நமது உடம்பிற்கு தேவையான ஆற்றலை பெற நமது உதவுவது பசியே. பசி சீராக இல்லாவிட்டால் உடலுக்கு ஆற்றல் கிடைக்காது. பித்தம் நமது பசியை சீர்செய்யும் பொருளாக விளங்குகிறது. உடலின் ஆற்றலுக்கு பித்தமே அவசியம். பித்தம் அடங்கினால் பேசாமல் போய்விடு என்று சித்த மருத்துவம் பித்தநாடியின் சிறப்பை வலியுறுத்துகிறது. நமக்கு தேவையான பசியை உண்டாக்குவதும், தேவையற்ற கொழுப்பை கரைத்து, சக்தியாக மாற்றுவதும் பித்தத்தின் பணியாகும். நாம் உண்ணும் உணவை சரியானபடி செரிக்கவைத்து, தேவையற்ற கொழுப்புகள் அங்குமிங்கும் படியாமல் பாதுகாக்கும்
உணவுகள் பித்தசமனி என்று அழைக்கப்படுகின்றன. சீரகம், வெந்தயம், இஞ்சி, பூண்டு போன்ற உணவுகள் பித்தத்தை சமப்படுத்தும் உணவுகளாகும். பித்தம் சரியாக இயங்காவிட்டால் நமது உணவு செரிமானமாவதில் பல சிக்கல்கள் ஏற்படுகின்றன. பித்தத்தின் இயக்கத்தில் ஏற்படும் மாறுபாடுகள் நமது உடலின் ஆற்றலை தடை செய்கின்றன.
நமக்கு பசி ஏற்படும்போதெல்லாம் ஒருவிதமான எரிச்சல் வயிற்றில் ஏற்பட்டு, உணவு உண்ணும் வேட்கை அதிகமாகிறது. நாம் உண்ணும் உணவிலுள்ள பல்வேறு வகையான சத்துகள் உடலின் எடையையும் பருமனையும் அதிகப்படுத்துகின்றன. உடல் எடை அதிகமாக இருப்பவர்கள் உணவின் அளவை குறைக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். இதனால் உடற்பருமன் அதிகமாவதுடன், உடற்பருமன் சார்ந்த சர்க்கரை நோய். ரத்தக்கொதிப்பு, மிகு கொழுப்பு போன்ற தொல்லைகளுக்கு ஆளாகின்றனர். உடற்பருமனின் காரணமாக மூச்சு வாங்குதல், உடலின் அங்கமைப்புகள் மாறுபடுதல், முழங்கால், கணுக்காலில் வலி உண்டாதல், தொண்டை வறட்சி, கழுத்து, புட்டம் போன்ற சதைப்பகுதிகள் தொங்கி காணுதல், நடக்கும்பொழுது அதிக உடல் எடையின் காரணமாக அசைந்து செல்வது போன்ற தோற்றம், பிறரின் கேலிக்கு ஆளாதல் போன்ற பாதிப்புகள் உண்டாகின்றன.
உண்ணும் உணவின் அளவை நமது வேலை மற்றும் எடைக்கு தகுந்தவாறு மாற்றிக்கொள்ள வேண்டும். கூடுதல் கலோரிகள் கொண்ட உணவை தவிர்த்து, நார்ச்சத்துகள் நிறைந்த உணவுகளை உட்கொள்வது அவசியமாகும். நாம் உண்ணும் உணவுடன் பசியை கட்டுப்படுத்தும் பொருட்களையும் சேர்த்து உட்கொள்வது நல்லது. இதனால் எடை குறையும். உணர்ச்சிவசப்பட்ட பசி என்ற எமோசனல் பசியை கட்டுப்படுத்த வேண்டியது அவசியமாகும். நமக்கு பிடித்தமான உணவுகள் என்றால் அதிகமாக சாப்பிடுவதும், பிடிக்காத உணவுகள் என்றால் தவிர்ப்பதும் உடலின் செயல்பாட்டில் மாறுபாடுகளை ஏற்படுத்தி, பல்வேறு உடற்கோளாறுகளை உண்டாக்குகிறது. இதனால் தேவையற்ற கொழுப்புகள் உடலில் சேர்ந்து, பல நோய்கள் உண்டாகிறது. நாம் உண்ணும் உணவின் அளவை கட்டுப்படுத்தவும் அதிக பசியினால் உண்டாகும் நாப்புளிப்பு மற்றும் சுவையின்மை ஆகியவற்றை நீக்கவும் பயன்படுவதுடன், செரிமான ஆற்றலைநிலைநிறுத்தும்
அற்புதமூலிகை கள்ளி முளையான். கேரலுமா பிம்பிரியேட்டா என்ற தாவரவியல் பெயர் கொண்ட அப்போசினேசியே குடும்பத்தைச் சார்ந்த கள்ளி செடிகளின் தண்டுகள் மருத்துவ குணம் வாய்ந்தவை. எழுமான்புளி என்ற வேறு பெயர் கொண்ட இந்த மூலிகையின் புளிப்புச் சுவையானது ஊறுகாய்,துவையல் போன்றவை தயார் செய்ய உதவுகிறது. இதன் தண்டுகளிலுள்ள ஸ்டார்வோசைடுகள் மற்றும் பிரக்னின் கிளைக்கோசைடுகள் தேவையற்ற கொழுப்பை நீக்கி, பித்தத்தை கட்டுப்படுத்தி, உடலுக்கு தேவையான அளவு மட்டுமே பசியை உண்டாக்கு கிறது. அதுமட்டுமின்றி, உடலுக்கு வலுவையும் தருவதால்பஞ்சகாலத்தில்உட்கொள்ளக்கூடிய உணவாகவும் முற்காலத்தில் இவை பயன் பட்டன.
கள்ளிமுளையான் தண்டை மேல்தோல், நார், கணு நீக்கி, நல்லெண்ணெய் விட்டுவதக்கிக் கொள்ள வேண்டும். மிளகாய் வற்றல்,உளுத்தம்பருப்பு, கடுகை சிவப்பாக வறுத்து, இத்துடன் வதக்கிய கள்ளிமுளையான், தேங்காய் துருவல் சேர்த்து மைய அரைத்து, துவையல் போல் செய்துகொள்ள வேண்டும். இதனை உணவுக்கு தொட்டுக்கொண்டு சாப்பிட உடலில் தேங்கிய அதிகப்படியான கொழுப்பு கரையும். உடற்பருமன் நீங்கும். கள்ளிமுளையானை தோல் நீக்கி, நார், கணு நீக்கி, நல்லெண்ணெய்விட்டு வதக்கி மைய அரைத்துக்கொள்ள வேண்டும். மிளகாய்வற்றல், உளுத்தம்பருப்பு மற்றும் வெந்தயத்தை வறுத்து, பொடித்து வைத்துக்கொள்ள வேண்டும். பின் நல்லெண்ணெயில் கடுகை போட்டு பொரித்து, அத்துடன் வதக்கிய கள்ளிமுளையான் மற்றும் பொடிகளை கலந்து, சிறிது பெருங்காயத்தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறி, அத்துடன் தேவையான அளவு நல்லெண்ணெய் ஊற்றி மூடிவைத்துக்கொள்ள வேண்டும். இதனை உணவுடன் சேர்த்து சாப்பிட தேவையற்ற பசி குறையும். பித்தம் தணியும்.
No comments:
Post a Comment