1. பக்க வாத நோய் (ஸ்டிரோக்) என்றால் என்ன? மூளை செயல்பட தேவையான சத்து, இதயத்தில் இருந்து ரத்தக் குழாய்கள் மூலம் எடுத்துச் செல்லப்படுகிறது. ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படும்போது, மூளையின் சில பாகங்கள் செயல் இழப்பதால், நம் உடலின் சில பாகங்கள் செயல் இழக்கின்றன. இதைத் தான் பக்கவாதம் என்கிறோம். இது, இதயத்தில் ஏற்படும் மாரடைப்பு போன்றது தான். இதை மூளை அடைப்பு என்று சொல்லலாம்.
2. பக்கவாதத்தில் வகைகள் உண்டா?
தற்காலிக பக்கவாதம், தொடர் பக்கவாதம், முற்றுப்பெற்ற பக்கவாதம் என, மூன்று வகைகளாக பிரிக்கலாம்
. ரத்தக் கசிவால் தற்காலிக பக்கவாதம் ஏற்படுகிறது; சில நிமிடங்களுக்கு மேல் நீடிக்காது. பாதிப்புகள், சில நிமிடங்களில் நீங்கிவிடும் என்றாலும், பிற்காலத்தில் கடும் பக்கவாதம் ஏற்பட வாய்ப்புண்டு.
3. தொடர் பக்கவாதம், முற்றுப்பெற்ற பக்கவாதம் என்பது?
தொடர் பக்கவாதம் என்பது, ரத்தக் குழாய்களில் ரத்த உறை பொருள் தோன்றுவதாலோ, மூளை புற்றுக்கட்டி பாதிப்பாலோ, மூளை உறைக்கு அடியில் ரத்தம் கசிந்து, அதன்பின் ஏற்படும் ரத்த தேக்கத்தினாலோ வருவது. இதனால், திடீரென, ரத்தக் குழாய் அடைப்போ, ரத்தக் கசிவோ ஏற்படாது; கொஞ்சம் கொஞ்சமாக, நாட்கணக்கில் பாதிப்பு தொடரும். முற்றுப்பெற்ற பக்கவாதம் என்பது, ஓரிரு மணி நேரத்திலேயே ஏற்பட்டு விடும். எளிதில் குணப்படுத்த முடியாது. ரத்தக்குழாயில் ஏற்படும் அடைப்பு சிறிதாக இருந்தால், பாதிப்பு சிறிய அளவிலும், ரத்தக்குழாய் அடைப்பு, ரத்தக்கசிவு பெரிய அளவில் இருந்தால், பாதிப்பும் பெரிதாக இருக்கும்.
4. பாதிப்புக்கான காரணங்கள் என்ன?
உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இதய நோய்கள், அதிக கொழுப்புச்சத்து, ரத்தக்குழாயில் கொழுப்பு படிதல், அதிக உடல் எடை மற்றும் உடல் பருமன், புகைத்தல், புகையிலை பழக்கம், மது அருந்துதல், ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம், சோம்பேறியான வாழ்க்கை முறை, நாட்பட்ட மன அழுத்தம், உடற்பயிற்சி இன்மை மற்றும் நாட்பட்ட தொற்று கிருமி பாதிப்பாலும், பக்கவாதம் வரலாம்.
5. நோயின் அறிகுறிகள் என்ன?
வாய் ஒரு பக்கம் கோணுதல், பேச்சு குழறல் அல்லது பிறர் பேசுவது புரியாமல் இருத்தல், ஒரு பக்கம் கை, கால் செயல் இழத்தல் அல்லது மரத்துப் போதல், ஒரு பக்கம் பார்வை மங்குதல், திடீரென தலை சுற்றுதல், தடுமாற்றம், உடலின் ஒரு பக்கம் மரத்துப் போதல், சாப்பிடும்போதோ, தண்ணீர் குடிக்கும்போதே பொரை ஏறுதல். திடீர் மறதி, குழப்பமான மன நிலை போன்றவை அறிகுறிகள்.
6. எந்த வயதில் பாதிக்கும்?
உலகில், ஆறு பேரில் ஒருவருக்கு பக்கவாதம் வருகிறது; நிமிடத்திற்கு பத்து பேர் இறக்கின்றனர். 40 வயதுக்கு மேற்பட்டோருக்கு, 12 சதவீத பாதிப்பு ஏற்படுகிறது. முதியோரை மட்டுமல்ல, இளைஞர்கள், குழந்தைகளையும் இந்நோய் தாக்குகிறது.
7. அறிகுறி இருந்தால் என்ன செய்ய வேண்டும்?
அறிகுறி தெரிந்த மூன்று மணி நேரத்திற்குள், சி.டி.ஸ்கேன் எடுக்கும் வசதி உள்ள மருத்துவமனைக்குச் சென்று, மூளை அடைப்பை உறுதி செய்ய வேண்டும். மூன்று மணி நேரத்திற்குள், ரத்த அடைப்பு நீக்கும் மருந்து செலுத்தினால் பக்கவாதத்தின் தாக்கத்தைக் குறைக்கவோ, முற்றிலும் குணப்படுத்தவோ முடியும்.
8. தாமதமாக வந்தால் முடியாதா?
மூன்று மணி நேரத்திற்குள் வருவோருக்கு உரிய ஆய்வுகள் செய்து, இந்த மருந்தைச் செலுத்தி, நோய் தாக்குதலைத் தடுக்கலாம். அதற்குப்பின் வந்தால், மருந்தைப் போட்டாலும் பயனில்லை; பக்க விளைவுகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. எனவே தான், அந்த மூன்று மணி நேரத்தை பொன்னான நேரம் என்கிறோம்.
9. எல்லோருக்கும் இந்த மருந்தை போட முடியுமா?
பாதிப்புடன் வருவோருக்கு சில முக்கிய பரிசோதனைகள் செய்யப்படும். தகுதியான நபருக்கு மட்டுமே, ரத்த அடைப்பு நீக்கும் மருந்தை செலுத்த முடியும். எல்லோருக்கும் இந்த மருந்தை செலுத்தவிட முடியாது. சிலர் விவரம் தெரியாமல், டாக்டர்களிடம் தொந்தரவு செய்கின்றனர்.
10. பக்கவாதம் வராமல் தடுக்க என்ன வழி?
சர்க்கரை, உயர் ரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்த வேண்டும். புகை பிடித்தல், மது அருந்துவதைக் கைவிடவேண்டும். கொழுப்பு சத்தைக் கட்டுப்படுத்துதல், தினமும் உடற்பயிற்சி செய்தல், மன அழுத்தம் வராமல் பணிகளை எளிமைப்படுத்திக் கொள்வது அவசியம். ஆண்டுக்கு ஒரு முறையாவது ரத்த அழுத்தம், சர்க்கரை, கொழுப்பு, உப்பு பரிசோதனை செய்து கொள்வது அவசியம். அலட்சியமாக இருந்தால், பக்கவாதம் பாதித்து நம் குடும்பத்திற்கும், சமுதாயத்திற்கும் சுமையாகிவிடுவோம். அந்த நிலை வராமல் காப்பது அவரவர் கையில்தான் உள்ளது. டாக்டர் கே.பானு
பேராசிரியர், மூளை நரம்பியல் துறை,
சென்னை மருத்துவக்கல்லூரி, ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனை, சென்னை.
நன்றி-தினமலர்