Friday, October 19, 2012

கம்பைப் பற்றிக் கொஞ்சம் பேசலாமா!

கம்பைப் பற்றிக் கொஞ்சம் பேசலாமா!


லகத்தையே தொழில்நுட்பம்தான் ஆள் கிறது. ஆனால், நீங்களோ இன்னமும் இயற்கை விவசாயம், பாரம்பரியச் சாப்பாடு என்று தொழில்நுட்ப வளர்ச்சிக்கு விரோத மாகவே எழுதுகிறீர்களே டாக்டர்'' என்றார் போன வாரம் தொலைபேசியில் வந்த ஒரு வாசகர். அதிர்ந்துபோனேன் நான். அதிர்ச்சிக்குக் காரணம், என்னைப் பற்றிய விமர்சனம் அல்ல; இயற்கை வேளாண்மை மீது நாம் கொண்டிருக்கும் மதிப்பீடு.
 இந்தப் பூமியில் மனிதன் கொண்டுவந்த மிக நுட்பமான முதல் தொழில்நுட்பம் எது தெரியுமா? வேளாண்மை. இன்னும் சொல்லப்போனால், நீங்கள் ஒரு மூட்டை நெல்லைச் சொந்தமாக விளைவிக்க வேண்டும் என்றால், உங்களுக்குக் குறைந்தது 70 தொழில்நுட்பங்கள் தெரிந்திருக்க வேண்டும், வானிலை அறிவு உட்பட. சொல்லப்போனால், செயற்கை வேளாண்மை வந்த பிறகுதான் நம்முடைய தொழில்நுட்ப அறிவு கொஞ்சம் கொஞ்சமாகப் பிடுங்கப்பட்டது. தவிர, நாம் எல்லாம் நினைப்பதுபோல, வேளாண்மை யில் புதிய விஞ்ஞானத் தொழில்நுட்பம் என்பது, எல்லோருக்கும் உணவு அளிக்கும் நோக்கத்தைப் பிரதானமாகக்கொண்டது இல்லை. அதற்குப் பின் பல்லாயிரம் கோடி ரூபாய் வியாபாரம் இருக்கிறது. சில நூறு முதலாளிகள் பல கோடி விவசாயிகளைச் சுரண்டும் திட்டங்கள் இருக்கின்றன. எல்லாவற்றுக்கும் மேல், அவர்களுடைய லாபத்துக்காக விஷத்தை உணவாக நமக்குத் தின்னக் கொடுக்கும் சூழ்ச்சி இருக்கிறது. அதனால்தான், ஓட்ஸுக்கும் மக்காச்சோளத்துக்கும் எதிராக, நம்முடைய கேழ்வரகு, சோளம், கம்பைப் பற்றிப் பேச வேண்டி இருக்கிறது. சரி, இந்த வாரம் கம்பைப் பற்றிக் கொஞ்சம் பேசலாமா!
சோளம்போல கம்பும் ஆப்பிரிக்காவில் இருந்து வந்ததுதான். ஆனால், கி.மு. 2500-களிலேயே இங்கு கம்பு பயிரிடப்பட்டு இருந்தது என்பதற்கான தொல்லியல் சான்றுகள் உள்ளன. சங்க இலக்கியப் பாடலிலும் சித்த மருத்துவப் பயன்பாட்டிலும் இந்தத் தானியம் இருப்பதே இதன் தொன்மைக்குச் சான்று.
அரிசியைக் காட்டிலும், கனிமம், கால்சியம், புரதம், இரும்பு, உயிர்ச் சத்து என அனைத்துச் சத்துகளுமே அதிகம்கொண்ட தானியம் கம்பு (பார்க்க அட்டவணை).
கன்னடத்தில், 'பஜ்ரா’ என்று அழைக்கப்படும் இந்தக் கம்பு, கர்நாடகத்திலும் ஒரு சில வட மாநிலங்களிலும் இன்றும் மிகப் பிரபலம். அரிசியைக்காட்டிலும் கிட்டத்தட்ட 8 மடங்கு அதிக இரும்புச் சத்து உள்ள இந்தத் தானியம், வேகவைக்க கொஞ்சம் மெனக்கெட வைக்கும். சாதாரண அரிசிபோல அப்படியே கழுவி வேகவைக்க முடியாது. மிக்ஸியில் ஓர் அடி போட்டு, இரண்டாக உடைத்து, இரண்டு மணி நேரம் ஊறவைத்து, அதன் பின் உலையில் போட்டு வேகவைத்தால்தான் நல்ல குழைவாக வரும். ஆனால், சுவையிலோ, பிற அரிசி வகையறாக்கள் கம்பின் பக்கத்தில் வர முடியாது. அத்தனை அருமையாக இருக்கும். அனைத்துச் சத்துக்களுமே சற்று தூக்கலாக உள்ள இந்த தானியம், வளரும் குழந்தைகளுக்கும் மாதவிடாய் துவங்கிய பெண் குழந்தைகளுக்கும் மாதம் 45 முறை கண்டிப்பாகத் தர வேண்டிய தானியம்.
பொதுவாக, கம்பு என்றாலே அதனைக் கூழாக, கஞ்சியாகத்தான் சாப்பிட வேண்டும் என்ற நினைப்பு நம்மில் பலருக்கும் உண்டு. 'சிறைக்குப் போனால் கம்பங்களிதான் தின்ன வேண்டும்’ என்பது போன்ற பேச்சுகளும் இதற்குக் காரணம். ஆனால் கஞ்சியாக மட்டும் அல்ல; சாதமாக, அவலாக, பொரியாக... எப்படி வேண்டுமானாலும் கம்பைச் சாப்பிடலாம். அருமையான நாட்டுக் கோழி பிரியாணியோ, ஹைதராபாத் தம் பிரியாணியோகூட கம்பில் செய்து கலக்கலாம். கம்பை இரண்டாக உடைத்து, தண்ணீரில் ஊறவைத்து, அதற்குப் பின் நெல் அரிசியில் எப்படி பிரியாணி செய்கிறீர்களோ அப்படியே செய்ய வேண்டியதுதான். கோழி மீது இரக்கம் உள்ளவர்கள், பீன்ஸ், கேரட், ரொட்டித் துண்டு போட்டு வெஜிடபிள் பிரியாணியும் செய்யலாம்.
கம்பு ரொட்டி சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம். கம்பில் உள்ள லோ கிளைசிமிக் தன்மையாலும், அதில் ஏற்கெனவே உள்ள கூடுதல் நார்ச் சத்தினாலும், காலை/ மதிய உணவில் இதை எடுக்கும்போது பட்டை தீட்டிய அரிசிபோல், கம்பு ரொட்டியும் கம்பஞ்சோறும் பிரச்னையைத் தராது. அரிசியைப் போல் அல்லாமல், கம்பரிசி, உமி தொலி நீக்கிய பின்னரும் அதன் உள் பகுதியில் அத்தனை நல்ல விஷயங்களையும் தன்னகத்தே வைத்திருக்கும். தவிர, இதில் உள்ள 'அமைலோஸ் அமைலோபெக்டின்’ அமைப்பு நெல் அரிசியைக்காட்டிலும் மாறுபட்டது. இன்னும் இறுக்கமானது. அதனால்தான், சீரணத்துக்கும் கொஞ்சம் தாமதமாகிறது. இந்த அமைப்பினால் மெள்ள மெள்ளவே கம்பின் சர்க்கரையை ரத்தத்தில் கலக்கச் செய்வதால், லோகிளைசிமிக் உணவாக இருந்து சர்க்கரை நோயாளிக்குப் பெரிதும் உதவுகிறது. சத்துச் செறிவு அடர்த்தியாக உள்ள கனத்த உணவு என்பதால், என்னதான் பிடித்த குழம்பை, பிடித்த கையுள்ளவர் பரிமாறினாலும் கம்பு சாதத்தை ஒரு கட்டு கட்ட முடியாது. அளவாகச் சாப்பிடுவதால், எடை குறைக்க விரும்புவோருக்கும் இது ஓர் அற்புதத் தானியம்.
இன்று பலரும், நான் ''டயபடிக் சார். அரிசியே சாப்பிடுறது இல்லே. வெறும் சப்பாத்திதான் மூணு வேளையும்'' என்பார்கள். அது தேவையே இல்லை. சர்க்கரை நோய்க்கான சரியான சிகிச்சையை உங்கள் குடும்ப மருத்துவர் ஆலோசனைப்படி எடுத்துக்கொண்டு, வாரம் இரு நாள் கம்பஞ்சோறு, இரு நாள் புழுங்கல் அரிசிச் சோறு, இன்னொரு நாள் தினை சாதம், இரவில் கேழ்வரகு அடை, எப்போதாவது காலை உணவாக வரகரிசிப் பொங்கல், சோள தோசை, குதிரைவாலி இட்லி என்று சாப்பிடப் பழகினால், சாப்பாத்திக்கு அடிமை வாழ்க்கை வாழ வேண்டிய அவசியம் இல்லை. இப்படிப் பல தானியங்களையும் கலந்து எடுத்துக்கொள்வதுடன் கொஞ்சம் உடல் உழைப்பும் கொடுத்து வாழுங் கள். உங்கள் சர்க்கரை நோய் எப்போதும் கட்டுக்குள்ளேயே இருக்கும். மைசூரில் இயங்கிவரும் மத்திய அரசின் உணவுத் தொழில்நுட்ப உயர் நிறுவனம் (சி.எஃப்.டி.ஆர்.ஐ.) தன் பல ஆய்வுகளில், இந்தச் சிறுதானியங்கள், அரிசி, கோதுமையைக் காட்டிலும் பல வகைகளில் சிறந்தது என்பதையே மீண்டும் மீண்டும் சொல்கிறது. கம்பு சம்பந்தமாகச் சமீபத்தில் படித்த ஓர் ஆச்சர்யமான விஷயம்... செல்கள் பாதுகாப்புக்கு கம்பு உதவும் என்பது. கொஞ்சம் சூட்டு உணவு என்பதால், கம்பு சாப்பிடும்போது குளிர்ச்சிக்கு மோர், சின்ன வெங்காயத்தைச் சேர்த்துக்கொள்வது நல்லது.

No comments: