புறநானூற்று வீரம் இலக்கிய வீரம் மட்டுமன்று. வாழ்க்கையில் தழைத்து இலக்கியத்தில் கனிந்த வீரமே! மதுரைக் காஞ்சி மூலம் அதுவே தலையாலங் கானத்துப் பெறும் போர் வெற்றியாகி, இலக்கியத்திலும் வாழ்விலும் மலரக் காண்கிறோம். இப்புகழை இமயம்வரை கொண்டு செல்கிறது, சிலம்புச் செல்வம். இதனை அடுத்து முத்தொள்ளாயிரத்தில் தமிழில் முன்னோ பின்னோ என்றுமில்லாத வகையில் அதுபின்னும் இன்னிலா வொளிபூத்து முறுவலிக்கக் காண்கிறோம். சோழப் பேரரசர் காலத்தில் அது இலக்கியத்தில் மூவருலாவாகவும் கலிங்கத்துப் பரணியாகவும் புதுமுகையவிழக் காண்கிறோம். இவை இலக்கிய முகைகள் மட்டுமல்ல, வங்கம், கலிங்கம், கடாரம் ஆகிய நாடுகள் அப்புது வீர காவியங்களால் அதிர்வுற்றன. அவற்றிலிருந்து எழுந்த வீர அலைகள் அராபிக் கடலில் மாலத்தீவுகள் என்னும் பழந் தீவுகள் பன்னீராயிரத்தையும், வங்காள விரிகுடாவில் அந்தமான் நிக்கோபார் என்னும் மாநக்கவாரத் தீவுகளையும் அலைக்கழித்தன.
சோழப் பேரரசைவிட எல்லையில் குறைந்தாலும் வீர்த்தில் குறைந்ததல்ல, பிற்காலப் பாண்டியப் பேரரசு. மேலும் செல்வ நிலையில் அது சோழப் பேரரசையும் விஞ்சியிருந்தது என்பதை வெளிநாட்டார் குறிப்புகளே தெரிவிக்கின்றன. முன் என்றும் இல்லா வகையில் அந்நாளைய வரலாற்றாசிரியர் தமிழகத்தைப் பெரிய இந்தியா என்றும் சிந்து கங்கைப் பரப்பை சிறிய இந்தியா என்றும் அமைத்திருந்தனர். தமிழகத்தின் இவ்வீர வாழ்வும், கீழ்த் திசை உலகின் விடுதலை வாழ்வும் சரிந்ததற்கே பாண்டியர் திரட்டிய இந்தப் பெருஞ் செல்வம்தான் காரணம் என்று அறிகிறோம். பாண்டியப் பேரரசர் காலத்தில் தமிழகத்திலேயே வந்து குவிந்து கிடந்த உலகின் செல்வம், அதற்குக் காரணமான உலகப் பெருந் தொழில்கள் ஆகியவற்றைக் கவரவே போர்ச்சுக்கீசியரும் டச்சுக்காரரும், டேனியரும் ஜெர்மானியரும், பிரெஞ்சுக்காரரும் ஆங்கிலேயரும் தமிழகத்திலும் தமிழகம் சூழ்ந்த தென் கிழக்கு ஆசியாவிலும் வட்டமிடத் தொடங்கினர்.
தமிழருக்கும் கீழ்த் திசை உலகுக்கும் வாழ்வளித்த தமிழர் வீரம் வெள்ளையர் ஆட்சியின் தொடக்கத்தில் வெள்ளையருக்கே புதிய வாழ்வும் உலக வாணிக, தொழில் தலைமையும் பேரரச வாழ்வும் தந்தது. வீரம் அழியவில்லை. ஆனால் அது அயலாருக்குப் பயன்பட்டது. ஆயினும் வெள்ளையர் ஆட்சியின் பிற்பகுதியில், இதே வீரம் தம் ஆட்சிக்கு ஆபத்தானதென்று கண்டு, வெள்ளையர் அதை அழிக்க முற்பட்டனர். ஆனால், அது அவர்களை எதிர்த்து பாஞ்சாலக்குறிச்சியிலும், வேலூரிலும் மைசூரிலும் கிளர்ந்தெழுந்தது.

தமிழர் மரபில் பிளவுகள்
பாண்டியப் பேரரசு காலத்திலும், வெள்ளையர் ஆட்சியிலும், புறநானூற்றுக் கால வீரம் மறைந்துவிட வில்லை. குறைந்துவிடக் கூட அல்ல, ஆனால் அதனால் எதிர்பார்க்கப்படத்தக்க வளம் மட்டும் கிட்டவில்லை. அதுமட்டுமன்று புறநானூற்றுக் கால வீரம், குன்றாது நின்று நிலவினாலும், புறநானூற்றுக் காலத் தமிழ் இலக்கிய வளம்தான் அதைப் பாடும் தகுதியில் குறைந்து விட்டது என்னல் வேண்டும். ‘வெற்றி வேற்கை வீரராமன்; என்று தன்னைக் குறித்துக்கொண்ட அதிவீரராம பாண்டியன் தமிழர் வீரம் பாடவில்லை. நளகதையே பாடினான். அல்லது நீதி நூல்கள், காம நூல்கள், கடவுட் கவிதைகள் இயற்றினான். பாஞ்சாலக்குறிச்சி வீர மரபு வீர காவியம் பாடிற்று. ஆனால் அதில் காவியப் பண்பை விட வீரப் பண்பே மிகுதி. அதைப் பாடிய மரபு வேறு. இலக்கியப் புலவர் மரபு வேறாக அன்று விளங்கிற்று.
புறநானூற்று வீரம் பொன்றிவிட்டது என்று புலம்பும் வையாபுரியவர்கள் பிறந்த இடத்துக்கு அருகிலேதான் பாஞ்சாலக் குறிச்சியின் புகழ்நின்று நிலவிற்று. அது மட்டுமன்று, அவர் அருகிலே அவர் காலத்திலேதான் புதிய வீர சோதியாக வ.உ.சிதம்பரனாரின் புத்தியக்கம் பழம் புகழ் புதுக்கிற்று. அவர் காலத்திலேதான் திருப்பூர்க் குமரன், புறநானூற்று வீரத்துக்கு ஒரு புத்துரு தந்தான். ஆனால் இவற்றையெல்லாம் காண முடியாத நிலையில் வையாபுரி போன்றோரின் இலக்கிய மரபு வேறாகவும், திருப்பூர்க் குமரன் இலக்கிய மரபு வேறாகவும் தமிழகத்தில் பிரிவுற்று இயங்கின. ஆனால் கவிஞர் பாரதி மீண்டும் தமிழகத்தின் இரு மரபுகளையும் தம் கவிதையில் இணைத்துப் புதிய விடிவெள்ளியாக ஒளி வீசியுள்ளார். அயலாட்சிகளிலும் அயற் பண்புகளிலும் குளிர் காய்ந்த வையாபுரி போன்றோரின் இலக்கிய மரபு பாரதியார் கவிதையைப் போற்றிற்று. ஆனால் அக் கவிதையிலே புதிதாகத் தளிர்விட்டுப் பொலியத் தொடங்கிவிட்ட இந்தப் புதிய மெய்மையை அது காணவில்லை.
புறநானூற்றுக் கால வீரம் இன்னும் தமிழரிடையே இருக்கிறது. அக்கால அறிவும் இருக்கிறது.கலையும் இருக்கிறது. ஆனால் இவற்றின் தங்கு தடையற்ற வளர்ச்சிக்குரிய விடுதலை உரிமை ஆட்சியும், ஒன்றுபட்ட இன எழுச்சியும் மரபு ஒற்றுமையும்தான் நம்மிடையே இல்லை. தமிழர் வீர மரபை இன்று தமிழர் அறிவு மரபு அடக்கி ஒடுக்கி அமிழ்த்திக் கங்காணி மரபாய் இயங்குகிறது. தமிழர் களி மரபு, இன்னும் பெரிதும் அயல் மொழி, அயல் இன ஆட்சிகளுக்குப் பரிந்து முன்னின்று உழைக்கும் நிலையிலேயே உள்ளது. தமிழர் ஆட்சியோ, தமிழ் ஆட்சியாகவும் அமையாமல், கடமைக் குரல் மட்டும் எழுப்பும் அடிமை ஆட்சியாகவே நிலவுகிறது.
வீரமரபில் வந்து அறிவும் கலையும் வளர்த்து தமிழர் மீண்டும் வீரம் வளர்த்த பின்னரே, தம் அறிவையும் தம் கலையையும், தமக்குப் பயன்படும் உயர் அறிவாகவும் உயிர்க் கலையாகவும் வளர்க்க முடியும். தமிழர் போர்க் களங்களின் வரலாறு தமிழ் மரபின் உயிர் வரலாற்றை அவர்கள் கண்முன் கொண்டு வருவதுடன், அவ்வீர மரபை வளர்க்கவும் உதவும் என்பது உறுதி.
வான விளிம்பு
தமிழகத்திலே பல வரலாற்று மரபுகள், புராண மரபுகளிடையே புராண மரபுகளாக மயங்கியுள்ளன. அதேசமயம் பல புராண மரபுகள், வரலாற்று மரபுகளாக மதிப்புப் பெற்றுள்ளன. பழமையின் வான விளிம்பிலே இவற்றின் மயக்கங்கள் மிகுதி. எடுத்துக்காட்டாகத் தமிழ் மூவேந்தர்களுடைய தலைசிறந்த முன்னோர்களின் அருஞ் செயல்களே தமிழர் பெருந் தெய்வங்களின் புகழ் மரபுகளாக உலவுகின்றன. சிறப்பாகப் பாண்டியர் வாழ்வுடன் சிவபெருமானும், சேரர் வாழ்வுடன் முருகனும், சோழர் வாழ்வுடன் திருமாலும் இணைகின்றனர். மலையமலைக்குரிய மன்னனாகிய பாண்டியன் வளர்த்த முத்தமிழ் நங்கையே மூன்று மார்பகங்களை உடைய தடாதகைப் பிராட்டி. அல்லது மலைமகளாகவும், அவளை மணந்த சௌந்தர பாண்டியனே சிவபெருமானாகவும், அவர்கள் பிள்ளை உக்கிர பாண்டியனே முருகனாகவும் திருவிளையாடற் புராணத்திலே காட்சி அளிக்கின்றனர். பல ஆராய்ச்சியாளர்கள் சௌந்திர பாண்டியனை திருவிற் பாண்டியன் அல்லது தலையாலங் கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனாகவும், உக்கிரப் பாண்டியனை கானப் பெரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதியாகவும் காண்கின்றனர்.
கடன்மா (கடலில் விரைந்து முன்னேறும் மரக்கலம்) ஊர்ந்து சென்று கடற் கடம்பரை அழித்த சேரரின் பெருஞ் செயலிலே நாம் முருகன் வீரப் புகழ் மரபைக் காண்கிறோம். கடல்பிறக் கோட்டிய செல்கெழு குட்டுவனின் இச் செயலை வருணிக்கும் பரணர், புராண மரபினை உவமையாகக் காட்டத் தவறவில்லை. இக்குட்டுவனோ அல்லது அவன் முன்னோருள் ஒருவனோ முருகனாகவும் ‘கடம்பின் வாயில்’ போரில் அவனால் முறியடிக்கப்பட்ட பெண் கொலை புரிந்த நன்னனோ அல்லது அவன் முன்னோருள் ஒருவனோ சூரபன்மனாகவும் உருவகப்படுத்தப் பட்டிருக்கக்கூடும்.
கடவுளராகக் காட்சியளிக்கும் காவலர்
சோழர் தொடக்கக் கால மன்னர் மரபு, வரலாற்று மரபா அல்லது முற்றிலும் புராண மரபுதானா என்று ஐயுறத் தக்கதாகவே உள்ளது. அத்துடன், அவர்களில் சிலர் பெயரும் புகழும் அப்படியே இராமாயணத் தலைவன் இராமன் முன்னோடிகள் சிலரின் பெயருடனும் புகழுடனும் முற்றிலும் ஒன்றுபடுகின்றன. இராமன் திருமாலாகக் கருதப்பட இதுவே வழி செய்திருக்கக்கூடும்.

புராண மரபுடன் மயங்கும் இந்தச் சோழர் குடி முதல்வர்கள் சிபி, முசுகுந்தன், காந்தன், செம்பியன், மனு ஆகியவர்கள். இவர்களில் சிபி ஒரு புறாவைக் காப்பதற்காக அதைத் துரத்தி வந்த பருந்தினிடம் தன் தசையையே அரிந்து கொடுத்தான் என்று கூறப்படுகிறது. முசுகுந்தனோ அரக்கர்கள் பலரை வென்று இந்திரனையே காத்தவன். காந்தன் தன் வாளால் குடகு மலையைப் பிளந்து காவிரியை சோழ நாட்டில் ஓடச் செய்தவன் என்று கூறப்படுகிறான். செம்பியன் அரக்கர்களின் பறக்கும் கோட்டைகள் மூன்றைத் தாக்கி அழித்து, உலகு காத்தவனாம். மனுச் சோழன் ஆவின் கன்றின் மீது தேரை ஏற்றி விட்டதற்காக தன் மகனைத் தானும் தேர்க்காலில் இட்டு அரைத்து நீதியை நிலை நாட்டினானாம்.
தமிழில் எவ்வளவு பற்றார்வம் கொண்ட தமிழரும் இந்தக் கதைகளை வரலாறு என்று கூறவோ நம்பவோ முன்வர மாட்டார்கள். ஆயினும் சிலப்பதிகாரமும் கலிங்கத்துப் பரணியும், மட்டுமின்றி பல கல்வெட்டுக்களும் புகழும் செயல்கள் இவை. இவற்றை முற்றிலும் கற்பனை, வரலாற்று மெய்ம்மை சிறிதும் அற்றவை என்று ஒதுக்கிவிட முடியாது. மனிதனின் வீரச் செயல்கள், சிறந்த செயல்கள் இங்கே தெய்வச் செயல்களாகப் புனைந்துரைக்கப்பட்டு அதன் மூலம் வரலாற்று மெய்ம்மைகள் ஒரு சிறிதும் உருத் தெரியாமல் சிதைக்கப்பட்டுள்ளன என்பது தெளிவு.
கனவேயாயினும் வியத்தகு கனவே!
இருபதாம் நூற்றாண்டில்தான் நம் காலத்தில் நாம் வானூர்திகளையும் பறக்கும் கோட்டைகளையும் பற்றிக் கண்டும் கேட்டும் வருகிறோம். இரண்டாயிரம் ஆண்டுகட்கு முற்பட்ட தமிழர் தம் நாளிலும் செய்திகளாக இவற்றைக் கூறும்போது, அவை தமிழன் கண்ட கனவுகளாய் இருந்தால் கூட வியத்தகு கனவுகளேயாகும் என்பதில் ஐயமில்லை. தமிழன் கனவில் கண்ட இந்த வாகனப் போர்க் காட்சி அவனது அரை வரலாறு, அரைப் புராண மரபில் திரிபுர மெரித்த விரிசடைக் கடவுளாகவும் காட்சி தருகின்றது.

இதிலும் வித்தை என்னவென்றால் கனவிகூடத் தமிழ் அரசனோ, தமிழ்த் தெய்வமோ பறந்ததாகத் தமிழன் கற்பனை செய்யவில்லை. அந்த அரசன் எதிரிகளும், அந்தத் தெய்வத்தின் எதிரிகளும்தான் பறக்கும் கோட்டை அல்லது பறக்கும் நகரங்களை ஆண்டனர். வாகனப் போரின் புகழை தமிழன் அவ்வரக்க எதிரிகளுக்கே தந்துவிட்டு, தன் அரசனுக்கும் தெய்வத்துக்கும் வெற்றிப் புகழை மட்டுமே தந்தான். தமிழரசர், தமிழ்த் தெய்வம் பறக்கும் வித்தையைக் கற்றுக்கொள்ளா விட்டாலும் அதைக் கற்றவரை அழிக்கக் கற்றுக் கொண்டிருந்தனர் போலும்.
வாழ்விலே கண்டதன்றிக் கனவிலே எதுவும் தோன்றுவதில்லை என்பர். கண்டதைக் கனவு மிகைப்படுத்தலாம், திரிக்கலாம். ஆனால் குறைந்த அளவு கண்டதை அல்லது காண அவாவியதை அல்லது கண்டு அஞ்சியதைத் தான் அது உருவகப்படுத்த முடியும். அப்படியானால், இக்கனவின் மூலம் தமிழர் பழமையில் வருங்கால ஆராய்ச்சி ஒரு படி முன்னேற வழி காணக்கூடும் எனலாம்.
நாக மரபு
புராண மரபில் மறைந்து அல்லது மறைக்கப்பட்டுக் கிடக்கும் இன்னும் சில செய்திகளை இது நம் நினைவுக்குக் கொண்டுவரக்கூடும். இந்தப் பறக்கும் கோட்டைகளுக்கு உரியவர் தமிழ் இனத்தவராலும் ஏனைய இனத்தவராலும் நாகர்கள் என்று குறிக்கப்பட்டவரே யாவர் என்று ஊகித்தல் தவறல்ல. தமிழர் பெரு நகரங்களைக் கட்டியவர்கள் என்று தமிழிலக்கியமும், பாண்டவர் தலைநகரைக் கட்டியவர்கள் என்று பாரதமும் புகழ்வது, இவ்வினத்தவரையே. அவர்கள் தமிழகத்திலும் தென்னாட்டிலும் மட்டுமின்றி, இலங்கையிலும் வட இந்தியாவிலும், கீழ்கடல் தீவுகளிலும் அன்று வாழ்ந்தார்கள். இன்றும் வாழ்கிறார்கள். அசாமில் தம் இனத்துக்கெனத் தனி நாடு கோருமளவு அவர்கள் இன்றும் தனி வாழ்வும் தனிப் பண்பும் உடையவர்களாகவே உள்ளனர்.
ஆரியர்க்குச் சமசுகிருத எழுத்தை முதன்முதலில் ஆக்கித் தந்தவர்கள் என்றும், நாகரிகம் கற்பித்தவர்கள் என்றும் நாகர்களை ஆராய்ச்சியாளர்கள் போற்றியுள்ளனர். உலகில் முதல் முதல் கடலுள் மூழ்கி முத்தெடுத்தவர்கள் என்றும், பாம்புகள் போலவும், எறும்புகள் போலவும் நிலத்தின் கரு அகழ்ந்து பொன், வெள்ளி முதலிய உலோகங்களைக் கண்டவர்கள் என்றும் அருங்கலை வேலைப்பாட்டில் சிறந்தவர்கள் என்றும் கருதப்படுபவர்கள். அவர்கள், இன்றுகூட இத்தொழில்களில் உலகெங்கும் இவ்வினத்தவரோ அல்லது அவர்களுடன் குருதிக் கலப்புடையவர்களோடுதான் திடம்பட ஈடுபட்டு உழைக்கின்றனர் என்று கேள்விப்படுகிறோம்.
உலகெங்கும் பாம்பு வழிபாட்டைப் பரப்பியவர்களும் இந்த நாகர்கள் என்றே கருதப்படுகிறது. இது அவர்கள் முற்காலப் பொதுப் பரப்பிற்கு மட்டுமின்றி, மலையாள நாட்டில் சிறப்பாகப் பரவிய செறிவுக்கும் சான்று ஆகும். பாம்புக்காட்டு நம்பூதிரிகள் என்று கூறப்படும் மலையாள பிராமணர்கள் உண்மையில் பண்டை நாகரின் பெருங்குடி மரபினரேயாவர்.
