Saturday, February 4, 2012

பல் இடைவெளி

"பல் இல்லேன்னா சொல் போச்சு' என்ற சொலவடை பழக்கத்தில் உள்ளது. முகத்தின் வடிவத்தை, கட்டமைப்புடன் வைப்பதில், பல்லுக்கு இன்றியமையாத பங்கு உண்டு.
பற்களைச் சுத்தமாக வைத்துக் கொள்ளவில்லை எனில், வெகு சீக்கிரமே சொத்தை ஏற்பட்டு, பல பிரச்னைகளைக் கொடுத்து விடும்.
அனைவரும், ஆண்டுக்கு ஒரு முறை, பல் மருத்துவரிடம் சென்று, பற்களைச் சுத்தம் செய்து, சீர்கேடு இருப்பின், சரி செய்து கொள்ள வேண்டியது அவசியம்.
நாற்பது வயதைத் தாண்டினாலே, பற்களில் இடுக்கு விழத் துவங்கி விடும். இதைப் பலரும் கவனத்தில் கொள்வதே இல்லை; கவனித்தாலும், முக்கியத்துவம் கொடுப்பதே இல்லை.
பற்களைக் கட்டுக்கோப்புடன் வைத்துக் கொள்ளாவிட்டால், முகம் விகாரமடையத் துவங்கும். பல் நகர்ந்த இடத்தில் ஏற்படும் குழிக்கு, மாற்றுப் பல் பொருத்திக் கொள்ளலாம்.
பல் குறித்த மேலும் பல சந்தேகங்களுக்கு, இதோ சில அறிவுரைகள்:
பற்சொத்தை, நுண்ணிய நரம்புகள் மற்றும் ரத்தக் குழாய்கள் உள்ள பகுதியை பாதிக்கும்போது, பல்வலி ஏற்படுகிறது. பற்சொத்தை ஆழமாக ஊடுருவியதால் வேர் சிகிச்சை மூலம் சுத்தம் செய்து, பல்லை அடைக்க வேண்டும்.
இச்சிகிச்சையின் போது பல்லிற்கு உணர்வு அளிக்கக் கூடிய நரம்புகள் மற்றும் ரத்தக்குழாய்கள் பாதிக்கப்படுவதால் அவை அகற்றப்படும். பல்லுக்கு நீர்ச்சத்துகள் இல்லாமல் இருந்தால் எளிதில் நொறுங்கும்.
வேர்சிகிச்சை முடிந்தபின், பல் மேல், "கேப்' செய்து பொருத்த வேண்டும். பல்லின் ஒரு பகுதி உடைந்து இருந்தால், வேர் சிகிச்சை செய்த வேர்களின் உள்ளே, "பேஸ்ட்' போன்ற சிறிய பொருளால் பல்லை உறுதிப்படுத்தி, "கேப்' செய்யலாம். இரண்டாக உடைந்து இருந்தால் அப்பல்லை எடுத்துவிட்டு செயற்கை பல்லை பொருத்த வேண்டும்.
குழந்தைகள் விளையாடும் போது...
ஸ்கேட்டிங், குத்துச்சண்டை, கால்பந்து விளையாட்டுக்களில் குழந்தைகளுக்கு முகத்தில் அடிபட வாய்ப்புகள் அதிகம். இவர்கள் "மவுத் கார்டு' உபகரணத்தை வாயினுள் பொருத்தி விளையாடலாம். இது ரப்பர் போன்று வளையும் தன்மை உடையது.
குழந்தைகள் தாடை அளவுக்கு ஏற்றாற்போல செய்யலாம். இதனால் விளையாடும்போது நேரடியாக பற்களுக்கு வரும் பாதிப்பை தவிர்க்கலாம்.
பல் இடைவெளிக்கு...
எல்லா பற்களிடையேயும் இடைவெளி இருந்தால் அவற்றை அடைப்பது தவறு. அப்படி அடைக்க முயன்றால், பற்களின் ஈறுகள் பாதிக்கப்படலாம். பற்கள் அளவு பெரிதாகவும் செயற்கையாகவும், தோற்றமளிக்கும். "கிளிப்' அணிவது சிறந்த வழி.
இதன் மூலம் பற்கள் தாடை எலும்பினுள் நகர்ந்து நெருங்குவதால், நிரந்தர சிகிச்சை முறையாக கருதப்படுகிறது. "கிளிப்' அணிய தயக்கமாக இருந்தால், தற்போது பற்களின் மேல் பொருந்தக் கூடிய நிறமில்லாத, கவர் போன்ற உபகரணங்கள் வந்துள்ளன.
அதை குறிப்பிட்ட கால அவகாசத்திற்கு அணிய வேண்டும். பற்கள் நகரத் துவங்கும்போது, வேறு, "செட்' வழங்கப்படும். பல்சீரமைப்பு நிபுணரை கலந்து ஆலோசனை பெற்று, தொடர் சிகிச்சையாக குறைந்த பட்சம் ஒரு ஆண்டு காலம் இவற்றை அணிந்தால் பற்களை சீராக்கலாம்.

No comments: