மரங்கள் நடவும், உரங்கள் இடவும் ஏற்ற தருணம்
பருவமழை தொடங்கியிருப்பதைத் தொடர்ந்து மரங்கள் நடவும், உரங்கள் இடவும் இதுவே ஏற்ற தருணம் என, தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்கியுள்ளனர்.பழ மரங்களை வீடுகளிலும், தோட்டங்களிலும் வளர்ப்பது சுற்றுச்சூழல் மாசையும் நீக்கி, சுவையான சத்தான கனிகளையும் தருகின்றன. இப்போது மழை பெய்து வருவதால் பழ மரங்களை நடவு செய்வதற்கும், ஏற்கெனவே உள்ள பழ மரங்களுக்கு உரமிட்டு பராமரிப்பதற்கும் இதுவே உகந்த தருணம்.
மா நடவு முறைகள்:
வரிசைக்கு வரிசை 7-10 மீ., செடிக்குச் செடி 7- 10 மீ. இடைவெளியில் நடவு செய்யலாம்.
அடர் நடவானால் வரிசைக்கு வரிசை 5 மீ., செடிக்குச் செடி 5 மீ. இடைவெளியில் நடவு செய்யலாம்.
3 அடி ஆழம், 3 அடி அகலம் அளவில் எடுக்கப்பட்ட குழிகளில் 10 கிலோ தொழு உரம், 1 கிலோ வேப்பம் புண்ணாக்கு, 1.3 சதவீத லிண்டேண் குருணை 100 கிராம் ஆகியவற்றை மேல் மண்ணுடன் கலந்து இட்டு, ஒட்டு மரக்கன்றுகளை குழியின் நடுவில் நடவு செய்ய வேண்டும்.
மா உர நிர்வாகம்:
முதலாமாண்டு ஒரு மரத்துக்கு 10 கிலோ தொழு உரம், 450 கிராம் யூரியா, 1250 கிராம் சூப்பர் பாஸ்பேட், 500 கிராம் மூரேட் ஆப் பொட்டாஷ் உரங்களை இடவேண்டும். ஒவ்வொரு ஆண்டும் மரம் ஒன்றுக்கு முந்தைய ஆண்டு உர அளவுடன் 10 கிலோ தொழு உரம், 450 கிராம் யூரியா, 1250 கிராம் சூப்பர் பாஸ்பேட், 500 கிராம் மூரேட் ஆப் பொட்டாஷ் உரங்களை கூடுதலாக சேர்த்து இடவேண்டும்.
ஆறாமாண்டு முதல் ஒரு மரத்துக்கு 50 கிலோ தொழு உரம், இரண்டே கால் கிலோ யூரியா, ஆறே கால் கிலோ சூப்பர் பாஸ்பேட், இரண்டரை கிலோ மூரேட் ஆப் பொட்டாஷ் உரங்களை இடவேண்டும். இந்த உரங்களை ஆண்டுக்கு இருமுறையாகப் பிரித்து இடலாம்.
நெல்லி நடவு முறைகள்:
வரிசைக்கு வரிசை 6 மீ., செடிக்குச் செடி 6 மீ. இடைவெளியில் நடவு செய்யலாம். 2 அடி ஆழம், 2 அடி அகலம் அளவில் எடுக்கப்பட்ட குழிகளில் 10 கிலோ தொழு உரம், 1 கிலோ வேப்பம் புண்ணாக்கு, 1.3 சதவீத லிண்டேண் குருணை 100 கிராம் ஆகியவற்றை மேல் மண்ணுடன் கலந்து இட்டு, ஒட்டு மரக்கன்றுகளை குழியின் நடுவில் நடவு செய்ய வேண்டும்.
நெல்லி உர நிர்வாகம்:
நான்காமாண்டு காய்க்கத் தொடங்கியதும், ஆண்டுக்கு ஒரு மரத்துக்கு 50 கிலோ தொழு உரம், ஒன்றரை கிலோ யூரியா, ஒரு கிலோ சூப்பர் பாஸ்பேட், ஒரு கிலோ மூரேட் ஆப் பொட்டாஷ் உரங்களை இரு முறையாகப் பிரித்து இடவேண்டும்.
காய்களில் கரும்புள்ளிகளும், பழுப்பு நிறம் கலந்து காணப்படுவது போரான்சத்து பற்றாக்குறையாகும். 100 லிட்டர் நீரில் 600 கிராம் போராக்ஸ் கலந்து ஒரு மாத இடைவெளியில் இருமுறை தெளித்து இந்தக் குறைபாட்டை நீக்கலாம்.
சப்போட்டா நடவு:
வரிசைக்கு வரிசை 8 மீ., செடிக்குச் செடி 8 மீ. இடைவெளியில் நடவு செய்யலாம்.
அடர் நடவானால் வரிசைக்கு வரிசை 8 மீ., செடிக்குச் செடி 4 மீ. இடைவெளியில் நடவு செய்யலாம்.
3 அடி ஆழம், 3 அடி அகலம் அளவில் எடுக்கப்பட்ட குழிகளில் 10 கிலோ தொழு உரம், 1 கிலோ வேப்பம் புண்ணாக்கு, 1.3 சத லிண்டேண் குருணை 100 கிராம் ஆகியவற்றை மேல் மண்ணுடன் கலந்து இட்டு, ஒட்டு மரக்கன்றுகளை குழியின் நடுவில் நடவு செய்ய வேண்டும்.
சப்போட்டா உர நிர்வாகம்:
முதலாமாண்டு ஒரு மரத்துக்கு 10 கிலோ தொழு உரம், 450 கிராம் யூரியா, 1250 கிராம் சூப்பர் பாஸ்பேட், 500 கிராம் மூரேட் ஆப் பொட்டாஷ் உரங்களை இடவேண்டும். ஒவ்வொரு ஆண்டும் மரம் ஒன்றுக்கு முந்தைய ஆண்டு உர அளவுடன் 5 கிலோ தொழு உரம், 220 கிராம் யூரியா, 150 கிராம் சூப்பர் பாஸ்பேட், 70 கிராம் பொட்டாஷ் உரங்களை கூடுதலாக சேர்த்து இடவேண்டும்.
ஆறாமாண்டு முதல் ஒரு மரத்துக்கு 50 கிலோ தொழு உரம், இரண்டே கால் கிலோ யூரியா, ஆறே கால் கிலோ சூப்பர் பாஸ்பேட், இரண்டரை கிலோ மூரேட் ஆப் பொட்டாஷ் உரங்களை இடவேண்டும். இந்த உரங்களை ஆண்டுக்கு இரு முறையாகப் பிரித்து இடலாம்.
எலுமிச்சை நடவு:
வரிசைக்கு வரிசை 5 மீ., செடிக்குச் செடி 5 மீ. இடைவெளியில் நடவு செய்யலாம்.
இரண்டரை அடி ஆழம், இரண்டரை அடி அகலம் என்ற அளவில் எடுக்கப்பட்ட குழிகளில் 10 கிலோ தொழு உரம், 250 கிராம் வேப்பம் புண்ணாக்கு, இட்டு நடவு செய்ய வேண்டும்.
எலுமிச்சை உர அளவு:
முதலாமாண்டு ஒரு மரத்துக்கு 10 கிலோ தொழு உரம், 450 கிராம் யூரியா, 600 கிராம் சூப்பர் பாஸ்பேட், 160 கிராம் பொட்டாஷ் உரங்களை இடவேண்டும்.
ஒவ்வொரு ஆண்டும் மரம் ஒன்றுக்கு முந்தைய ஆண்டு உர அளவுடன் 10 கிலோ தொழு உரம், 450 கிராம் யூரியா, 1250 கிராம் சூப்பர் பாஸ்பேட், 500 கிராம் மூரேட் ஆப் பொட்டாஷ் உரங்களை கூடுதலாகச் சேர்த்து இடவேண்டும்.
ஆறாமாண்டு முதல் ஒரு மரத்துக்கு 30 கிலோ தொழு உரம், 1350 கிராம் யூரியா, 1250 கிராம் சூப்பர் பாஸ்பேட், 500 கிராம் ஆப் பொட்டாஷ் உரங்களை இடவேண்டும்.
இவ்வாறு இடும் உரங்களில் யூரியாவை மட்டும் மார்ச்சிலும், அக்டோபரிலும் பாதிப்பாதியாக பிரித்து வைக்க வேண்டும். எஞ்சிய உரங்களான தொழு உரம், சூப்பர் பாஸ்பேட், பொட்டாஷ் உரங்களை அக்டோபரில் மட்டும் வைக்க வேண்டும்.
கொய்யா நடவு:
வரிசைக்கு வரிசை 6 மீ., செடிக்குச் செடி 6 மீ., இடைவெளியில் நடவு செய்யலாம்.
ஒன்றரை அடி ஆழம், ஒன்றரை அடி அகலம் அளவில் எடுக்கப்பட்ட குழிகளில் 10 கிலோ தொழு உரம், 250 கிராம் வேப்பம் புண்ணாக்கு, 1.3 சதவீத லிண்டேண் குருணை 100 கிராம் ஆகியவற்றை மேல் மண்ணுடன் கலந்து இட்டு, கொய்யா பதியன் கன்றுகளை குழியின் நடுவில் நடவு செய்ய வேண்டும்.
கொய்யா உர நிர்வாகம்:
காய்க்கத் தொடங்கிய மரங்களுக்கு மார்ச் மற்றும் அக்டோபர் மாதங்களில் ஒரு மரத்துக்கு 50 கிலோ தொழு உரம், இரண்டே கால் கிலோ யூரியா, ஆறே கால் கிலோ சூப்பர் பாஸ்பேட், ஒன்றே முக்கால் கிலோ மூரேட் ஆப் பொட்டாஷ் உரங்களை இரு முறையாகப் பிரித்து இடவேண்டும்.
கொய்யாவில் மகசூலை மேம்படுத்த ஒரு சதவீதம் யூரியா (ஒரு லிட்டர் நீருக்கும் 10 கிராம் யூரியா) மற்றும் அரை சதம் துத்தநாக சல்பேட் (ஒரு லிட்டர் நீருக்கு 5 கிராம் துத்தநாக சல்பேட்) கலந்த கரைசலை மார்ச் மற்றும் அக்டோபர் மாதங்களில் மரங்களின் மேல் இலைவழி உணவாகத் தெளிக்க வேண்டும்.
பழ மரக்கன்றுகளை ஒட்டுப் பகுதி தரைமட்டத்தில் இருந்து அரை அடி உயரத்தில் இருக்குமாறு நடவு செய்ய வேண்டும். ஆதரவுக்கு குச்சி ஒன்று நட்டு தளர்வாகக் கட்டிவிட வேண்டும். உரங்களை மரத்தில் இருந்து ஒன்றரை அடி தள்ளி இலைப் பரப்புக்குள் அரைவட்டமாக ஒரு அடி ஆழக்குழி எடுத்து வைத்து மூடலாம் என்றார் அவர்.
தினமணி தகவல் :
திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநர் சு.பாலசுப்பிரமணியன்
No comments:
Post a Comment