Saturday, August 11, 2012

நாம் உட்கொள்ளும் உணவு

நாம் உட்கொள்ளும் உணவு வாயுனுள் ஆரம்பித்து ஆசனவாய் வழியாக சக்கையாக வெளிவரும் நிகழ்வுகளின் முழுமையான தகவல்கள். நேரம் கிடைக்கும் படித்து அறிந்துகொள்ளுங்கள் .

வாயிலே உணவைப்போட்டுக் கொள்கிறோம். திடப்பொருளானால் அதை மெல்கிறோம். திரவமானால் விழுங்குகிறோம். அது தொண்டையில் இறங்குகிறது. இந்த உணவுக்கு என்ன நேர்கிறது? ஜீரணமாதல் என்னும் சுவையான நிகழ்ச்சியைப் பற்றி இப்போது கவனிப்போம். நல்ல உணவுப் பழக்கங்களின் தேவையை உணரவும் இந்த விவரங்கள் பயன்படும்.

வாயிலே நேர்வது என்ன?

வாயிலே உணவை மெல்லும்போது அது சின்னஞ்சிறு துகள்களாக நொறுங்கி உமிழ்நீருடன் நன்றாகக் கலக்கிறது. வாயிலே எப்போதும் சுரக்கும், நிறமற்ற திரவமே உமிழ்நீர். உமிழ்நீர் வெறும் நீர்தானே என்று நினைக்கலாம். அப்படியல்ல அதிலுள்ள நுட்பமான என்ஸைம்கள் உணவை செரிக்கின்றன. உமிழ்நீரிலுள்ள என்ஸைம் பொருளாக மாற்றுகிறது.

சொல்லப்போனால். செரித்தல் என்பது இந்த இயக்கம்தான். இந்த மாற்றம் தான். எத்தனையோ விதமான உணவுப் பொருள்களை உடல் ஈர்த்துக் கொள்ளும் வண்ணம் பலவகை என்ஸைம்கள் மாற்றுவதும், அந்தச் சத்து உடலின் தேவைக்குப் பயன்படுவதுமே செரித்தல் என்னும் இயக்கம். என்ஸைம்களை உடலின் பல உறுப்புகள் தயாரிக்கின்றன. உணவை ஜீரணிக்க ஏற்ற இடங்களில் இந்தச் சாற்றைச் செலுத்துகின்றன. கடைசியாக, செரித்ததுபோக எஞ்சிய பொருளே மலமாக வெளியேறுகிறது. ஜீரண இயக்கத்தை படிப்படியாக தொடர்ந்து பார்ப்போம்.

சாப்பிடத் தொடங்கும் போது, ஏன், நல்ல உணவு மணக்கும் போதே, வாயிலே நீர் சுரக்கிறது. வாயிலுள்ள மூன்று ஜோடி உமிழ்நீர்ச் சுரப்பிகளிலிருந்து உமிழ்நீர் சுரக்கிறது. இரண்டு காதுகளுக்கும் கீழ், முன்புறத்தில் ஒரு ஜோடி; கீழ்த்தாடையின் பின்புறம் ஒரு ஜோடி; நாக்கின் அடியில் மூன்றாவது ஜோடி. தினமும் நமது வாயில் சுரக்கும் உமிழ்நீர் சுமார் பத்து கப் இருக்கும் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். உமிழ்நீரிலிருக்கும் என்ஸைம், கார்போஹைடிரேட்டைப் பொடிப்பொடி யாக்கி, எளிதில் கரையும் சர்க்கரைப் பொருளாக மாற்றுகிறது என்று பார்த்தோம். உணவைக் கடித்து மென்றால். உமிழ்நீர் தன் வேலையைச் செய்ய உதவியாக இருக்கும். அதனால் தான் ஒவ்வொரு கவளத்தையும் முப்பத்திரண்டு முறை – எத்தனை பற்கள் உண்டோ அத்தனை முறை – கடித்து மெல்ல வேண்டும் என்று வேடிக்கையாகச் சொல்வதுண்டு.

அடுத்து, உணவு தொண்டையில் இறங்குகிறது. விழுங்கும்போது தொண்டையிலே தளரும் குரல்வளை மூடி, சரியாக வழிவிட்டு, உணவுக் குழாய்க்குள் உணவு செல்லுமாறும் அதற்கு அருகிலேயே உள்ள காற்றுக் குழாய்க்குள் போகாமலும் பார்த்துக் கொள்கிறது. எப்போதாவது இந்த மூடி உடனுக்குடனே மூடிக்கொள்ளாமல் ஒரு சிறு பருக்கையோ, ஒரு துளி திரவமோ காற்றுக் குழாய்க்குள் நுழைந்துவிடும். அப்போது நாம் என்ன பாடுபடுகிறோம். இருமல் வருகிறது. புரை ஏறுகிறது. கண்ணிலே நீர் வந்துவிடுகிறது.

இரைப்பை

விழுங்கப்பட்ட உணவு, உணவுக்குழாய் வழியாக இறங்கி, இரைப்பை என்னும் முக்கியமான உறுப்புக்குள் வந்து சேர்கிறது. இது ஒரு பை போன்றது. ஓயாமல் சுருங்கி, விரிந்து இயங்கிக் கொண்டேயிருக்கும் பை. இந்த அசைவினால் உள்ளே இருக்கும் உணவு நன்கு அரைக்கப்படுகிறது. இரைப்பைக்குள் பல புதிய என்ஸைம்கள் சேர்கின்றன. இரைப்பையின் உட்சுவரில் உள்ள சுரப்பிகள் சுரக்கும் என்ஸைம்கள், இவை இவற்றிலே ஒன்று ரென்னின்; நாம் பால் அருந்தியிருந்தால். அதிலுள்ள புரோட்டீனை மெத்தென்ற தயிராக்குவது இதுவே. மற்றொரு என்ஸைம், பெப்சின். இது புரோட்டீன் வகைகளை பெப்டோன் என்னும் எளிதில் கரையும் ஜீரணப் பொருளாக மாற்றுகிறது.

பெரிய அளவில் ஹைடிரோகுளோரிக் அமிலத்தைத் தயாரிக்கிறது. இரைப்பை. இரசாயனச் சோதனைச் சாலைகளில் கண்ணாடிக் குப்பியில் வைத்திருக்கும் அதே அமிலம் தான். இந்த அமிலம் செய்யும் வேலைகள் பல. ஒன்றோடொன்று இணைந்திருக்கும் புரோட்டீன் துகள்களை இது வளரச் செய்து தகர்க்கிறது. இந்த புரோட்டீன்களை பெப்டோனாக மாற்றும் வேலையில் ஈடுபட்டுள்ள பெப்சின் என்னும் என்ஸைமுக்கு ஒரு வலுவைத் தருகிறது. பலவகை உணவுகளில் கலந்துள்ள கனிமச்சத்தைப் பிரித்தெடுப்பதும் இந்த அமிலம்தான்; உணவுடன் வந்து சேர்ந்துவிடும் பாக்டீரியா நுண் கிருமிகளை அழிப்பதும் இதுவே. வாயிலே உணவு இருப்பது சில நிமிட நேரம் தான்.

ஆனால் இரைப்பையிலே அது பல மணிநேரம் தங்குகிறது. நன்றாகச் சாப்பிட்ட பின்னர் சுமார் இரண்டு மணி நேரம் வரை ரென்னின், பெப்சின், ஹைடிரோ குளோரிக் அமிலம் மூன்றும் இரைப்பையில் மிக அதிகம் சுரக்கின்றது. ஜீரணப் பணி வெகு தீவிரமாக நடைபெறுகிறது. இரைப்பையில் நிகழ்வது என்ன என்பதைச் சுருக்கமாகச் சொல்வதானால், பெரும்பாலும் புரோட்டீன் பண்டங்கள் துகளாகி, இரண்டும் என்ஸைம்கள் மற்றும் ஹைடிரோ குளோரிக் அமிலத்தின் உதவியுடன் பெப்டோன்களாக மாறுகின்றன எனலாம். மருத்துவர்கள் இரைப்பை நிகழ்ச்சியை ‘காஸ்ட்ரிக் ஜீரணம்’ என்கிறார்கள்.

அவ்வப்போது இரைப்பையின் அடிவாய் மூடி சிறிது திறந்து கொள்ளும்; ஓரளவு ஜீரணமான உணவு – கூழாய், பசையாய் விளங்கும் உணவு – அதன் வழியே செல்லும் மூடி உடனுக்குடன் மூடிக்கொள்ளும். நமது உடலுக்குள் நிகழும் அற்புத இயக்கங்களிலே இதுவும் ஒன்று. இரைப்பையிலே உணவு நெடுநேரம் தங்கிச் சிறிது சிறிதாக வெளியேறுவதால் நாம் தினம் மூன்று நாலுமுறை உணவு உண்டால் போதும். இரைப்பை ஒரேடியாகக் காலியாகிவிட்டால், அப்புறம் பசி நம்மை எப்போதும் வாட்டிக் கொண்டே இருக்கும்!

சிறுகுடல்

கூழான, பாதி செரித்த உணவு எடுத்துச் செல்லும் பகுதியே சிறுகுடல். இதன் மேல் பகுதிக்கு டியோடினம் என்று பெயர். இது ஓரடி நீளம் இருக்கும். சிறுகுடலின் பிற பகுதியைவிட அகன்றது இந்தப் பகுதி. இந்த டியோடினத்திற்குள் சொட்டுச் சொட்டாகக் கொட்டுகிறது ஓர் என்ஸைம் சாறு. இது இரண்டு பொருள்களின் கலவை. ஒன்று பித்தச் சாறு, கல்லீரலிலிருந்து வரும் காடியான சாறு. இரைப்பைக்கும் குடலுக்கும் இடையிலுள்ள கணையம் என்னும் உறுப்பிலிருந்து வருவது மற்றொரு சாறு. இந்த உறுப்புகள் எங்கே உள்ளன என்பதை அறிய உதவுகிறது. வரைபடம் மூன்றாவது பொருள் ஒன்றும் ஜீரணத்துக்கு உதவுகிறது. இதுவே குடல்சாறு, குடலில் வழியெங்கும் சுரக்கும் சாறு இது. நமது சிறுகுடல் மெல்லியதாக இருந்தாலும் மிகவும் நீண்டது; நம் உயரத்தைப்போல் ஐந்தாறு மடங்கு இருக்கும்! அதனால் அது பக்குவமாக, கச்சிதமான மடிப்புகளுடன், வயிற்றுக்குள், தொப்புளுக்குப் பின்னே உள்ளது. இந்த நீண்ட சிறுகுடலுக்குள்ளே தான் ஜீரண இயக்கத்தின் பெரும் பகுதி நிகழ்கிறது.

ஜீரண இயக்கம் என்பது சற்றுச் சிக்கலான பணி. கணையம் அனுப்பும் சாற்றில் பல என்ஸைம்களும் உள்ளன. ஹார்மோன் என்னும் ஊக்குவிக்கும் சாறுகளும் உள்ளன. இவை எல்லாமாகச் சேர்ந்து, முன்னரே பெட்டோனாக மாறிய புரோட்டீன் உணவுகளை மேலும் தகர்க் கின்றன. தனித்தனி அமினோ அமிலங்களாக மாற்றுகின்றன. கணையச்சாறு, கார்போஹைடி ரேட் மற்றும் கொழுப்புச் சத்தை ஜீரணித்து விடுகிறது. கார்போ ஹைடிரேட் மாவுச் சத்தைச் கணையச் சாறு எளிதில் கரையும் குளுக்கோஸ் பொருளாக மாற்றுகிறது. கொழுப்பை இன்னும் எளிய பொருளாக மாற்றுகிறது. இந்த மாற்றத்தை நிகழ்த்த கல்லீரல் ஒரு பொருளைத் தயாரிக்கிறது.

மனித உடலில் கல்லீரல் தான் இரசாயன சோதனைச்சாலை. லிவர் என்னும் ஆங்கிலச் சொல்லுக்கு கல்லீரல் என்றும் பொருள்; வாழ்பவர் என்றும் பொருள். இதை வைத்து, வாழ்க்கை எப்படி இருக்கிறது? லிவரைப் பொறுத்து இருக்கிறது என்ற சிலேடையாகச் சொல்வதுண்டு. இரண்டு பொருளிலும் இது உண்மையான வாசகம். கல்லீரலுக்குள் இதயத்திலிருந்து இரத்தம் வருகிறது. இரத்தத்திலுள்ள சர்க்கரை அளவையும், தசைகளில் இவற்றின் சேமிப்பையும் சீராக வைத்துக் கொள்வது கல்லீரலின் பொறுப்பு. இது இரத்தத்திலிருந்து அமினோ அமிலங்களை எடுத்து புரோட்டீன் மாற்றி, சேகரித்து வைத்துக் கொள்கிறது. உடலில் வேறு எங்கேயாவது தேவைப்படும் போது இந்த புரோட்டீனை இரத்தத்தில் வழியாக அங்கே அனுப்புகிறது. உடலிலே விஷப்பொருள் ஏதாவது வந்துவிட்டால் இந்த விஷத்தை முறிப்பது கல்லீரலே. பல வைட்டமின்களையும் கனிச்சத்துகளையும் சேகரித்து வைத்துக் கொள்வதும் அதுவே.

கல்லீரல் தயாரிக்கும் பொருள்களில் ஒன்று பித்தச்சாறு. இது பசுமை கலந்த மஞ்சளான, காடியாபன ஒரு சாறு. அதிலே என்ஸைம் சத்து ஒன்றும் இல்லை. ஆனால் பல பயனுள்ள இரசாயனப் பொருள்கள் இதிலே உள்ளன. இவற்றின் வேலை, உணவை நுட்பமான சின்னஞ்சிறு துகள்களாக்கிக் கலவைச் சாறில் மிதக்கச் செய்து. இந்தச் சாற்றுக்கு எம்ல்ஷன் என்று பெயர். பால் இத்தகைய ஓர் எம்ல்ஸன்தான். உணவு இவ்வாறு எம்ல்ஸன் நிலைக்கு வந்துவிட்டால் என்ஸைம்கள் அதனை ஜீரணிப்பது எளிது. முக்கியமாக, கொழுப்புப் பொருளைப் பித்தநீர் இந்தப் பக்குவத்துக்குக் கொண்டு வந்தால் தான் குடலிலே இது ஜீரணமாகும்.

இவ்வாறு நாம் உண்ட உணவெல்லாம் நீரிலே கரையும் பல வகைத் துகள்களாகத் தகர்க்கப்பட்டுப் பல பொருள்களாக மாறுகின்றன. இதற்கு என்ன நேர்கிறது? இந்தச் சத்துக்கள் உடலிலே ஈர்க்கப்பட வேண்டும். இது நிகழ்வது சிறுகுடலிலேதான். சிறு குடலின் உட்சுவரிலே பல உள்ளன. இவற்றுக்கு ‘வில்லி’ என்று பெயர். ஜீரணமான உணவிலிருக்கும் சத்தை இவை உறிஞ்சிக் கொண்டு நேரே இரத்தத்தில் கலக்கச் செய்கின்றன. உடனே இரத்தம், தனது சுற்றோட்டத்தில் இந்தச் சத்துக்களை எடுத்து உடலெங்கும் பரப்புகிறது. ஜீரணமாக கொழுப்புச் சத்து நிணநீர் நாளத்தின் வழியாகத் தனியே எடுத்துச் செல்லப்படுகிறது. பிறகு கழுத்தின் அருகே இரத்தத்தில் அந்தச் சத்து கரையச் செய்கிறது. இவ்வாறு நாம் உண்ணும் உணவு இரத்தத்தை அடைகிறது. இரத்தத்தின் மூலம் உடலின் எல்லாப் பகுதிகளுக்கும் செல்கிறது. உடலுக்குச் சக்தி தரவும், உடல் வளர்ச்சிக்கும், உடலின் இயக்கங்களை நிறைவேற்றவும் உதவுகிறது.

வைட்டமின்களும் கனிச்சத்தும் சாதாரணமாக நீரில் கரையக் கூடியன. இல்லாவிட்டாலும் இரத்தத்தில் கரையும் வகையில் அவற்றுக்குத் தேவையான மாற்றம் தரமுடியும். வைட்டமின் ஏ மட்டும் விதிவிலக்கு. அது கொழுப்பில் கரைவது. சிறுகுடலில் கொழுப்பு போலவே இது உறிஞ்சப்படுகிறது. வைட்டமின்களும் கனிச்சத்தும் செரிமானத்தின் போது நுண்துகள்களாக உடைபடுவதில்லை இதர சத்துப் பொருள்கள் ஜீரணமானதும் இவை அப்படியே உடலிலே கரைந்து கலந்து விடுகின்றன.

பெருங்குடல் :

சிறுகுடலைத் தொடர்ந்துள்ள பெருங்குடல் வழவழப்பானது. சிறுகுடலில் உள்ளதுபோல அதற்குள்ளே உறிஞ்சுகுழாய் ஒன்றும் இல்லை. தடிமனான சைக்கிள் ட்யூபைப் போன்றது அது. படத்தைப் பார்த்தால் ‘ப’ எழுத்தைக் கவிழ்த்தது போன்று இது விளங்கக் காணலாம். ஜீரணமான உணவு இதன் வழியே செல்லச் செல்ல அதன் உட்சுவர் வழியே உணவிலுள்ள நீரேல்லாம் இரத்தத்திலே உறிஞ்சப்படுகிறது. இதனால் உணவு திரவநிலை குறைந்து திடப் பொருளாக மாறுகிறது. ஜீரணமான உணவிலே வேறு சில மாற்றங்களும் நேர்வதால் சற்று துர்நாற்றம் வருவதற்கும் காரணமாகிறது. ஜீரணமாகாத பொருளெல்லாம் சேர்ந்து ஆசன வாய் என்னும் வெளியேற்ற வழியாக மலமாக வெளியேறுகிறது

No comments: