Thursday, February 9, 2012

இன்மையில் நன்மை தருவார்

எந்தப் பிறவியில் என்ன புண்ணிய பாவம் செய்துள்ளோமோ அதைப் பொருத்தே அவரவர் வாழ்க்கை அமையும் என்பார்கள். அதேநேரம், இந்தப் பிறவியில் புண்ணியம் செய்திருந்து, அதற்குரிய பலனை உடனே அனுபவிக்க வேண்டுமானால், நாம் வழிபட வேண்டிய தெய்வம், மதுரையில் எழுந்தருளி அருள்பாலிக்கும் இம்மையிலும் நன்மை தருவார். இம்மை என்றால் `இப்பிறவி' என்று பொருள். இந்த பிறவியிலேயே நன்மைகள் அருள்வதால் அவருக்கு அந்தப் பெயர் ஏற்பட்டது.
இவரை, `இன்மையில் நன்மை தருவார்' என்றும் சொல்வதுண்டு. `இன்மை' என்றால் `இல்லை' என்று பொருள். கடந்த பிறவியில், புண்ணியமே சேர்த்து வைக்காமல் போயிருந்தாலும் கூட, அதற்காக பிராயச்சித்தம் கேட்டு பிரார்த்தித்தாலும், அவர்களுக்கு அப்போதே நன்மை அருளுபவர் இவர் என்பதால் இந்த பெயர் ஏற்பட்டதாகச் சொல்கிறார்கள்.
இக்கோவில் கருவறையில் சிவனும், மத்தியபுரிநாயகி அம்மனும் ஒரே பீடத்தில் அமர்ந்திருக்க, அவர்கள் முன்னால் சிவலிங்கம் இருக்கிறது. இவர்கள் லிங்க பூஜை செய்வதாக ஐதீகம்.
ஒருமுறை சக்தியும், சிவனும் மானிட வடிவெடுத்து மீனாட்சியாகவும், சுந்தரேஸ்
வரராகவும் மதுரை வந்தனர். அவர்கள் மதுரை நகரின் ஆட்சிப்பொறுப்பைக் கையில் எடுத்தனர். பட்டாபிஷேகம் நடக்கும் முன், இறைவனை வழிபட எண்ணினர். சிவன் மானிடப்பிறவியாக வந்து விட்டதால், லிங்க பூஜையின் மகிமையை உலகுக்கு வெளிப்படுத்தும் விதத்தில், தனக்குத்தானே பூஜை செய்வதற்காக லிங்கம் ஒன்றை வடித்தார்.
அந்த லிங்கமே இக்கோவிலில் உள்ள சிவலிங்கம். அந்த லிங்கத்துக்கு பூஜை செய்ய கையில் மலர் ஏந்தியுள்ளார் இறைவனாகிய இம்மையிலும் நன்மை தருவார். இவரது அருகிலுள்ள அம்பிகை கையில் மலர் வைத்திருக்கிறாள்.
இப்போதும், ஆவணி மாதத்தில் சுந்தரேஸ்வரருக்கு பட்டாபிஷேகம் நடக்கும் முன், இந்தக் கோவிலுக்கு வந்து லிங்க பூஜை செய்யும் வழக்கம் உள்ளது.
இங்குள்ள அம்மன் மத்தியபுரிநாயகி கருணை மிக்கவள். திருமணத் தடையுள்ள கன்னிப்பெண்கள், இவளுக்கு மாங்கல்யம் அணிவித்து வணங்கினால் உடனடியாக திருமணம் நடக்கும் என்பது நம்பிக்கை.
அதேநேரம், இவளை கண்டிப்பானவள் என்றும் சொல்கிறார்கள். நம்மிடம் யாரேனும் நீதி தவறி நடந்து கொண்டாலோ, ஏமாற்றினாலோ அல்லது பிறவகையில் துன்பம் செய்தாலோ இவளிடம் முறையிட்டால் போதும், தக்க தண்டனையை அந்த நபர்களுக்கு கொடுத்து விடுவாள் என்கிறார்கள்.
இப்படி கருணையும், கண்டிப்பும் மிக்க மத்தியபுரி நாயகிக்கும், இம்மையில் நன்மை தருவாருக்கும் நடக்கும் திருமணத்தைக் காண்பவர்கள் இந்தப் பிறவி எடுத்த பயனை இப்போதே அடைவர்; வாழும் காலத்தில் நிறைந்த செல்வமும், வாழ்வுக்குப் பிறகு மோட்சமும் பெற்று சிறப்படைவர் என்பது ஐதீகம்.
மதுரை நகரின் மத்தியில், பெரியார் பஸ் நிலையத்தில் இருந்து புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் கோவிலுக்கு செல்லும் வழியில் இக்கோவில் அமைந்துள்ளது.

No comments: