Wednesday, November 28, 2012

நீரிழிவு நோய் – சில அடிப்படை உண்மைகள்

image

உலக நீரிழிவு தினம் ஆண்டுதோறும் நவம்பர் 14ம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. உலகம் முழுவதும் அதிகரித்து வரும் நீரிழிவு நோய் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக கடந்த 1991ம் ஆண்டில் சர்வதேச நீரிழிவு மையம் மற்றும் உலக சுகாதார நிறுவனத்தால் இந்த விழிப்புணர்வு தினம் அறிமுகப்படுத்தப்பட்டது.
நாளை இந்த தினம் கடைப்பிடிக்கும் வேளையில், இந்நோய் குறித்து நீங்கள் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்…
இன்சுலின் என்ற முக்கிய ஹார்மோன் உற்பத்தியாவதிலும், அதன் செயல்பாடுகளில் குறை நேர்வதாலும் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு அதிகரித்து நீரிழிவு நோய் ஏற்படுகிறது. இதை மருந்துகளின் மூலமும், உடற்பயிற்சிகள் மூலமும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாம் என்றாலும், இதனால் பலவித நோய்கள் வர வாய்ப்புள்ளதால் குறைந்த வயதில் மரணம் ஏற்பட வழி வகுக்கிறது.
நீரிழிவு நோயில் இரண்டு வகை உண்டு. முதலாம் வகை, இன்சுலினை நம்பியுள்ள நீரிழிவு நோய் என அழைக்கபடுகிறது. இது குழந்தையாக இருக்கும் போதே ஏற்படக்கூடியது ஆகும். 2ம் வகை வயதான பின் வரும் நோய். இதை பெரும்பாலும் மருந்துகள் மற்றும் உடற்பயிற்சி மூலம் கட்டுக்குள் கொண்டுவர முடியும்.
முதலாம் வகை, சில உடல் எதிர்ப்பு சக்தியால் பாங்கிரியாஸின் பீட்டா செல்கள் அழிக்கப்படுவதால் இன்சுலின் அளவு குறைந்தும்,
இன்னும் சிலருக்கு இன்சுலினை வீரியம் உள்ளதாக வைக்கும் சக்தி குறைவதாலும் உண்டாகிறது. இதற்கு சர்க்கரை அளவை அவ்வப்போது சரி பார்த்து இன்சுலின் ஊசி போட்டுக் கொள்ள வேண்டும். இது குழந்தைகளையும் இளம் வயதினரையும் தாக்கும். மரபணு குறைபாடு, சுற்றுப்புறம் மற்றும் உடலின் சுய எதிர்ப்பு தன்மை இவற்றால் வரும் இவ்வகை நீரிழிவு நோய்க்கு எந்தவித தடுப்பும் உபயோகப்படாது. நீரிழிவில் பாதிக்கப்பட்டவர்களில் 5ல் இருந்து 10% பேர் இந்த வகை நோயை கொண்டிருக்கிறார்கள்.
நீரிழிவு நோய் உள்ளவர்களில் 90% பேருக்கு இரண்டாம் வகை நீரிழிவு நோய் கொண்டிருக்கிறார்கள். இன்சுலினுக்கு எதிர்ப்பு சக்தி உண்டாவதால் இந்நோய் வருகிறது. இன்சுலினுக்கு தேவை அதிகரிக்க அதிகரிக்க பாங்கிரியாஸ் உற்பத்தியை நிறுத்துகிறது. உடல் எடை அதிகமாக உள்ளவர்கள், சர்க்கரை செரிமான குறைவு, குடும்பத்தில் ஏற்கனவே சர்க்கரை நோய் இருத்தல், அதிக உடல் இயக்கம் இல்லாதது போன்றவை இதற்கு காரணம்.
மூன்றாவது வகை நீரிழிவு நோய் கருத்தரிக்கும் போது வரும். சில பெண்கள் உடல் எடை அதிகமாக இருந்தால், அவர்களின் குடும்ப வரலாறை பொறுத்து இந்த நீழிவு நோய் வர வாய்ப்புண்டு. குழந்தை பிறந்த பின் இதில் 5% பெண்களுக்கு இரண்டாம் வகை நீரிழிவு நோய் வரக்கூடும்.

No comments: