள் மஞ்சளாகத் தொடங்கியதுமே குருத்து அழுகல் நோய் வந்துள்ளதா என மரத்தில் ஏறி நின்று பார்க்க வேண்டும். அப்படி ஆரம்பித்திருந்தால் "அழுகிய பகுதியை' நீக்கிவிட்டு நீக்கிய பகுதியில் திமில் போர்ட்டோ பசையைத் தடவ வேண்டும். பாதிக்கப்பட்ட இலை களை பிரித்து எடுத்துவிட்டு, இலைகள் ஒட்டியிருந்த பகுதியிலும் போர்ட்டோ பசையைத் தடவ வேண்டும்.
மற்ற இலைகள் நன்கு நனையும்படி போர்ட்டோ கலவையைத் தெளிக்க வேண்டும். பண்ணையில் உள்ள இதர மரங்களுக்கும் போர்ட்டோ கலவையைத் தெளிக்க வேண்டும். போர்ட்டோ கலவை தயாரிக்க முடியாவிட்டால் காப்பர் ஆக்சி குளோரைடு (புளூ காப்பர் பைடொவான் போன்றவை) மருந்தை ஒரு லிட்டர் நீருக்கு 3 கிராம் மருந்து என்ற வீதத்தில் கலந்து தெளிக்க வேண்டும். இந்த மருந்தை ஈரமாக்கி பச்சையாகவும் போர்ட்டோ கலவைக்குப் பதிலாக குருத்திலும் இலை பிரிந்த இடத்திலும் தடவலாம்.
மரத்தில் ஏறி மருந்தைத் தடவ முடியாத நிலை இருந்தால் வேர் மூலம் மருந்தைச் செலுத்தி ஓரளவு கட்டுப்படுத்தலாம். நோய் ஆரம்ப நிலையில் இருக்கும் மரங்களிலும் நோய் இன்னும் பரவாமல் இருக்கும் மரங்களிலும் இதைப்பயன்படுத்தி நோய் வருமுன் காப்பதையும் செய்யலாம்.
தென்னை மரத்தின் வேர்ப்பகுதியில் மண்ணை வெட்டி, நல்ல ஆரோக்கியமான பழுப்பு நிறமுள்ள பென்சில் தடிமனுள்ள ஒரு வேரைக் கண்டுபிடிக்க வேண்டும். அந்த வேரை கீழ்ப்பகுதியில் வெட்ட வேண்டும். பின் மரத்துடன் இணைந்திருக்கும் வேரை மருந்து கலந்த நீரில் நுழைத்து வைக்க வேண்டும். இதற்கு ஒரு பாலிதீன் பையில் 25 மி.லி. தண்ணீர் எடுத்துக்கொண்டு அதில் 15 கிராம் கார்பன்டாசிம் அல்லது டிரைடிமார் 15 மி.லி. என்ற அளவு நோய் மருந்தில் ஒன்றை கரைத்துக் கொள்ள வேண்டும்.
 

பாலிதீன் பைக்குள் அந்த வேரை நுழைத்து வேரின் வெட்டிய முனை மருந்துக் கலவையின் அடிப்பகுதியை தொடும்படி வைத்து கட்டிவிட வேண்டும். பாலிதீன் பையின் வாய்வழியாக மருந்துக்கலவை கொட்டாமல் இருக்கும்படி இணைத்துக் கட்டிவிடவேண்டும். அதன்பின் அந்த மருந்துப்பையோடு வேரை மண்ணிற்குள் வைத்து மண் போட்டு மூடிவிட வேண்டும். மருந்து வைத்த 24 மணி நேரத்திற்குப் பின் மண்ணைத் தோண்டி அந்த மருந்து முழுவதும் வேரால் உறிஞ்சப்பட்டுவிட்டதா எனப் பார்க்க வேண்டும். 
உறிஞ்சப்படாமல் இருந்தால் வேறு ஒரு நல்ல வேரைத் தேர்ந்தெடுத்து மீண்டும் மருந்துக் கலவையைக் கட்ட வேண்டும். 10 அல்லது 15 நாட்கள் கழித்து மீண்டும் ஒருமுறை வேர் மூலம் மேலே கூறிய மருந்துகளில் ஒன்றை மாற்றி மற்றொன்றைக் கொடுக்க வேண் டும். குருத்தழுகல் நோய் சரிவரக் கட்டுப்படாவிட்டால், விவசாயத்துறை, தோட்டக்கலைத்துறை அல்லது வேளாண்மை பல்கலைக்கழகம் தென்னை வளர்ச்சி வாரிய நிபுணர்களைக் கலந்து, அதற்கேற்றபடி அவர்கள் ஆலோசனைகளைக் கேட்டு அதன்படி நடக்க வேண்டும்.

எம்.ஞானசேகர்,
தொழில் மற்றும் விவசாய ஆலோசகர்.

No comments: