Monday, October 1, 2012

நோய்களைக் கண்டறியும் `டி.என்.ஏ.’ கம்பிகள்!

மின்சாரத்தை கடத்த மனிதர்கள் அலுமினிய மற்றும் செப்பு கம்பிகளை பயன்படுத்துகிறார்கள். அதுபோல, நமது மரபணுக்களில் ஏற்படும் பிழைகளைக் கண்டறிந்து சரி செய்வதற்கான ரசாயன சமிக்ஞைகளை கடத்தும் ஒரு கம்பியாக, மரபுப்பொருளான டி.என்.ஏ.வை இயற்கை அன்னை பயன்படுத்துகிறாள் என்பதைக் கண்டுபிடித்திருக்கிறார் அமெரிக்க ஆய்வாளர் ஜாக்விலின் கே.பார்டன்.
இந்த அரிய அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கான அமெரிக்காவின் மிக உயரிய அங்கீகாரமான `நேஷனல் மெடல் ஆப் சயின்ஸ்’ என்னும் விருதினை பெற்றிருக்கிறார் ஜாக்விலின் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால், இயற்கையால் சரி செய்யப்படாத மரபணுப் பிழைகளே புற்றுநோய் போன்ற நோய்களுக்கும், முதுமையில் தோன்றும் உடல் மற்றும் மனத்தளர்வுக்கும் காரணம் என்கிறது அறிவியல்.
`டி.என்.ஏ. என்பது மிகவும் நுட்பமான, பிரத்தியேகமான ஒரு கம்பி’ என்கிறார் அமெரிக்காவின் கலிபோர்னியா தொழில்நுட்ப ஆய்வு மையத்தின் முனைவரான ஜாக்விலின். டி.என்.ஏ.வின் இந்த நுட்பமான தன்மையே மரபணு பிழைகளைக் கண்டறியும் ஒரு மின்சார பயோசென்சராக அதனை மாற்றுகிறது என்கிறார் ஜாக்விலின்.
இயற்கையில், டி.என்.ஏ.வானது எப் போதும் பாதிப்பு அல்லது சேத மடைந்துகொண்டுதான் இருக்கிறதாம். உதாரணமாக, மிக அதிகப்படியான சூரிய ஒளியால் பாதிப்படையும் தோல் உயிரணுக்கள் அல்லது சிகரெட் புகையிலிருந்து வரும் கார்சினோஜென்களால் பாதிப்படையும் நுரையீரல் உயிரணுக்கள் போன்றவற்றை சொல்லலாம். அதிர்ஷ்டவசமாக, வளைந்துசெல்லும் ஏணிப்படிகளைப் போன்ற அமைப்புடைய டி.என்.ஏ.வை சுற்றி, எப்போதும் ரோந்து பணியில் ஈடுபடும் சில பிரத்தியேக புரதங்களைக் கொண்டு நம் உயிரணுக்கள் டி.என்.ஏ. பாதிப்புகளை சரி செய்து கொள்கின்றன.
இந்த புரதங்கள் நம் டி.என்.ஏ.வில் உள்ள சுமார் 3 பில்லியன் பேஸ் பேர்கள் அல்லது அடிப்படைக் கூறுகளை தொடர்ந்து கண்காணித்துக்கொண்டே இருக்கின்றனவாம். இதன்மூலமே கார்சினோஜென்கள் மற்றும் இதர ஆபத்துகளால் ஏற்படும் டி.என்.ஏ. பாதிப்புகள் அவ்வப்போது சரி செய்யப்பட்டு புற்றுநோய் போன்ற நோய்கள் ஏற்படாமல் தடுக்கப்படுகிறது என்பது கவனிக்கத்தக்கது.

டி.என்.ஏ.வுடைய பேஸ்கள் ஒன்றின்மேல் ஒன்றாக அடுக்கப்பட்ட செப்பு நாணயங்களைப் போன்றவையாம். அதுமட்டுமில்லாமல், சரியான வகையில் நேர்படுத்தப்பட்டு, நல்ல நிலையில் இருக்கும் செப்பு நாணய அடுக்குகள் மின்சாரத்தை கடத்தக்கூடியவையாம். ஆனால் அதேசமயம், இத்தகைய செப்பு நாணய அடுக்கில் இருக்கும் ஒரு நாணயமானது அங்குமிங்கும் மாறிவிட்டாலோ அல்லது சரியாக அடுக்கப்படாவிட்டாலோ அந்த அடுக்கு மின்சாரத்தை கடத்தும் திறனை இழந்துவிடும் என்கிறார் ஜாக்விலின்.
அதுபோலவே, டி.என்.ஏ.வில் இருக்கக்கூடிய பேஸ்கள் ஒன்றுக்கொன்று முரண்பட்டாலோ அல்லது புற்றுநோய் ஏற்படுத்தக்கூடிய டி.என்.ஏ. மாற்றங்கள் போன்ற வேறு விதமான பாதிப்புகள் டி.என்.ஏ.வில் ஏற்பட்டாலோ, டி.என்.ஏ. கம்பியில் தடை ஏற்பட்டு மின்சாரமானது டி.என்.ஏ. வழியாக சரியாக பாயாமல் அல்லது கடத்தப்படாமல் போய்விடுமாம்.
ஒரு மின்சார கம்பியின் ஒரு முனையில் இருந்து மற்றொரு முனைக்கு பாயும் போது மின்சாரத்தை உற்பத்திசெய்யும் எலக்ட்ரான்கள், டி.என்.ஏ.வின் ஒரு முனையில் இருந்து மற்றொரு முனைக்கும் பாய்கின்றன என்று நிரூபித்தார் ஜாக்விலின்.
புற்றுநோய் மற்றும் இதர நோய்களை ஏற்படுத்தக் கூடிய டி.என்.ஏ. மாற்றங்கள் அல்லது மியூட்டேஷன்களை கண்டறிந்து சொல்லும் மருத்துவ நோய் அறியும் கருவிகள் மற்றும் பயோசென்சார்களில் பயன்படுத்த, 34 நானோமீட்டர் நீளமுள்ள டி.என்.ஏ.வே போதுமானது என்பதும் குறிப்பிடத்தக்கது.
டி.என்.ஏ. தனது மின்சார பண்புகளை பயன்படுத்தியே டி.என்.ஏ. பாதிப்புகளை சரிசெய்யும் புரதங்களுக்கு சமிக்ஞை செய்கிறது என்கிறது ஜாக்விலின் தலைமையிலான ஆய்வு. ஆக, டி.என்.ஏ.வானது மின்சாரத்தை சரியாக கடத்தாதபோது, அதுவே டி.என்.ஏ. பாதிப்புகளை சரிசெய்யும் புரதங்களை செயல்படத் தூண்டும் சமிக்ஞையாகி விடுகிறது என்கிறார் ஜாக்விலின்.
இந்த அறிவியல் உண்மைகள் மற்றும் புரிதல்களைப் பயன்படுத்தி, நமது உயிரணுக்களில் உள்ள மரபணுக்களில் ஏற்படும் டி.என்.ஏ. பாதிப்புகளைக் கண்டறியும் கருவிகளான டி.என்.ஏ. சிப்களை, தற்போது உருவாக்கிக்கொண்டு இருக்கிறது ஜாக்விலின் தலைமையிலான ஆய்வுக்குழு.
இத்தகைய டி.என்.ஏ. சிப்பானது, டி.என்.ஏ.வில் ஏற்படும் மியூட்டேஷன்கள் காரணமாக அதன் மின்கடத்தல் திறனில் நிகழும் மாற்றங்களைக்கொண்டு, நோய்கள் மற்றும் நோய் ஏற்படும் ஆபத்துகளை கண்டறிய உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments: