Wednesday, April 17, 2013

எலுமிச்சை: சத்துப்பட்டியல்

எலுமிச்சை: சத்துப்பட்டியல்

எலுமிச்சை: சத்துப்பட்டியல்
வடகிழக்கு இந்தியாவை தாயகமாகக் கொண்டது எலுமிச்சை. தற்போது உலகம் முழுவதும் அதிக அளவு பயன்படுத்தப்படும் கனிகளில் ஒன்றாக உள்ளது. சாறு மற்றும் சிட்ரஸ் அமிலம் நிறைந்த எலுமிச்சை, அனைவராலும் விரும்பி உண்ணப்படுகிறது. அதிலுள்ள சத்துக்களை அறிந்து கொள்வோம்...
* எலுமிச்சை குறைந்த ஆற்றல் வழங்கும் கனியாகும். 100 கிராம் எலுமிச்சையில் 29 கலோரி ஆற்றல் உடலுக்கு கிடைக்கிறது. ஏராளமான சத்துக்கள் அடங்கி உள்ளது.
* பூரிதமாகாத கொழுப்பு மற்றும் கொலஸ்டிரால் எலுமிச்சையில் கிடையாது. எளிதில் ஜீரணமாகும் நார்ப்பொருட்கள் நிறைந்துள்ளது. ரத்தத்தில் சர்க்க ரையின் அளவை அதிகரிக்காதது இதன் சிறப்பு.
* 'சிட்ரஸ் அமிலம்' நிறைந்தது எலுமிச்சை. இதன் பழச்சாற்றில் 8 சதவீதம் அளவு சிட்ரிக் அமிலம் உள்ளது. இது நோய் எதிர்ப்புத் தன்மையை வழங்கும். ஜீரணத்திற்கு உதவும். சிறுநீரக கற்களை கரைப்பதிலும் செயலாற்றுவதாக கண்டறியப்பட்டுள்ளது.
* எலுமிச்சையில் அஸ்கார்பிக் அமிலமும் (வைட்டமின்-சி) மிகுதியாக உள்ளது. திரவ நிலையில் இருக்கும் சிறந்த நோய் எதிர்ப்பொருள் இதுவாகும். வைட்டமின்-சி, ஸ்கர்வி நோயைத் தடுக்கும்.
* துணை அமிலங்களான ஹெஸ்பெர்டின், நாரின்ஜின், நாரின்ஜெனின் போன்றவையும் எலுமிச்சையில் காணப்படுகிறது. இவற்றில் நாரின்ஜெனின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை சுறுசுறுப்பாக்கும். தீங்கு விளைவிக்கும் பிரீ-ரேடிக்கல்களை விரட்டும்.
* 'வைட்டமின் ஏ', எலுமிச்சையில் சிறிதளவு உள்ளது. ஆல்பா பீட்டா கரோட்டின், பீட்டா கிரிப்டோசாந்தின், ஸி-சாந்தின், லுட்டின் போன்றவையும் எலுமிச்சையில் உள்ளது. 'வைட்டமின் ஏ', சருமத்திற்கும், பார்வைக்கும் நன்மை பயக்கும். மற்றவை நோய் எதிர்ப்பொருட்களாகும். நுரையீரல் மற்றும் வாய்ப் புற்றுநோயிலிருந்து காக்கும்.
* பைரிடாக்சின், பான்டோதெனிக் அமிலம், போலேட் போன்ற 'பி- காம்ப்ளக்ஸ்' வைட்டமின்களும் எலுமிச்சையில் உள்ளது. இவை உடல் உள்ளுறுப்புகளை புத்துணர்ச்சியுடன் செயல்படத் தூண்டும்.
* இவை தவிர இரும்பு, தாமிரம், பொட்டாசியம், கால்சியம் போன்ற தாது உப்புக்களும் கணிசமான அளவில் உள்ளன. பொட்டாசியம் தாது இதயத் துடிப்பை கட்டுக்கோப்பாக வைப்பதிலும், ரத்த அழுத்தத்தை சீராக வைத்திருப்பதிலும் முக்கியப்பங்கு வகிக்கிறது.
உண்ணும் முறை.......... எலுமிச்சையை துண்டுகளாக்கி சாலட்டில் சேர்த்து சுவைக்கலாம். எலுமிச்சை ஜூஸ் புத்துணர்ச்சி அளிக்கும். இனிப்பு மற்றும் உப்பின் சுவையில் பருகி மகிழலாம். உடனடி புத்துணர்ச்சிக்கு 'எலுமிச்சை டீ' செய்து குடிக்கலாம்.
எலுமிச்சை ஊறுகாயின் சுவை அலாதியானது. நீண்டகாலம் பயன்படுத்தலாம். எலுமிச்சை சாதம் மதிய சித்ரான்னங்களில் முக்கிய இடம் பிடிக்கிறது. பல்வேறு உணவுத் தயாரிப்பில் சுவை சேர்ப்பதற்காக எலுமிச்சை சேர்க்கப்படுகிறது. மருந்து தயாரிப்பிலும் பயன்படுகிறது.

No comments: