பெரும்பாலான கோள்கள், நட்சத்திரங்கள் போன்ற பெரிய விண்பொருள்கள் கோள வடிவிலேயே உள்ளன. கோள்களும் நட்சத்திரங்களும் இப்படி இருப்பதற்குக் காரணமாக இருப்பது இரண்டு விசைகள். இந்த இரண்டு விசைகளில் ஒன்றாக இருக்கும் ஈர்ப்புவிசை, மற்றொரு விசையை சமநிலைப்படுத்துகிறது.
நட்சத்திரங்களில் அடங்கியுள்ள பருப்பொருளை வெளிப்புறமாக இழுக்கும் வெப்ப அழுத்தத்தை சமநிலைப்படுத்தும் வகையில் ஈர்ப்புவிசை செயல்படுகிறது. அதேநேரம் கோள்களில், ஈர்ப்பு விசைக்கு எதிராக சம்பந்தப்பட்ட பொருளில் இயற்கையாகவே உள்ள எதிர்ப்பு சக்தி, பருப்பொருள் ஒடுங்கிப் போகாமல் இருக்கும் வகையில் சமநிலையை உருவாக்குகிறது. கோள்கள், நட்சத்திரங்கள் ஆகிய இரண்டிலும் உள்ள இந்த சக்திகள்
எப்போதும் சமநிலையில் இருக்க முயற்சிப்பதால், அந்த இரண்டு விசைகளின் செயல்பாடுகளுக்கு ஈடுகொடுக்கும் வசதியான வடிவத்திலேயே சம்பந்தப்பட்ட பொருள் உருக்கொள்கிறது. வடிவியல் ரீதியில் கோளம் மிகவும் சமநிலையான, உறுதியான வடிவமைப்பு. எனவே, பெரும் கோள்களும் நட்சத்திரங்களும் கோள வடிவத்திலேயே உள்ளன.
பூமியில் இருந்து வெறும் கண்களால் பார்க்கும்போது நட்சத்திரங்கள் ஐந்து வால்களுடன் தோற்றம் தந்தாலும், உண்மையில் கோள வடிவத்திலேயே உள்ளன. நமது பார்வைக்குத்தான், அவற்றின் வெளிச்சம் நட்சத்திர வடிவில் வால்களுடன் தோற்றம் தருகிறது.
No comments:
Post a Comment