2012 டிசம்பர் 21 : உலகம் அழியப் போகிறதா?
நாம் வசித்துவரும் உலகம் என்னும் பூமி வருகின்ற 2012 டிசம்பர் 21 அன்றுடன் அழிந்துவிடப்போவதாக மதவாதிகளைப் பின்பற்றும் சில புவிவான் (புவியியல் மற்றும் வானியல்) விஞ்ஞானியினர் பத்திரிகைச் செய்திகளின் மூலமாகவும், தொலைக்காட்சிச் செய்திகளின் மூலமாகவும் செய்திகளை வெளியிட்டு உலக மக்கள் அனைவரையும் தற்போது அச்சம் அடையச்செய்து வருகின்றனர்.
இது அவ்வப்போது நடைபெற்றுவரும் அச்சுறுத்தல் நிகழ்வுகளின் தொடர்போல் தொடர்ந்து வருகின்ற செய்தி என்றாலும் 20ஆம் நூற்றாண்டின் பிற்பகுதித் தொடக்கம் 1990, 1994, 1998, 2000, 2004, 2008 ஆண்டுகளின் போதும் அதற்குப் பின்பும் சில புவிவான் விஞ்ஞானியினர் உலகம் அழிந்துவிடும் என்று மக்களை அச்சுறுத்தி வந்ததுடன் அவர்களின் எண்ணங்களில் தோன்றிய அதற்கான விளக்கங்களையும் வெளியிட்டு வந்திருக்கின்றனர்.
அவர்களின் அறிவிப்பினைப் போன்று விபரீதம் ஏதும் நடைபெறவில்லை என்பதை உலக மக்களும் புரிந்து தெளிவுகொண்டிருக்கும் நிலையில்,
மீண்டும் 2012 டிசம்பர் 21இல் உலகம் அழிந்துவிடப் போவதாக சில புவிவான் விஞ்ஞானியினர் மக்களை அச்சுறுத்தி வருகின்றனர். அவர்கள் சொல்லி வரும் விளக்கங்களில் உலக மக்கள் நம்பும்படியான உறுதியான நம்பகத்தன்மை இல்லை என்பதால் அவர்களின் அச்சுறுத்தலுக்குத் துணை சேர்க்கும் விதமாக பண்டைய வரலாற்றுச் சான்றுகளும் உள்ளன என, மாயன் பழங்குடி இனத்தவர்களின் காலண்டர் அன்றுடன் முடிகிறது என்றும், மேலும் உலகில் தோன்றியுள்ள பல மதங்க ளின் நூல்களிலும், உலகத்தின் அழிவு நெருங்கிவிட் டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது என்று சில மேற்கோள்களைக் காட்டியும் உலக மக்களை அச்சுறுத்தி வருகின்றனர்.
இப்படிப்பட்ட புவிவான் விஞ்ஞானியினர் தாங்களே அனைத்தையும் அறிந்திட்ட அறிவு ஜீவிகள் என்று தங்களைத் தாங்களே மிகைப்படுத் திக் கொள்ளும் விதமாக உண்மை நிலைக்குப் புறம்பான செய்திகளை வெளியிடுவது என்பது கண்டிக்கத்தக்கதாகும்.
அவர்கள் கற்றது கைமண் அளவு, கல்லாதது உலக அளவு என்ற நிலையினதாக இருக்க, இயற்கையின் படைப்பான புவியியல் மற்றும் வானியல் அமைப்பில் இதுநாள் வரை புவிவான் விஞ்ஞானியினர் அறிந்திடாத, அதாவது அவர்களால் கண்டறியப்படாத மிக முக்கிய நிகழ்வுகள் என்னென்ன என்பனவற்றை முதலில் காண்போம்.
1. வான் பொருட்களான சூரியன், சந்திரன், பூமி போன்றவற்றின் இயக்கங்களுக்கு அவைகளின் ஈர்ப்பு விசைகளே காரணம் என்பது சர் அய்சக் நியூட்டனின் ஈர்ப்புவிசை கண்டுபிடிப்பிற்குப் பின்பே உலக மக்கள் அனைவரும் அறிந்திடப் பெற்றனர் என்பதை நாம் அறிவோம். ஆனால், நியூட்டனின் காலம் தொட்டு இதுநாள் வரை ஈர்ப்பு விசையின் மூலம் அதாவது எங்கிருந்து எப்படித் தோன்றுகிறது? என புவிவான் விஞ்ஞானியினரால் கண்டறியப்படவில்லை.
2. ஈர்ப்பு விசையின் இயக்கத்தில் அண்டம் பிரபஞ்சம் என்று சொல்லப்படும் யுனிவர்ஸின் (Universe) மய்யத்திற்கும் நூக்லியஸ் (Nucleus) சூரியன் போன்ற நட்சத்திரங்கள் பூமி போன்ற கோள்கள் சந்திரன் போன்ற துணைக் கோள்களுக்கும் உள்ள பிடிப்பு என்னும் தொடர்புகளுடன் அண்டம் முழுவதும் உள்ள அனைத்து வான் பொருட்களின் ஒட்டுமொத்த சுற்றுச் சுழற்சிக்கான காரணத்தை முறையாகத் தொடர்புப்படுத்தும் தி கிராண்ட் யூனிஃபைடு தியரி (The Grand Unified Theory) அதாவது ஈர்ப்பு விசை என்னும் காந்தவிசைத் தொடர்புகளை முறையாகத் தொடர்புப்படுத்து வதாகும். இதுவும் புவி வான் விஞ்ஞானியினரால் இதுநாள் வரை கண்டறியப்படவில்லை. அதாவது முழுமைப்படுத்தப்படவில்லை.
3. சூரியக் குடும்பத்துக் கோள்களின் சுழற்சித் தளம் என்பது எலிப்ஸ் (Ellipse) என்ற முட்டை வடிவ அமைப்பினைக் கொண்டது என்றும் கோள்கள் அனைத்தும் முட்டை வடிவப் பாதையில் சுற்றி வந்தாலும் சமன்பாடு என்ற நிலையைத்தானே அடைகின்றன என்றே புவிவான் விஞ்ஞானியினர் வரையறை செய்திருக் கின்றனர். இதில் உயிரற்ற சடப்பொருட்களான கோள்கள் தானே சமன்பாடு அடைகின்றன என்பது ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லையே! இதற்கான தீர்வும் இதுநாள் வரை கண்டறியப்படவில்லை.
4. பூமியானது பருவ நிலைகளின் மாற்றத்தின்போது ஏற்ற மற்றும் வற்ற என்ற இருவித விசைகளை வெளியிடுகின்றன என்றும், குறிப்பாக மழைக்காலத்தின்போது ஒருவித விசையும், பனிக்காலத்தின்போது ஒருவித விசையும், கோடைக் காலத்தின்போது ஒருவித விசையும் என பருவ காலத்திற்கு ஏற்ற விசைகளைப் பரப்புவதாக புவிவான் விஞ்ஞானியினர் வரையறுத்திருக்கின்றனர்.
உயிரற்ற சடப்பொருளான பூமியானது தன் பருவநிலை மாற்றங்களின் காலம் அறிந்து செயல்படுகிறது என்பதும் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இல்லையே! வான் பொருட்களின் இயக்கங்களுக்கு ஈர்ப்புவிசை என்ற ஒன்றைத் தவிர வேறு விசை என்பது இல்லாதபோது, ஏற்ற, வற்ற அதாவது தேவைப்படும்போது கூட்டியும் குறைத்தும் விசையைப் பரப்புகிறது என்பதும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லையே! அதற்கான சரியான காரணம் கண்டறிந்து இன்றளவும் விளக்கப்படவில்லை.
5. பொருள் ஒன்று தற்சுழற்சி சுற்று சுற்றிட அதற்கு அச்சு என்ற ஒன்று தேவைப்படுகிறது. ஆனால் வான் பொருட்களான நட்சத்திரங்களும், கோள்களும் அச்சு என்ற ஒன்று இல்லாது அந்தரத்தில் மிதந்தபடி தற்சுழற்றி பெற்று இயங்குகின்றபோது, அவைகள் தற்சுழற்சி பெறுவதும், அந்தரத்தில் மிதப்பதும் எப்படி என்பதற்கான காரணங்கள் இதுநாள் வரை கண்டறிந்து விளக்கப்படவில்லை.
6. கண்ணிற்கும் தொலைநோக்கிகளுக்கும் புலப்படாத ஒரு மர்ம சக்தி, நமது சூரிய மண்டலத்திற்கு அப்பால் அண்ட வெளியிலிருந்து வந்து பூமியின் இயக்கத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டிருக்கிறது. மனிதர்களுக்கும் இதர உயிர்களுக்கும் நன்மை தரக்கூடிய பலதரப்பட்ட அடிப்படைத் துகள்களுடன் காமா கதிர்வீச்சைக் கொண்டதாகவும் இருக்கிறது என்று வரையறுத்திருக்கும் புவிவான் விஞ்ஞானியினர் அக்கதிர்வீச்சு எங்கிருந்து? எப்படி? உருவாகி வருகின்றது என்பதற்கான சரியான விளக்கங்களும் கொடுக்கவில்லை.
7. இவ்வுலகில் தோன்றியுள்ள எல்லா வகையான உயிருள்ள, உயிரற்ற திண்ம, திரவ, வளிம நிலைகளில் இருக்கும் நிறமுள்ள நிறமற்ற பொருட்களின் தோற்றத்திற்கும் கட்டமைப்பிற்கும் அடிப்படைக் காரணம் என்று சொல்லப்படும் அணு பற்றிய வரையறையில்,
அணுவின் மய்யத்தில் நேர் மின்றேற்றம் கொண்ட புரோட்டான் இருக்க, அப்புரோட்டானுடன் இணைந்த நியூட்ரானையும் சேர்த்து எதிர் மின்னோட்டம் கொண்ட எலக்ட்ரான் சுற்றிவருகிறது என்றே விஞ்ஞானியினர் வரையறுத்திருக்கின்றனர் என்பதெல்லாம் சரியே. ஆனால்,
அதில் எலக்ட்ரான் என்பது எங்கிருந்து தோன்றி வருகிறது என்பதைப் பற்றியும் ஈர்ப்பு விசைக்கான அடிப்படைக் காரணம் எது? என்பதைப் பற்றியும் புவிவான் விஞ்ஞானியினரால் விளக்கங்கள் கொடுக்கப்படவில்லை.
ஆக, மேற்கண்ட 7 மிக முக்கிய தீர்வுகளுக்கு புவிவான் விஞ்ஞானியினரால் விடை கண்டறியப்படாத நிலையில் வருகின்ற 2012 டிசம்பர் 21இல் உலகம் அழிந்துவிடப் போவதைக் கண்டுபிடித்துவிட்டதாக அறிவிப்புகள் செய்து வருவது நகைப்பிற்கு உரியதாகும். எனினும் அப்புவிவான் விஞ்ஞானியினர் எடுத்துரைக்கும் விளக்கங்களையும் அதற்கான மறுப்பின் தெளிவையும் அடுத்தடுத்துக் காண்போம்.
எடுத்துக்காட்டு விளக்கங்களும் மறுப்புகளும்:
1. மாயன் காலண்டரின் முடிவு
காலம் என்ற நேரத்தை நொடிகளாகவும் நிமிடங்களாகவும் பிரித்து நாட்களையும் வருடங்களையும தொகுத்து உலகின் முதல் காலண்டர் என்ற ஒன்றை உருவாக்கியவர்கள் மாயன் பழங்குடி இனத்தவர் ஆவர். பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே எழுதி வைக்கப்பட்டுள்ள மாயன் காலண்டரின் காலங்கள் வரும் 2012 டிசம்பர் 21 முடிவடைகின்றது. எனவே அன்றுடன் பூமி அழிந்துவிடும் என அச்சுறுத்தி வருகின்றனர்.
தெளிவு: கோடானுகோடி ஆண்டுகளாய் சூரியனைச் சுற்றிவரும் பூமி வானியல் மற்றும் புவியியல் பாதிப்புகளால் அவ்வப்போது மாற்றங்கள் அடைந்து வந்திருப்பினும் சூரியனின் வாழ்நாள் முடியும்வரை பூமியும் நிலைத்திருக்கும் என நாம் நம்பலாம்.
தொலைநோக்கிகள் பல வகை கண்டுபிடிக்கப்பட்ட பின்னரும் இதுநாள் வரை எந்த ஒரு நட்சத்திரமும் எரிந்து முடிந்து ஒளியிழந்துவிட்டதாக பதிவு செய்த அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை. குறிப்பாக சமீபத்திய பதிவுகள் எதுவும் இல்லை என்பதால் நாம் அச்சம் அடைந்திடத் தேவையில்லை.
மேலும், மாயன் பழங்குடி இனத்தவரின் காலத்தின் கணக்கீடு பூமியை மய்யமாகக் கொண்டு சூரியன் மற்றும் இதர கோள்கள் சுற்றிவருகின்ற பொய்த் தோற்ற அமைப்பினை அடிப்படையாகக் கொண்டதாகவே அமைந்திருக்கும் என்பதால், அவர்களின் கணக்கு நிச்சயம் தவறாகவே இருக்கும். அதனால் இந்த அச்சுறுத்தலைத் தவிர்த்திடலாம்.
2. சூரியப் புயல்களின் தாக்கம்:
சூரியனிடமிருந்து வெளியேறிவரும் காந்தப் புலன்களுடன் கூடிய வெப்ப ஆற்றல்கள் புயல்களாக அன்றைய தினத்தில் பூமியைத் தாக்கும். அதன் கடுமையால் உலகைச் சுற்றிவரும் செயற்கைக் கோள்களின் செயல்பாடுகள் செயலிழந்து போவதுடன் உலகில் உள்ள அனைத்து மின்சக்தி கேந்திரங்கள் (Power Grids) செயலிழந்து போகும். அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுவதுடன் பருவநிலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டு உலகம் முழுவதும் உறைநிலைக்குப் போய் உயிர்களின் அழிவிற்கு வழிவகுக்கும் என அச்சுறுத்தியிருக்கின்றனர்.
தெளிவு: உருவத்தில் பூமியைவிட பன்மடங்கு பெரியதாய் இருக்கும் சூரியனின் ஈர்ப்புவிசை பூமியைப் போன்று 28 மடங்கே ஆகும். மேலும், தன்னைத்தானே 25லு மணி நேரத்தில் கிழக்கிலிருந்து மேற்காக தற்சுழற்சி பெற்றிடும் சூரியனின் சுழற்சி வேகத்தில் சூரியனிலிருந்து புறப்படும் எந்தக் காந்தப் புயல்களும் நேரே 90 டிகிரியில் வந்து பூமியைத் தாக்கப்போவதில்லை.
அப்படி 90 டிகிரியில் (ஓர் இடத்திலிருந்து புறப்பட்ட காந்தப்புயலானது சூரியனின் தற்சுழற்றி வேகத்தின் விளைவால் 120 டிகிரி கோணத்தையே சென்றடைந்திடும் என்பதால், காந்தப்புயலின் வலிமை என்பது குறைந்து மிகப் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது. ஏனெனில், சூரியனை மய்யமாகக் கொண்டு சுற்றிவரும் அதன் கோள்களும் துணைக்கோள்களும் கிடைமட்டம் (படுக்கை வாட்டில்) என்று சொல்லப்படும் 180 டிகிரியில் சுற்றி வரவில்லை.
அவை கிடைமட்டத்திற்கு சற்றே சாய்வான அதாவது தென்புறத்தில் உயர்வு, வடபுறத்தில் தாழ்வு என்ற நிலையில்தான் சுற்றுச்சுழற்சி பெறுகின்றன என்பதற்கான எடுத்துக்காட்டு விளக்கங்களைக் காண்போம்.
பூமிக்கோளின் காந்த துருவங்கள் பூமி உருண்டையின் நேர் வடக்கு தெற்கில் அமைந்திடவில்லை. அவை பூமியின் சாய்வுக்கோணமான 23.5 டிகிரிக்கு நேரே அமைந்திடாமல், அதன் வடபுறத்தில் சற்றே மேற்காகவும், அதன் தென்புறத்தில் சற்று கிழக்காகவும், 17 டிகிரி இடைவெளி என்ற அளவில் பூமிக்கோளின் சுற்றுச்சுழற்சித் தளத்திற்கு நேர்க்குத்தாக அமைந்திருப்பதும் கண்டறியப்பட்டு புவியியல் விஞ்ஞானியினரால் வரையறை செய்யப்பட்டுள்ளது.
பூமியின் நிலையினைப் போன்றே சுக்கிரன் மற்றும் புதன் கோள்களின் காந்த துருவங்கள், அந்தந்தக் கோள்களின் நேர் வடக்கு தெற்கில் அமைந்திடாமல் பூமியின் சாய்வுக் கோணத்தைவிட சற்றே குறைவான இடைவெளியில் அதனதன் சுற்றுச்சுழற்சித் தளத்திற்கு நேர்க்குத்தாக அமைந்திருக்கும்.
அடுத்து சூரியனுக்கும் பூமிக்கும் வெளிப்புறக் கோள்களான செவ்வாய், வியாழன், சனி மற்றும் இதர கோள்களின் காந்த துருவங்கள் அதனதன் நேர் வடக்கு தெற்கில் அமைந்திடாமல், அதிக டிகிரி இடைவெளியில் அதனதன் அதிகத் தொலைவிலான சுற்றுச்சுழற்சித் தளத்திற்கு ஏற்ப நேர்க்குத்தாக அமைந்திருப்பதைக் கொண்டு அறிந்திடப் பெறலாம் என்பதை எந்தப் புவிவான் விஞ்ஞானியினரும் மறுத்திட முடியாது.
இதன் அடிப்படையில் 23.5 டிகிரி சாய்வுக் கோணத்திலான சூரிய மண்டலக் கோள்களின் சுற்றுச்சுழற்சித் தளத்தில் வருகின்ற 2012ஆம் ஆண்டு டிசம்பர் 21அன்று பூமிக்கோளின் இருப்பிட நிலையைக் கவனிக்குமிடத்து, மய்யத்தில் நின்றிருக்கும் சூரியனின் நிலையை 180 டிகிரி கிடைமட்ட அளவினதாகக் கொண்டால், பூமியானது சூரியனுக்கு உயரே சாய்வான தளத்தில் அதன் இருப்பிட எல்லையில் நின்றிருக்கும் என்பதால், சூரியனின் வெப்ப ஆற்றலுடன் கூடிய காந்தப் புயல்கள் பூமியில் பேரழிவை ஏற்படுத்த முடியாது.
மேலும், கூடுதல் விவரமாக ஒவ்வொரு டிசம்பர் 21ஆம் தேதியின்போதும் பூமியின் வடக்குப் பகுதிகளில் உள்ள அனைத்து நாடுகளில் அப்போது கடும் மழை மற்றும் பனிக்காலமாக இருந்திடும் நிலையென்பதால், வளி மண்டலத்தில் நிலவிடும் அதிகப்படியான ஈரப்பதத்தால் சூரியப் புயல்களின் வெப்பம் குறைக்கப்படும் என்பதால், பெரிய அளவிலான பேரழிவை ஏற்படுத்த முடியாது. எனவே, அச்சம் அடைந்திடத் தேவையில்லை.
3. மதவாதிகளின் நம்பிக்கைகள்:
கிறித்துவர்களின் புனித நூலான பைபிளை ஆராய்ந்த மத ஆராய்ச்சியாளர்கள், கடவுளுக்கும் சைத்தானுக்கும் நடக்கும் இறுதிப்போர் (Armageddon) அன்றைய தினத்தில் நடைபெறும் என்கிறார்கள். இதே கருத்தை, பவுத்தர்களின் புனித நூலான அய்.சிங்.லும் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், மேலும் இந்து மதத்தின் புனித நூல்களும் கலிகாலத்தின் உச்சம் நெருங்கிவிட்டதாகவும், உலகம் அழிவை நெருங்கிவிட்டதாக மக்களை அச்சுறுத்தி வருகின்றனர்.
தெளிவு: கிறித்துவ மதம் என்பது ஆங்கிலேயர் வாழ் பகுதியிலும், இஸ்லாம் மதம் என்பது அரேபியர் வாழ் பகுதியிலும், இந்து மதமும் பவுத்த மதமும் இந்தியாவில் தோன்றி பரவி வந்திருப்பினும் அந்தந்த மத நூல்கள் அந்தந்த இறைவனால் அருளப்பட்டதாகச் சொல்லப்பட்டிருக்க, வான் பொருட்களான சூரியன், சந்திரன், பூமியைப் படைத்து, பூமியில் மட்டும் பல உயிர்கள் உயிர் வாழ்ந்திடத்தக்க வழி வகைகளைப் படைத்து, ஆறறிவு பெற்ற மனிதர்களைப் படைத்து அனைத்தையும் இயக்கிக் காத்துவரும் தெய்வங்களில் எந்த தெய்வமும் அவைகளின் சரியான இயக்கங்கள் பற்றிய குறிப்புகளைக் கொடுக்கவில்லை.
குறிப்பாக, மக்களின் வாழ்க்கைக்குத் தேவையான நீதிநெறிகளையும் நற்போதனைகளுடன் மனிதர்களால் எளிதில் உணர்ந்திட முடியாத ஆன்மா என்றால் என்ன? அது என்னில் ஓர் அங்கமே என மொழிந்திருப்பதைப் போல் சூரியனை மய்யமாகக் கொண்டு பூமிதான் சுற்றி வருகிறது என்பதைப் பற்றியோ, பூமியின் தற்சுழற்சித் திசையான மேற்கிலிருந்து கிழக்கான சுழற்சியின் கவர்ச்சி விசையால், சந்திரன் இடப்பக்கச் சுற்றாக எதிர்மறையாக பூமியைச் சுற்றிவரும் உண்மை நிலைகள் பற்றிய குறிப்புகளோடு கொடுக்கவில்லை என்பதால் இந்த அச்சுறுத்தலையும் தவிர்த்திடலாம்.
4. மஞ்சள் கல் எரிமலைகள் வெடிப்பு
மஞ்சள் கல் (Yellow Stone) எரிமலைகள் வெடிக்கும்போது எரியும் நெருப்புக் குழம்புகளுடன் வான் வெளியில் வீசியடிக்கப்படும் சாம்பலின் அளவு பூமி முழுவதும் சூழ்ந்துநின்று சுமார் 15,000 ஆண்டுகள் சூரியனை மறைத்திடும். அதனால் பூமியானது வெப்பத்தை இழந்து உறை நிலைக்குப்போய் அழிந்துவிடும் என்றும் ஒவ்வொரு 6,50,000 ஆண்டுகளுக்கு ஒருமுறை வெடிக்கும் திறன் கொண்டது. மீண்டும் வெடிக்கப்போவது அந்த 2012 டிசம்பர் 21 அன்றுதான் என புவியியல் விஞ்ஞானியினர் அச்சுறுத்தி வருகின்றனர்.
தெளிவு: தற்போது உலகில் உள்ள நாடுகள் அனைத்தும் எரிபொருளான கச்சா எண்ணெயின் தேவைகளை உணர்ந்து அங்கங்கே பூமியில் துளைகளை இட்டு உறிஞ்சி எடுத்து வருகின்றன. உலக அளவில் எரிபொருட்களின் பற்றாக்குறை தொடர்ந்திருக்கும் நிலையில் தற்போது அங்கங்கே வெடித்துவரும் எரிமலைகளின் சீற்றங்கள் குறைந்த அளவிலான பாதிப்புகளையே ஏற்படுத்தியிருக்கும் நிலையினைக் கவனிக்குமிடத்து மஞ்சள் கல் எரிமலைகள் வெடித்து அதனால் வெளியேறும் சாம்பல்கள் பூமி முழுவதும் சூழ்ந்துநின்று 15,000 ஆண்டுகள் சூரியனை மறைத்திடும் என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லையே?
ஆனால், இயற்கையின் நிகழ்வாக அச்சாம்பல்கள் வெகுவிரையில் பூமியில் படிந்து பாதிப்புகள் நீங்கிவிடும் என்பதற்கான விளக்கங்களைக் காண்போம்.
பூமியின் மீதுள்ள பொருட்களைக் கவர்ந்திழுப்பது என்பது பூமியின் ஈர்ப்பு விசையினைக் குறிக்க. பூமிக்கு வெளிப்புறத்தில் வான்வெளியில் சுழன்றுவரும் செயற்கைக் கோள்களையும் துணைக்கோளான சந்திரனையும் கவர்ந்திழுப்பது என்பது பூமியின் ஈர்ப்பு விசையால் ஏற்படும் கவர்ச்சி விசையினைக் குறிக்கும்.
காந்தத்தால் கவர்ந்திழுக்க முடியாத ஒரு பிளாஸ்டிக் பந்தை வானத்தில் வீசி எறிந்தால், அது பூமியில் வந்து விழுவதற்கு பூமியின் கவர்ச்சி விசையே காரணம் என்று புவிவான் விஞ்ஞானியினர் தவறாக வரையறுத்து எழுதி வைத்திட, அந்தத் தவறான வரையறையினைப் படித்து வந்த இன்றைய புவிவான் விஞ்ஞானியினர் அவர்களின் மனதினில் தோன்றியபடி செய்திகள் வெளியிடுவது என்பது தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று.
பிளாஸ்டிக் பந்து மற்றும் இறகினை வானத்தில் வீசியெறிந்திடும்போது பிளாஸ்டிக் பந்தானது அதன் எடையின் காரணமாக காற்றை விலக்கிக் கொண்டு முதலில் பூமியில் விழுவதும், இறகானது குறைந்த அளவிலான எடையின் காரணமாக காற்றால் தாங்கப்பட்டு மெதுவாக கீழே விழுகின்ற செயலுக்கு அவற்றின் எடைகளின் வித்தியாசமே காரணம் ஆகும்.
காற்று இல்லாத இடத்தில் சந்திரனில் நின்று கொண்டு நீல் ஆம்ஸ்ட்ராங் செய்துகாட்டிய செய்முறை விளக்கம் ஒன்றினை இங்கே நினைவுகூர்வோம். இரும்புத்துண்டு, இறகு இரண்டையும் ஒரே நேரத்தில் கீழே விழுந்திடும்படி செய்திட்டபோது அவை இரண்டும் ஒரே நேரத்தில் தரையில் வீழ்ந்ததைக் கொண்டு அவற்றின் எடைகளே அதற்குக் காரணம் என்பதை அறிந்திடப் பெறலாம். கூடுதல் விவரமாக, பூமியின் ஈர்ப்பு விசை அளவில் 1/6 பங்கு அளவிலான ஈர்ப்பு விசை சந்திரனில் உண்டு என்பதையும் நினைவிற்கொள்க!
ஆனால் பூமியைப் பொறுத்தமட்டில் வானத்தில் வீசி எறியப்படும் பொருட்கள் கீழே வந்து விழுவதற்கு பூமியின் மீதுள்ள வளிமண்டலத்தின் அழுத்தம் என்பது ஒரு கூடுதல் காரணம் என்பதையும் இங்கு நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இதன்படி, அதாவது வளிமண்டலத்தின் அழுத்தம் இருப்பதைக் கருத்தில் கொண்டு கவனிக்குமிடத்து, மஞ்சள் கல் எரிமலைகள் வெடிப்பால் பூமியின் மீது பரப்பி விடப்படும் சாம்பல்கள், காற்றில் உள்ள ஈரப்பதத்தால், குளிர்ந்து, ஈரத்தன்மைக்கு உள்ளாகும் ஒவ்வொரு சாம்பல் துகள்களும் நுண்ணிய எடைக்கு உள்ளாகி, ஒன்றுடன் ஒன்று படிந்து எடை என்பது ஏற ஏற சாம்பலின் படிமங்கள் விரைந்து பூமியில் படிந்திடத் தொடங்கி குறைந்தது 15 நாட்களில் வானம் தெளிந்து பழைய நிலைக்குத் திரும்பிவிடும் என்பதால் மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை.
5. பூமியின் மீது பயங்கர விபத்து
பெர்க்லி பல்கலைக்கழகத்து புவிவான் விஞ்ஞானியினரின் கணித ஆய்வுகளின்படி பூமிக்குப் பெரிய அளவிலான பயங்கர விபத்து நிகழும் காலம் நெருங்கிவிட்டது என்று அச்சுறுத்தியிருக்கின்றனர்.
தெளிவு: பெர்க்லி பல்கலைக்கழகத்து விஞ்ஞானிகளின் விளக்கங்கள் ஏதும் தரப்படாத யூகங்கள் மாயன் பழங்குடி இனத்து தடைப்பட்ட காலண்டர் கணக்கினைப் போன்று தவிர்க்கப்பட வேண்டிய ஒன்றே!
6. துருவ காந்த சக்திகளின் இடமாற்றம்:
பூமியானது வடக்கு, தெற்கு என இரண்டு காந்த துருவங்களைக் கொண்டது. பூமியைச் சுற்றிலும் சூழ்ந்துள்ள காந்தப் புலன்களே, சூரிய ஒளியின் ஊடாக பூமிக்கு வந்திடும் புற ஊதாக் கதிர்களைத் தடுத்து அனைத்து உயிர்களையும் வாழவைத்துக் கொண்டிருக்கின்றது. பூமியானது தன் துருவங்களை 75,00,000 ஆண்டுகளுக்கு ஒருமுறை இடமாற்றம் செய்துகொள்ளும் தன்மை உடையது. மேலும், அந்தக்காலம் முடிந்து 30,000 ஆண்டுகள் தள்ளிப் போய்விட்டது. தற்போது பூமியின் துருவ இருப்பிட எல்லைகள் 20 கி.மீ. முதல் 30 கி.மீ. வரை நகர்ந்து போகின்றன என்றும்,
இப்படி துருவங்கள் இடம் மாறிடும்போது ஏற்படும் காந்தப் புலன்களின் சமச்சீர் இன்மையால் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்படுவதுடன், சூரியனின் அதிக அளவிலான புற ஊதாக் கதிர்கள் பூமியைத் தாக்கி உலகில் உள்ள அனைத்துவகை உயிரிகளையும், பொருட்களையும் எரித்து அழித்துவிடும். அப்படிப்பட்ட நிகழ்வு நடைபெறப் போவதும் அந்த நாளில்தான் என அச்சுறுத்தி வருகின்றனர்.
தெளிவு: பூமியின் வட துருவம் தென் துருவமாகவும், தென் துருவம் வட துருவமாகவும் தன்னைத் தானே இடம் மாற்றித் திரும்பிட வாய்ப்பே இல்லை. தி கிராண்டு யூனிஃபைடு தியரியைப் பூர்த்தி செய்திடாத புவிவான் விஞ்ஞானியினரின் தவறான அறிக்கைக்கு இதுவே சான்றாகும்.
அப்படி பூமியானது தன் துருவங்களை மாற்றித் திரும்பினால் நம் யுனிவர்ஸின் கட்டமைப்புடன் அதன் இயக்கங்கள் நிலைகுலைந்து, யுனிவர்ஸின் ஒட்டுமொத்த அழிவாகவே அது இருக்கமுடியும். தற்போது அப்படி நடைபெற வாய்ப்பில்லை.
அடுத்து, உயிரற்ற சடப்பொருளான பூமி 75,00,000 ஆண்டுகளுக்கு ஒருமுறை தன் துருவங்களைத் தானே இடம் மாற்றிக்கொள்ளும் என்பதும் ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இல்லையே. இதில் 30,000 ஆண்டுகள் கடந்துவிட்டதாம். இதுவும், தி கிராண்ட் யூனிஃபைடு தியரிக்குப் பொருந்தாத வரையறையாக இருப்பதால், தவறான யூகங்களை நாம் நம்ப வேண்டாம்.
மேலும் பூமியின் துருவ எல்லைகள் ஓர் இடத்திலிருந்து 20 கி.மீ. முதல் 30 கி.மீ. வரை நகர்ந்து போகின்றன என குறிப்பிட்டிருக்கின்றனர். இதுபோல் துருவங்கள் சற்றே நகர்ந்து செல்கின்றன என்பது உண்மையே! ஆனால், அப்படி நகர்ந்து செல்லும் துருவ எல்லைகள் மீண்டும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் பழைய நிலைகளை அடைந்து கோள்கள் சமன்பாடு அடைகின்றன என்ற நிகழ்வைக் கண்டறிந்திடாது விட்டுவிட்டனர். இயற்கையின் நிகழ்வாக காலம் காலமாய் நடைபெற்றுவரும் அந்நிகழ்வுகளைக் கண்டு நாம் அச்சப்படத் தேவையில்லை.
இறுதியாக புவிவான் விஞ்ஞானியினர் உலக மக்களுக்கு விடுத்திருக்கும் அச்சுறுத்தலில் அவர்கள் கவனிக்கத் தவறிய ஒரு முக்கிய அச்சுறுத்தல் நிகழ்வு என்ன என்பதைக் காண்க.
பூமியானது தன் துருவங்களைத் தானே இடம் மாற்றிக்கொள்ளும். அப்போது காந்த துருவங்களின் சமச்சீர் இன்மையால் மக்களின் இயல்புநிலை பாதிக்கப்படுவதுடன், சூரியனின் புற ஊதாக் கதிர்கள் தாக்கி பூமியில் உள்ள அனைத்து உயிரிகளும், பொருட்களும் எரிந்து அழிந்துவிடும் என்பதெல்லாம் சரி. ஆனால்,
பூமியின் வட துருவம் தென்துருவமாகவும், தென் துருவம் வட துருவமாகவும் திரும்பிடும்போது பெரிய அளவிலான பூகம்பத்துடன் பூமியின் நான்கு பங்கில் மூன்று பங்கு அளவு கொண்ட கடல்நீர் பொங்கி பெரிய அளவிலான சுனாமி புரண்டு அடித்து அனைத்தையும் முதலில் அழித்திடாதோ! பின்னர்,
என்ன அறிக்கை வெளியிடுகின்றனர். எந்தவித அச்சுறுத்தலும் முழுமையான விளக்கங்களுடன் சரியான காரணங்களுடனும் கொடுக்கப்படவில்லையே! மேலும், குறிப்பாக புவிவான் விஞ்ஞானியினரால் இன்றளவும் கண்டறியப்படாத, முதல் கொடுக்கப்பட்டுள்ள 7 முக்கிய விவரங்களைக் கண்டறிந்து விளக்கிட முடியாத விஞ்ஞானியினரின் கூற்றை இனியும் எப்படி நம்ப முடியும்.
ஆக, நடப்பு 21ஆம் நூற்றாண்டையும் தாண்டி நம் பூமியானது நூற்றாண்டில் அடுத்த செஞ்சுரியும் அடித்திடும் என நாம் நம்புவோம்.
நன்றி- விடுதலை நாளிதழ்
No comments:
Post a Comment