புத்தர் பிறந்த சாக்கியர் குடி, நாக மரபு சார்ந்ததென்று பிறப்பிடத்தின் அகழ்வாராய்ச்சி ஏடுகள் கூறுகின்றன. புத்த மதம் வங்கத்திலும், தென்னாட்டிலும், இலங்கையிலும், பர்மா சீனாவிலும் விரைந்து பரவியதற்கு இவ்விடங்களில் உள்ள மக்களில் பெரும் பகுதியினர் நாக மரபினராக இருந்ததே தலையான காரணம் என்று கூறப்படுகிறது.
இந்த நாகர்கள் யார்? எந்த இனத்துடன் தொடர்புடையவர்கள்? இவர்கள் பண்டைப் பெருவாழ்வு அழிந்து உலகெங்கும் இன்று சிறுமையுற்று நலிவானேன்? இன்னும் ஆராய்ச்சியுலகம் தெளிவாக வரையறுக்க முடியாத கேள்விகள் இவை. ஆயினும் ஆராய்ச்சிக்கு இங்கே வழிகாட்டல் முடியாததன்று.
நாகர்களுக்கென்று இன்று தனி மொழி எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. அவர்கள் சில இடங்களில் திராவிட மொழிகளையும், சில இடங்களில் வேற்றின மொழிகளையும் பேசுகின்றனர். ஆனால் எங்கும் அவர்கள் நாகரிகம் ஒன்றே. எங்கும் அவர்கள் தம்மை நாகர்கள் என்றே கூறிக்கொள்கின்றனர். பாம்பு என்ற பொருளில் இப்பெயர் தமிழுக்கும் சமசுகிருதத்துக்கும் பொதுவான பெயராகும். ஆனால் நாக மரபினர் கிளை இனத்தவராக வில்லியர் முதலிய பெயர்கள் தென்னாட்டிலும் வட இந்தியாவிலும் ஒருங்கே ‘வில்’ என்ற தமிழ்ச் சொல் அடிப்படையில் தமிழ்ப் பெயராகவே காணப்படுகின்றன.

நாகர் தமிழினத்தவரே!
நாகர்கள் உண்மையில் தமிழகத்தின் நாற்புறமும் செந்தமிழ் அல்லது திருந்திய தமிழ் பரவாத இடங்களில் உள்ள தமிழினத்தவர்களே. செந்தமிழ் பரவாத இடத்திலேயே ஆரிய முதலிய பிற இனத்தாக்குதல்கள் எளிதாகத் தமிழினத்துடன் கலக்கவும் முடியவில்லை. இக்காரணத்தால், அவர்கள் மதிப்பில் குறைந்து அடிமைப்பட்டனரேயன்றி, பண்பாட்டில் எளிதில் மாறவில்லை. தமிழகம் சூழ்ந்த திராவிட இனத்தவர்கள் மட்டுமன்றி, சிங்களர், வங்காளர், பர்மியர், மலாய்மக்கள், திபெத்தியர், நேபாள காசுமீர மக்கள் ஆகிய பலரும் இந் நாக மரபினரேயாவர். இந்தியா முழுவதிலும், தாழ்த்தப்பட்ட மக்கள், கோயில் குருக்களாகவும், மருத்துவ, மந்திர, சோதிட வாணர்களாகவும் உள்ள வகுப்பினர் நாகர்களே என்று கருத இடமுண்டு.
வருங்கால ஆராய்ச்சி இவற்றைத் தெளிவுபடுத்த வேண்டும். மனித இனத்தினிடையே மனித இனத்தவரான இந்த நாகரைப் பண்டைத் தமிழர்கூடத் தெளிவாய் அறியாமல், இன்றைய ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சியும் தெளிய முடியாமல், மறைந்ததும், மறைப்பதும் புராண மரபுகளும், அவற்றைப் பின்பற்றிய தமிழ், சமசுகிருத இலக்கிய மரபுகளுமேயாகும்.

No comments:
Post a Comment