Monday, April 16, 2012

ரத்த அழுத்தத்திற்கான சிகிச்சையில் புரட்சி

ரத்த அழுத்தம் எந்த கட்டத்தில் இருந்தாலும், அதற்கான சிகிச்சை இருக்கிறதென்றாலும், இந்த பாதிப்பை தெரிந்து கொண்ட உடனே, சிகிச்சை எடுத்துக் கொண்டால், பல தேவையற்ற விளைவுகளையும், சிக்கலையும் தவிர்க்கலாம். உலக மக்கள் தொகையில் பாதிபேர், ரத்த அழுத்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்போது, 22 - 30 வயது நிரம்பியவர்களுக்குக் கூட, உயர் ரத்த அழுத்தம் இருப்பதை காணமுடிகிறது. குறிப்பாக, ஐ.டி., துறையிலுள்ள இளைஞர்கள், அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இதில், பெண்களும் அடங்குவர். கிடைத்த நேரத்தில், தகாத உணவு சாப்பிடும் பழக்கத்தால் இந்த நிலை.
இந்த ரத்த அழுத்த நோயின் விளைவுகள், வயது ஏற ஏற, அதிகமாகி கொண்டே வருகிறது. "ஸ்டிரோக்' என்ற, மூளையில் ரத்த கட்டி ஏற்பட்டு, தலை சுற்றல், மயக்கம், உடலின் பாதி செயலிழப்பு, இதய ரத்த குழாய் அடைப்பினால் ஏற்படும் மாரடைப்பு, மார்புவலி, மூச்சு இரைப்பு, படபடப்பு, இதய வீக்கம், இதயச் செயலிழப்பு, சிறுநீரக பாதிப்பு போன்றவை, உயர் ரத்த அழுத்தத்தின், தகாத விளைவுகள். இதனால், குடும்ப அமைதி இன்மை, பொருளாதார சீரழிவு, மருத்துவ செலவு போன்றவை ஏற்படுகின்றன. இந்த ரத்த அழுத்தத்தினால், ஸ்டிரோக் ஏற்பட்டு, பக்கவாதம் வந்து தடுமாறும் முதியோருக்கு, பராமரிப்புக்கான மருத்துவச் செலவு ஏற்படுகிறது. மேலும், இவர்களை கவனிக்க, தனிநபர் தேவை. இதனால், குடும்பத்தில் பொருளாதார சிக்கல் ஏற்படுகிறது. ஆக, முதியோர் வாழ்க்கை நரகமாகிறது. இந்த பாதிப்போடு, இதய நோயும் ஏற்பட்டு விட்டால், இந்த முதியவரை, குடும்பத்தின் மற்ற உறுப்பினர்கள், பாரமாக கருதுகின்றனர். இன்றைய இளைய சமூகத்தினரிடையே, முதியோர், வீட்டின் மூலையில் கிடக்கும் குப்பை போல் ஆகின்றனர்.
1ஏன் உயர் ரத்த அழுத்தம் குறைவதில்லை?
நவீன வாழ்க்கையின் வேகத்தில், பரபரப்பான நிலையற்ற வேலை, ஊதிய பற்றாக்குறை, ஆகியவற்றால், மன அழுத்தம், அடிக்கடி ஓய்வில்லாமல் பிரயாணம் செய்வது, சரியாக மருந்து, மாத்திரைகள் சாப்பிடாமல் இருப்பது, ஆகிய காரணங்களால், ரத்த அழுத்தம் குறையாத நிலை ஏற்படுகிறது. தனி மனித ஒழுக்கத்தை கடைப்பிடிக்காதது தான், இதற்கு காரணம். உடற்பயிற்சி, நடைபயிற்சி, கடுமையான உணவு கட்டுப்பாடு இல்லாததும், முக்கிய காரணம்.
2சிக்கலான உயர் ரத்த அழுத்தத்தை எப்படி கண்டறிவது?
பல ஆண்டுகளாக இருக்கும் ரத்த அழுத்தம், மேற்கூறிய காரணங்களால், மருந்துகளால் குறைக்க முடியாத நிலை ஏற்பட்டு, சிக்கலாகி விடுகிறது. ஒரு மாத்திரையின் அளவை, இரண்டு, மூன்று, நான்கு என்று கூட்டிய பிறகும், ரத்த அழுத்தம் குறைந்து, 130 / 90க்குள் வரவில்லை எனில், இது, சிக்கலான உயர் ரத்த அழுத்தம் என்று அழைக்கப்படுகிறது. விருதாசலத்திலிருந்து வரும், 58 வயதுள்ள என் நோயாளி ஒருவருக்கு, ரத்த அழுத்தம், 180/140க்கு குறைவதில்லை. இவருக்கு, எல்லாவித மருந்து மாத்திரைகள் கொடுத்தும் பலனில்லை. ஆஞ்சியோ கிராம் செய்யும் போது, மருந்து உள்ளே செலுத்திய நேரத்தில் மட்டும், ரத்த அழுத்தம் குறைந்தது. அதன் பின், அழுத்தம் பழையபடி, "எகிறி' விட்டது.
3ரத்த அழுத்தத்தில் சிறுநீரக பங்கு என்ன?
சில சமயங்களில், சிறுநீரகத்தில் ரெனின் என்ற, நொதி வெளி வருகிறது. இது, ராஸ் என்ற செயல்முறையை தூண்டுகிறது. இதனால், மூளையிலுள்ள நரம்பு மண்டலத்தை இயக்கி, ரத்த நாளத்தை சுருங்க வைத்து, உயர் ரத்த அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இந்த ரத்தநாள சுருக்கத்தினால் ஏற்படும் பின்விளைவு தான், ரத்த அழுத்தம். ஆக, முக்கிய காரணி சிறுநீரகத்தின் ரத்த நாளத்திலுள்ள, சிம்பதிட்டிக் நரம்புகள் தான். இதன் இயக்கத்தால் தான், ரத்த அழுத்தம் ஏற்படுகிறது. இதற்குத் தீர்வு, "ரீனல் நெர்வ்
டீனெர்வேஷன்' என்ற சிகிச்சை முறை.
4"ரீனல் நெர்வ் டீனெர்வேஷன்' இந்தியாவுக்கு வருமா?
முடியாது. காரணம், இந்த முறைக்கு செலவு அதிகம். அரசும் இதை அறிமுகப்படுத்த, ஏகப்பட்ட செலவாகும். இந்தியாவிலுள்ள கார்ப்பரேட், டிரஸ்ட் மருத்துவமனைகளுக்கு இது வர முடியும். இந்த சிகிச்சைமுறை, ஆய்வுகளில் உள்ளது.
இந்த சிகிச்சையின் பலன், எப்படி, எத்தனை நாள் இருக்கும், திரும்பவும் உயர் ரத்த அழுத்தம் வருமா, நரம்பு உயிர் பெற்று எழுந்து, ரத்த அழுத்தம் மீண்டும் திரும்புமா என்பது போன்ற, ஆயிரக்கணக்கான கேள்விகளுக்கு பதில் இல்லை!
பொறுத்திருந்து பார்ப்போம்.
"ரீனல் நெர்வ் டீனெர்வேஷன்' சிகிச்சை முறை
இது, 2011ல், பாரீசில் நடந்த, ஐரோப்பிய இதய நோய் கழகத்து ஆண்டு மாநாட்டு துவக்க உரையாக இருந்தது. சிறுநீரகத்திற்கு ரத்தத்தை எடுத்துச் செல்லும் ரத்த நாளத்தின் உட்சுவரில், இந்த "ரீனல்' நரம்புகள், வேர்கள் போல் படர்ந்திருக்கும். இந்த நரம்புகளின் இயக்கத்தால் தான், உயர் ரத்த அழுத்தம் ஏற்படுகிறது. இந்த நரம்புகளை செயல் இழக்க செய்ய வேண்டும்.
எப்படி?
தொடைவழியாக, ரத்த குழாய் மூலம், ஒரு பிளாஸ்டிக் குழாயை உள்நோக்கி ஊடுருவி, சிறுநீரக ரத்த நாளத்தினுள் குழாயை செலுத்தி, இந்த சிகிச்சை முறைக்கு என, தயார் செய்யப்பட்ட கத்தீட்டரையும், உட்செலுத்த வேண்டும். குழாயின் முனையில், ஆர்.எப்., தகடு இருக்கும். இதை, ரீனல் ரத்த நாளத்தின் உட்பகுதியில் செலுத்தி, ஆர்.எப்., மெல்லிய பாட்டரி மூலம் இயக்க வேண்டும். இந்த அதிர்வு அலைகளால், நுண் நரம்புகள் துண்டிக்கப்பட்டு செயலிழக்கின்றன. இதனால், ரத்த அழுத்தம் குறைகிறது.
பேராசிரியர் சு. அர்த்தநாரி
டாக்டர் எஸ்.ஏ., ஹார்ட் கிளினிக்

உச்சி குளிரட்டும்… வெப்பம் அகலட்டும்…

கோடை வெயிலின் தாக்குதல் பெண்களின் அழகுக்கு அச்சுறுத்தலாகிக் கொண்டிருக் கிறது. வெயிலில் அதிக நேரம் நடப்பதால் அவர்களது அழகான சருமம் கறுத்து, சுருங்கி, பொலிவை இழக்கிறது. கூந்தலில் வெயில் படுவதால் முடியில் இருக்கும் நீல நிறம் மறைந்து செம்பட்டை தன்மை உருவாகிறது. கவர்ச்சிமிக்க கண்கள் உஷ்ணத்தால் வதங்கிப்போய் பொலிவின்றி காணப்படுகிறது. மே, ஜூன் மாதங்களில் வெப்பம் இன்னும் அதிகரித்து அழகுப் பாதிப்பு அதிகரிக்கும் என்ற எண்ணம், அழகுப் பெண்கள் அனைவரையுமே வாட்டிக்கொண்டிருக்கிறது.
"ரொம்ப கவலைப்பட வேண்டியதில்லை. கவனமும், கொஞ்சம் சிரத்தையும், தேவையான அழகு பராமரிப்பும் மேற்கொண்டால் அழகை குன்றாமல், குறையாமல் பாதுகாக்கலாம்'' என்று கூறும் அழகுக்கலை நிபுணர் வசுந்தரா, கோடையில் உடல் அழகை பேணும் முறை பற்றி விளக்குகிறார்.

சருமம்
"நமது சருமத்திற்கு அத்தியாவசிய மானது கொழுப்பும், தண்ணீர் சத்தும். கோடை காலத்தில் அதிக வியர்வை வெளியேறுவதால், உடலில் தண்ணீர் சத்துக்கு பற்றாக்குறை ஏற்படும். அதிக அளவு தண்ணீர் மற்றும் திர வங்களை பருகி, உள்தேவையை சரிகட்ட வேண்டும். `மாயிசரைசரை' சருமத்தில் பூசி வெளித் தேவையை சமன் செய்யவேண்டும். உள்ளும், புறமும் இப்படி தண்ணீர் சத்து குறை யாமல் பார்த்துக்கொண்டால், கோடை யில் சரும அழகு அதிகம் பாதிக் காது.
கோடையில் அதிக பிரச்சினைக்குரி யது, புறஊதா கதிர்கள். அவை உடலில்படும்போது சருமம் கறுக்கும். தொடர்ச்சியாக வெயில்பட்டால் அந்த பாதிப்பு அதிகமாகும். புற ஊதா கதிர் கள் சருமத்தை பாதிக்காமல் இருக்க, `சன் ஸ்கிரீன் லோஷன்' பாதுகாப்பு தருகிறது. இந்த கிரீமை வாங்கி உட லில் வெயில் எங்கெல்லாம் படுகி றதோ அங்கெல்லாம் பூசிக்கொள்ள வேண்டும். இந்த லோஷன் புட்டிகளில் `எஸ்.பி.எப்' என்ற அளவு (10 முதல் 60 வரை) குறிப்பிடப்பட்டிருக்கும்.
நீங்கள் பத்து என்று குறிப்பிடப்பட்டிருக்கும் கிரீமை வாங்குகிறீர்கள் என்றால் அது (10 * 5) 50 நிமிடங்கள் உங்கள் சருமத்தை வெயிலில் இருந்து பாதுகாக்கும். ஒரு மணி நேரம் நீங்கள் வெயில்படும் அளவிற்கு வெளியே செல்வதாக இருந்தால், இந்த 10 எண் கொண்ட எஸ்.பி.எப். லோஷன் வாங்கி, வெயில்படும் இடங்களில் பூசிக்கொள்ளுங்கள்.
நீங்கள் கோடை சுற்றுலாவுக்காக பஸ்சில் பகல் பொழுதில் தொடர்ச்சியாக அதிக நேரம் பயணம் செய்ய வேண்டியிருந்தாலோ, மலை வாசஸ்தலங்களில் பகலில் அதிக நேரம் சுற்ற வேண்டியதிருந்தாலோ 30 முதல் 40 என்ற எண் கொண்டவைகளை பயன்படுத்துங்கள். பெண்களின் முகம், கைகள், கழுத்தின் மேல் பகுதி- கீழ் பகுதி போன்றவைகளை வெயில் நேரடியாக தாக்கும். அந்தப் பகுதிகளில் இதனை பூச வேண்டும். பூசிக்கொண்டு வெளியே சென்றுவிட்டு, நீங்கள் திரும்பி வந்த பின்பு அதை கழுவி சுத்தப்படுத்தவும் செய்யலாம். கழுவாமல் அப்படியே விட்டுவிடவும் செய்யலாம். ஆனால் காலையில் பூசிக் கொண்டு வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பி- மீண்டும் பிற்பகல் வெயிலில் வெளியே செல்லவேண்டிய நிலை ஏற்பட்டால் முதலில் பூசியதை தண்ணீரால் கழுவி அப்புறப் படுத்திவிட்டு, மீண்டும் தேவைப்படும் நேரத்திற்கு தக்கபடி கிரீமை பூசிக்கொள்ள வேண்டும்.
கோடையில் நிறைய பேர் நீச்சல் பயிற்சிக்கு செல்கிறார்கள். குளோரின் கலந்துள்ள அந்த தண்ணீரும், சூரிய கதிர்களும் உடலில்படும்போது சருமம் கறுத்துப்போகும் தன்மை அதிகரிக் கும். அவர்கள் நீச்சலுக்காக இருக்கும் `சன் ஸ்கிரீன் லோஷனை' வாங்கி பயன்படுத்திக்கொண்டு பயிற்சியை முடித்த பின்பு சுத்தமான தண்ணீரால் தலை முதல் பாதம் வரை குளித்துவிட்டு, அதற்கென்று இருக்கும் லோஷனை வாங்கி பயன்படுத்த வேண்டும். கறுத்துப்போவதை இதன் மூலம் தடுக்கலாம்.
நமது சருமத்தின் கீழே உடலை பாதுகாக்க கொலோஜின் என்ற புரதம் உள்ளது. வெயில்படும்போது இந்த புரதம் சுருங் கும். கண்களுக்கு அடியில் உள்ள சருமத்திலும் கொலோஜின் உள்ளது. வெயில் கண்களில் படுவதாலும், வெயிலில் நாம் கண்களை சுருக்கி, விரித்து பார்ப்பதாலும் கண் பகுதி கொலோஜின் விரைவாக சுருங்கும். அதனை சரிசெய்வதற்காக, கோலோஜின் கலந்த கிரீமை வாங்கி கண்களின் கீழ் பகுதி, வாய்ப்பகுதி போன்றவைகளில் பூசிக்கொள்ளலாம்.
கை, முகம், கண் போன்ற பகுதிகளில் ஏற்கனவே வெயில் பாதிப்பு ஏற்பட்டிருந்தால், வைட்டமின்-ஈ ஆயிலை வாங்கி, அந்த இடங்களில் பூசுங்கள். 30 நிமிடங்களில் கழுவி விடுங்கள். கழுவாமல் அப்படியே விட்டுவிடவும் செய்யலாம்.
