Monday, October 29, 2012

பச்சைத் தங்கத்தில் பொம்மை செய்வோம்!

பச்சைத் தங்கத்தில் பொம்மை செய்வோம்!

''மனிதனை நம்புறதைவிட மண்ணையும் மரத்தையும் நம்பலாம். இன்றைய சூழ்நிலையில் நெல், தென்னை விவசாயத்தைவிட மரம் வளர்ப்புலதான் கணிசமான லாபம். அதற்கு நானே சாட்சி'' என தன்னைச் சந்திப்பவர்களிடம் எல்லாம் பூரிப்போடு சொல்கிறார் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள நெடுவாசல் கிராமத்தில் வசிக்கும் ராமநாதன். வானம் பார்த்த பூமியில் மரத்தை வளர்த்து, மழையை எதிர்பார்க்கிறேன். நான் மண்ணுக்குச் செய்றேன். மண் எனக்கு செய்யுது. பொது நலத்திலும் நான் நிறைவான வருமானத்தோடதான் வாழறேன்

அவரது வீட்டின் முகப்பில் பசுமைத் தோட்டம்  எனப் பெயரிடப்பட்டு இருந்தது. உள்ளே சென்றதும் ஏதோ காட்டுக்குள் நுழைந்த உணர்வு. பலவிதமான மரங்கள் ஒன்றை ஒன்று தழுவி கலப்படம் இல்லாத காற்றை வீசிக்கொண்டு இருந்தன.

''இந்த மரங்களாலதான் பிள்ளைகளோட திருமணத்தையே செஞ்சு முடிச்சேன். ஒரு ரூபாய் கடன் வாங்கலை. சொத்தில் ஒரு பிடி மண்ணை நான் விற்கலை. எல்லாம் மரம்தந்த வரம். மரம் வளர்ப்புல பலருக்கு விருப்பம் இல்லாம இருக்கக் காரணமே, உடனடியான பலன் எதுவும் கிடையாது என்கிற எண்ணம்தான். மற்ற விவசாயத்துல செலவுகள்போக கிடைக்கிற லாபத்தைவிட மரங்களால பலமடங்கு அதிகம். என்னை பார்த்து நிறையப்பேர் மரம் வளர்ப்புல இறங்கி இருக்காங்க. நானும் அவங்களுக்கு என்னால் முடிஞ்ச உதவிகள் செய்றேன்'' என்றார்.
தோட்டத்தைச் சுற்றிப்பார்க்கத் தொடங்கினேன். ஆங்காங்கே பறவைகளுக்காக சிறிய தண்ணீ ர் தொட்டிகள் உள்ளன. அவைகள் மூலமாக, பல்வேறு மர விதைகள் கிடைத்தனவாம். '' இங்கே 120 வகையான மரங்கள் இருக்கின்றன. நம் மண்ணுக்கான மரங்கள் பலவற்றை நாம் புறக்கணிச்சுட்டோம். அதனால், நம் பழமையான மரங்களையும் தேடிக்கிட்டு இருக்கேன்'' என்றவர் ஒவ்வொரு மரத்தைப்பற்றியும் சொல்லி சிலிர்க்க ஆரம்பித்தார்.
''இந்த மரத்தின் பெயர் கருங்காலி. பச்சைத் தங்கம் என மர ஆர்வலர்கள் அழைப்பாங்க. இந்த மரத்தில்தான் குழந்தைகளுக்கு மரப்பாச்சி பொம்மைகள் செய்வாங்க. சாதாரணமாக, விளையாட்டுப் பொருட்களை புள்ளைங்க வாயில்வைக்கும். ஆனா,இந்த மரம், நோய் நீக்கி. அதனால், எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது.
இதோ... இந்த ஈர பலாமரக் காய்களைச் சமைச்சா, அசைவ கறிபோலவே இருக்கும். இதன் பெயர் பாம்பு கொல்லி. இந்த மரம் இங்கே கிடைக்காது. மலைப் பிரதேசங்கள்லதான் கிடைக்கும். இது இருக்கும் இடத்தைச்சுத்தி 100 அடி சுற்றளவில் எந்தப் பாம்புகளும் வராது. இரவு நேரத்துலகூட நான் பயம் இல்லாம தோட்டத்தைச் சுத்திவர இந்த மரம்தான் காரணம்.
குமிழ் மரம் ஆஸ்திரேலிய மரம். ஏழு ஆண்டுகள்ல வளர்ச்சி அடைஞ்சுடும். செயற்கை கை, கால்களை இதுலதான் செய்வாங்க. எடை குறைவானது. செஞ்சந்தன மரம் ஜப்பான் நாட்டுல பாதுகாப்புக்காகப் பயன்படுத்துறாங்க. இந்த மரத்தை ஊடுருவி அலைகற்றைகள் வர முடியாது. மகோகனி மரத்துலதான் வெள்ளை மாளிகை கட்டப்பட்டது. கொக்கு மந்தாரையும் அந்தி மந்தாரையும் பில்லி சூன்யம் நெருங்கவிடாம செய்யும்'' என விவரித்துக்கொண்டே சுற்றிக்காட்டினார். இங்கே வருடந்தோறும் வனத் துறையில் இருந்து மாணவர்கள் பயிற்சிக்காக வருவார்களாம்.
''எனக்கு பணத் தேவைகள் வரும்போது மரத்தை விற்றுவிடுவேன். அந்த இடத்தில் மரக் கன்று ஒன்றை உடனே நட்டுவைத்து விடுவேன். யாராவது மரம் வளர்க்க ஆசைப்பட்டால் சொல்லுங்கள். நான் அவர்களுக்கு உதவத் தயாராக இருக்கிறேன்'' என்ற ராமநாதன்

1 comment:

Anonymous said...

I am planing to plant some trees in our garden, so could you please help me out?