முகத்தில் ஏற்படும் பருக்கள் கோடை காலத்தில் அதிகரிக்கும். பருவே ஏற்படாமல் எப்படி தடுக்கவேண்டும் என்று சொல்கிறேன்.
ஒரு லிட்டர் தண்ணீரை சூடாக்குங்கள். சூடானதும் அடுப்பில் இருந்து இறக்கிவைத்து விட்டு அதில் ஒரு கைப்பிடி துளசியை போட்டு மூடிவைத்துவிடுங்கள். நன்றாக ஆறிய பின்பு அந்த நீரை வடிகட்டி முகம் கழுவ பயன்படுத்துங்கள். தண்ணீரை சூடாக்கி அதில் புதினா, துளசி, வேப்பிலை மூன்றையும் தலா ஒரு கைப்பிடி வீதம் போட்டு ஆறவைத்து வடிகட்டி முகம் கழுவினாலும் முகப்பரு வராது. இதை பிரிஜ்ஜில் வைத்து 3 நாட்கள் வரை பயன்படுத்தலாம். அந்த நீரில் 4 தேக்கரண்டி எடுத்து, அதில் 3 தேக்கரண்டி முல்தாணி மிட்டி கலந்து பரு இருக்கும் இடங்களில் பூசவேண்டும். பத்து நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் கழுவிவிட்டால் பரு மறையும்.
சந்தனமும் சரும அழகை மேம்படுத்தும். ஒரு லிட்டர் தண்ணீரை சூடாக்கி, அதில் பிங்க் கலர் ரோஜா இதழ்களை ஒரு கைப்பிடி அளவு போட்டு மூடிவைத்துவிடுங்கள். ஒரு மணி நேரம் கழித்து வடிகட்டி எடுத்து, அந்த நீரை பயன்படுத்தி சந்தன கட்டையை கல்லில் தேய்த்து உரசி, அரைக்கவேண்டும். அதை கறுமையும், வியர்க்குருவும் இருக்கும் இடங்களில் பூச வேண்டும். அரை மணி நேரத்தில் குளிர்ந்த நீரால் கழுவவேண்டும்.
இளநீரையும், தர்பூசணி சாறையும் சம அளவு எடுத்து கலந்து முகத்தில் தேயுங்கள். பத்து நிமிடங்கள் கழித்து மீண்டும் ஒருமுறை பூசுங் கள். படுத்துக்கொண்டு பஞ்சில் முக்கி இதை தேய்ப்பது நல்லது. இல்லாவிட்டால் வழிந்தோடி விடும். பஞ்சில் முக்கிய சாறை கண்களை மூடிக்கொண்டு, கண்களின் மேல் பகுதியிலும் வைக்கவேண்டும். கட்டி வராது. கண்களுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும். முகமும் பொலிவு பெறும்.
சருமத்தில் ஏற்படும் கறுமையை போக்க `டீ`யும் பயன்படுகிறது. தேனீர் தயாரித்த பின்பு மீதம் இருக்கும் டிக்காஷனில் சிறிதளவு கடலைமாவு கலந்து பேஸ்ட் மாதிரி தயாரியுங்கள். அதனை பிரஷ்ஷால் கை, முகம், கழுத்து போன்ற பகுதி களில் பூசி 15 நிமிடம் வைத்திருங்கள். உலர்ந்து இறுக்கமான பின்பு கழுவிவிடுங்கள். பயன்படுத்திய `டீ பேக்கை' கழுவி கண்களின் மேல் 10 நிமிடங்கள் வைத்திருந்தால், உஷ்ணத் தால் ஏற்படும் கண் சோர்வு நீங்கும்.
வெள்ளரியில் சருமத்திற்கு பலத்தையும், பளபளப்பையும் தரும் வைட்டமின், சிலிக்கான் சத்துக்கள் இருக்கின்றன. அதனை வெட்டி, கண்களில் வைப்பதால் பெருமளவு பலன் கிடைப்பதில்லை. வெள்ளரிக்காயை துருவி, அரைத்து பூசிக்கொண்டால் அதிக பலன் கிடைக்கும்.
நுங்கையும் அழகுக்கு உபயோகிக்கலாம். நுங்கை மிக்சியில் அரைத்து அதில் பச்சை பயறு மாவு, அரிசி மாவு கலந்து பேஸ்ட் ஆக்கி உடலில் பூசி `ஸ்கிரப்' போல் பயன்படுத்த வேண்டும். இதனை குளிக்க செல்வதற்கு பத்து நிமிடங்களுக்கு முன்னால் பூசி, சோப்பு போடாமல் குளிக்கவேண்டும். இது சருமத்திற்கு அதிக பளபளப்பை தரும். கோடை உஷ்ண பாதிப்பையும் போக்கும்.
கஸ்தூரி மஞ்சள் கிழங்கு ஒன்றை வாங்கி, அதனை நான்கு துண்டுகளாக வெட்டி, 20 லிட்டர் தண்ணீரில், குளிப்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு போட்டு வையுங்கள். கிட்டத்தட்ட 30 கிராம் அளவுக்கு அந்த மஞ்சள் இருக்கவேண்டும். அதோடு அரை கப் காய்ச்சாத பாலை கொட்டுங்கள். தண்ணீர் மஞ்சள் நிறம் கலந்ததாக மாறிய பின்பு அதில் மாலை நேர குளியல் போட்டால் உடம்பில் உற்சாகம் பொங்கும். தோல் வியாதிகளும் வராது. இந்த குளியலின்போது தலையில் தண்ணீர் படக்கூடாது.
கோடையில் உடலை உஷ்ணம் அதிகம் தாக்கும். அதனால் உடல் சீதோஷ்ண சமன்பாடு சீரற்று இருமல், எரிச்சல், அரிப்பு போன்ற அவஸ்தைகள் ஏற்படும். உஷ்ணத்தை குறைக்க உச்சி முதல் பாதம் வரை உடல் முழுக்க நல்லெண்ணெய் தேய்க்கவேண்டும். அரை மணி முதல் ஒரு மணி நேரம் ஊறவேண்டும். பின்பு தலைக்கு சீயக்காய் பயன்படுத்தி குளிக்க வேண்டும். உடலுக்கு பச்சை பயறு மாவு பூசி, எண்ணெய் பிசுக்கை போக்கவேண்டும். வாரத்தில் இரண்டு நாட்கள் இவ்வாறு எண்ணெய் குளியல் செய்தால், உச்சி குளிரும். வெப்பம் விலகும்.''
கூந்தல்
"நமது கூந்தல் கறுப்பாக இருந்தாலும் அதனை பகுத்தாய்ந்து பார்த்தால் நீலம், ஊதா, பிரவுன், லைட் பிரவுன், ஆரஞ்சு, சிவப்பு போன்ற நிறக்கலப்பு தெரியும். கோடை வெயில் தொடர்ந்து கூந்தலில்பட்டால் முதலில் நீல நிறம் மறையும். அதனால் கூந்தல் செம்பட்டை யாகத் தெரியும். இவ்வாறு ஆகாமல் இருக்க, கோடைகாலத்தில் `சன் புரட்டெக்ஷன்' கொண்ட எண்ணெய், ஷாம்பு போன்றவைகளை பயன்படுத்தவேண்டும். அவைகளை வாங்கி பயன்படுத்த முடியாதவர்கள் கோடை காலத்தில் உச்சியில் எண்ணெய் வைத்துக் கொள்ளும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளவேண்டும்.
உச்சி என்பதை நடு மண்டை என்று பலரும் நினைக்கிறார்கள். தலையின் முன் நெற்றி யில் முடி தொடங்கும் இடத்தில் குறுக்காக நான்கு விரல்களை வைக்கவேண்டும். அதில் நான்காம் விரல் வைக்கப்படும் இடமே உச்சியாகும். குழந்தையாக இருக்கும்போது மிக மென்மையாக துடிக்கும்பகுதி போல் தெரியுமே அதுதான் உச்சி. இந்த உச்சிக்கு ஈர்ப்பு சக்தி அதிகம். அதனால் அந்த இடத்தில் சிறிதளவு எண்ணெய் வைக்கும் பழக்கத்தை உருவாக்கிக்கொள்ளவேண்டும்.
மெராக்கோ நாட்டில் பாதாம் பருப்பு போன்ற ஆர்கன் பருப்பில் இருந்து எண்ணெய் தயாரிக்கிறார்கள். இது கூந்தல் வளர்ச்சிக்கும், அடர்த்திக்கும் ஏற்றது. குளிர்ச்சியும் தரும். இந்த ஆர்கன் ஆயிலை கோடையில் கூந்தலுக்கு பயன்படுத்தலாம்.
கோடைகாலத்தில் பெண்களை பெருவாரியாக பாதிக்கும் பிரச்சினை உடல் துர்நாற்றம். நமது உடலில் அப்போகிரைன், எக்கிரைன் என்று இரண்டு வித சுரப்பிகள் உள்ளன. முதல் வகை உடல் முழுக்க வியர்வையை உருவாக்கும். இரண்டாம் வகை, முடி இருக்கும் மறைப்பு பகுதிகளில் அதிகம் சுரக்கும். அங்கு சுரக்கும் வியர்வை, எண்ணெய் பசை, காற்றுபடாமை போன்றவைகளால் பாக்டீரியா படர்ந்து வளரும். அதனால் துர்நாற்றம் வீசத் தொடங்கும்.
அந்த தொந்தரவு இருப்பவர்கள் குளிக்கும்போது, கடைசியாக குளிக்கும் ஒரு பக்கெட் தண்ணீரில் ஒரு சிறிய வில்லை கற்பூரத்தை போடவேண்டும். சிறிது நேரத்தில் இது கரைந்துவிடும். அந்த தண்ணீரை பயன்படுத்தி குளித்தால் நாற்றம் நீங்கும்.
வெதுவெதுப்பான நீரில் ஒரு கைப்பிடி அளவு வேப்ப இலையை போட்டுவைத்து அரை மணிநேரம் ஆன பின்பு அந்த நீரில் குளித்தாலும் நாற்றம் குறையும். ரசாயனதன்மை இல்லாத டியோடரண்ட்டையும் பயன்படுத்தலாம். குளித்த பின்பு உடலில்படும் அளவுக்கு டியோடரண்டை ஸ்பிரே செய்யவேண்டும். அது நாற்றத்தை போக்கி, மணத்தை பரப்பும்.
கோடை காலத்தில் தரமான கூலிங் கிளாஸ் கண்ணாடி, தொப்பி, குடை போன்றவைகளை பெண்கள் வெட்கப்படாமல் எடுத்துச் சென்று பயன்படுத்தவேண்டும். கறுப்பு நிறம் புற ஊதா கதிர்களை ஈர்க்கும் தன்மைகொண்டது. அதனால் கோடையில் கறுப்பு நிற குடை களை பயன்படுத்தாமல், கலர் குடைகளை பயன்படுத்தவேண்டும்..''-என்கிறார், அழகுக் கலை நிபுணர் வசுந்தரா.

பசு & எருமை கருவூட்டல் .. கவனிக்கவேண்டியவைகள்

பசு எருமை கருவூட்டல் .. கவனிக்கவேண்டியவைகள்

- மரு. R.V.விஜயக்குமார், கால்நடை உதவி மருத்துவர், கால்நடைமருந்தகம், திருமலைப்பட்டி,நாமக்கல். தொலைபேசி எண் ; 9 443 217 843
சரியான சினைத் தருணத்தை அறிந்து கருவூட்டல் செய்வதன்மூலம் பெரும்பாலான மாடுகளின் சினைப் பிடிக்கும் தன்மையை அதிகரித்து விடலாம். மேலும் பசு கிடாரியை 2 வயதிலும், எருமைக் கிடாரியை 3 வயதிலும் கன்று ஈன வைக்க வேண்டும். கன்று ஈன்ற பசுவை 2 மாதத்திற்குள்ளும், எருமையை 3 மாதத்திற்குள்ளும் சினை பிடிக்க வைக்க வேண்டும்.இப்படிச் செய்வதே இலாபகரமான பண்ணை மேலாண்மையாகும்.
சினைத் தருண அறிகுறிகள்:.

1.
அடிக்கடி கத்திக்கொண்டே இருக்கும்.

2.
பிறப்பு உறுப்பிலிருந்து, எண்ணெய் போன்ற வழவழப்பான திரவ ஒழுக்கு காணப்படும்.


3.
மாடுகள் அமைதியற்று காணப்படும்.

4.
இருப்புக்கொள்ளாமல் ஓடும், சில சமயங்களில் கயிற்றை அறுத்துக்கொண்டு ஓடிவிடுவதும் உண்டு.

5.
உட்கொள்ளும் தீவனத்தின் அளவு குறையும்.

6.
வாலைத்தூக்கிக் கொண்டு, அடிக்கடி சிறுநீர் கழிக்கும்.

7.
பிற மாடுகளை நுகர்ந்து பார்க்கும்.

8.
அருகில் உள்ள மாடுகளின் மீது தாவுவதோடு மற்ற மாடுகளை தன்மீது தாவ அனுமதிக்கும்.

9.
பிறப்பு உறுப்பின் உதடுகள் தடித்தும், சிவந்தும், வழவழப்புடனும் காணப்படும்.

10.
பால் மாடுகளில் பாலின் அளவு குறைந்து சினைத் தருணம் முடிந்த உடன் அதிகரிக்கும்.

ஊமை சினைப் பருவம்: 21 நாட்களுக்கு ஒருமுறை பருவத்திற்கு வந்துகொண்டிருக்கும். ஆனால் பருவ அறிகுறியை வெளிக்காட்டாது. கிடாரிகளிலும், கன்று ஈன்ற எருமைகளிலும் இப்பிரச்னை அதிகம் இருக்கும்.வெயில் காலங்களில் இப்பிரச்னை அதிகம் இருக்கும்.
இந்த சினைத்தருண அறிகுறிகள் மாட்டிற்கு மாடு வேறுபட்டும், பருவகாலம், பாலின் அளவு, தீவனத்தின் தன்மை போன்ற காரணிகளால் வேறுபட்டும் காணப்படும். பொதுவாக மாடுகள் பருவ அறிகுறிகளை வெளிப்படுத்தும் தனமையானது வெப்பநிலை குறைந்த நேரமான காலை மற்றும் மாலை நேரங்களில் அதிகமாக காணப்படும். எனவே, மாடுகளை காலை மற்றும் மாலை வேளைகளில் 10 நிமிடங்கள் கவனமாக கண்காணித்து பருவ அறிகுறிகள் தென்படுகிறதா என்பதை உற்று நோக்குவது அவசியம். பலரது கறவை மாடுகளின் பராமரிப்பை வேலையாட்கள் கவனிப்பார்கள். இச்சூழ்நிலையில் சினை தருணம் கண்டுபிடிக்க முடியாமல் போய்விடும்.

வருடம் முழுவதும் எருமைகள் சினைக்கு வந்தாலும், பொதுவாக வருடத்தில் 8 மாதங்கள் மட்டுமே சினைத்தருண அறிகுறிகளை மிகவும் வெளிப்படுத்தும். மார்ச் மாதம் முதல் ஜூன் மாதம் வரை 4 மாதங்களுக்கு அவை சினை தருண அறிகுறிகளை அவ்வளவாக வெளிக்காட்டாது. மழைக்காலங்களில் அதிகப்படியாக சினைத் தருண அறிகுறிகளைக் கொண்டிருக்கும்.

எருமைகள் சினைப் படிக்காமல் போவதற்கு முக்கியக் காரணம் எருமை மாடு வளர்ப்போர் சினைத் தருணத்தைக் கண்டறிந்து சரியான நேரத்தில் அதற்கு சினை ஊசி போடுவது கிடையாது. எருமைகளில் ஊமை சினை பருவம் அதிகம் இருக்கும். ஆகவே சினை தருண அறிகுறிகளை அனைத்தையும் தெரிந்துகொண்டு இக்கட்டுரையில் கொடுக்குப்பட்டுள்ள
சினை தருணத்தை கண்டுபிடிக்க சில வழிகள் பகுதியை பின்பற்றினால் சினை தருணத்தை எளிதில் கண்டுபிடித்துவிடலாம்.
சினை தருணத்தை கண்டுபிடிக்க சில வழிகள்

ஒரு பருவத்தை தவறவிட்டால் 20 நாட்களை இழக்கிறோம். ஏனெனில் பசுக்கள் 17-20 நாட்களுக்கொருமுறையும், எருமைகள் 20-24 நாட்களுக்கொருமுறையும் பருவத்திற்கு வருகின்றன. ஆகவே எக்காரணத்தைக்கொண்டும் சினை தருணத்தை தவற விடக்கூடாது. கீழ்க்கண்ட வழிமுறைகளை பின்பற்றினால் சினை தரணத்தை தவறவிடவமாட்டோம்.

1.
அறிகுறிகள் அனைத்தையும் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். அதில் ஏதேனும் 2 அல்லது 3 அறிகுறிகள் தென்பட்டாலும் கால்நடை மருத்துவரிடம் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

2.
மாதக் காலண்டர் அல்லது ஒரு சிறிய நோட் போட்டு பருவத்திற்கு வந்த அல்லது சினை ஊசி போட்ட நாளை குறித்து வைத்துக்கொள்ளுங்கள். அன்றிலிருந்து பசுவாக இருந்தால் 18வது நாளையும், எருமையாக இருந்தால் 21வது நாளையும் குறித்துக்கொள்ளுங்கள். அந்த நாளுக்கு 2 நாள் முன்பாகவே பருவ அறிகுறிகள் தெரிகிறதா என பாருங்கள். பின் தொடர்ந்து 5 நாட்கள் பாருங்கள்.
ஒரு பசு சினை ஊசி போட்ட தேதி 1 என்றால், சினை பிடிக்காவிட்டால் அடுத்து பருவத்திற்கு வரும் நாள் 18ம் தேதி. ஆகவே 16ம் தேதியிலிருந்து 20ம் தேதி வரை பருவ அறிகுறிகள் தென்படுகிறதா என பார்க்க வேண்டும்.

3.
பருவ அறிகுறிகள் இருக்கிறதா என பார்க்க வேண்டிய நேரம் காலை மற்றும் மாலை வேலை. வாலில், மாட்டின் பின்புறத்தில் எண்ணேய் போன்ற வழவழப்பான திரவம் ஒட்டியிருக்கிறதா, மாட்டின் பிறப்பு உறுப்பு தடித்து, சிவந்து காணப்படுகிறதா, மேலே கூறிய மற்ற பருவ அறிகுறிகள் இருக்கிறதா என பார்க்க வேண்டும். ஏதேனும் 2 அறிகுறிகள் தென்பட்டாலும், பருவம் இருக்கிறதா என சந்தேகம் எழுந்தாலும் கால்நடை மருத்துவரிடம் பரிசோதனை செய்துகொள்ளுவது நல்லது.

4.
கன்று ஈன்ற மாட்டில், கன்று ஈன்ற நாளை குறித்துக்கொள்ளுங்கள். அந்த நாளிலிருந்து 20வது நாள் பருவத்திற்கு வரும். ஆனால் அது ஊமை சினை தருணமாக இருக்கும். ஆகவே பருவ அறிகுறிகள் எதுவும் வெளியே தெரியாது. சில மாடுகளில் மட்டும் பருவ அறிகுறிகள் தெரியும். அப்படித் தெரிந்தாலும் சினை ஊசி போட வேண்டாம். மீண்டும் 40வது நாள் பருவத்திற்கு வரும். இந்த நாளை தவறவிடாதீர்கள். நன்கு சினை பிடிக்கக்கூடிய தருணம் இது.
இம்முறை சினை பிடிக்காவிட்டால் மீண்டும் 60வது நாள் சினை தருணத்திற்கு வரும். அப்பொழுது சினை ஊசி போடலாம். அதாவது கன்று ஈன்றவுடன் வருகின்ற சினை பருவத்தில் சினை பிடக்கக்கூடிய தன்மை அதிகமாக இருக்கும். நாள் செல்ல செல்ல சினை பிடிக்கக்கூடிய தன்மை குறைந்து கொண்டே போகும். ஆகவே கன்று ஈன்ற 60 நாட்களுக்குள் சினை பிடக்க வைத்து விட வேண்டும்.

கருவூட்டலுக்கு ஏற்ற காலம்

மாடுகளில் பருவச் சுழற்சியானது பசுவில் 17-20 நாட்களுக்கு ஒருமுறையும், எருமைகளில் 21-24 நாட்களுக்கு ஒருமுறையும் ஏற்படுகின்றது. சினைத்தருணமானது பசுக்களில் 12 முதல் 24 மணிநேரமாகவும், எருமைகளில் 8 முதல் 18 மணி நேரமாகவம் இருக்கும்.

மாடுகள் காலையில் முதலில் பருவ அறிகுறிகள் காட்டினால் மாலையிலும், மாலையில் முதல் பருவ அறிகுறிகள் காட்டினால் அடுத்த நாள் காலையிலும் கருவூட்டல் செய்யப்படவேண்டும். சில மாடுகள் தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு பருவ அறிகுறிகள் காட்டினால் 12 முதல் 24 மணிநேர இடைவெளியில் இரண்டு முறை கருவூட்டல் செய்வது அவசியம். சுருக்கமாக மாடுகளுக்கு நடுச்சினைத் தருணத்தில் கருவூட்டல் செய்வதே உகந்தது.

பசுக்களை அதிக வெப்பம் அல்லது அதிக குளிர் தாக்கும்பொழுது அது அவற்றின் இனவிருத்தித் திறனை பாதிக்கும். முக்கியமாக வெயில் காலங்களில் காலை அல்லது மாலை நேரங்களில் ஊசி போடலாம்.
கிடாரிக் கன்றை இனவிருத்தி செய்யும்போது அது சினைத்தருணத்திற்கு வரும் வயதைக் கணக்கிடுவதோடு மட்டுமல்லாது தகுந்த உடல் எடையினை அடைந்துவிட்டதா என்று பார்க்க வேண்டும்.
கறவை மாடுகள் கன்று போட்ட மூன்று மாதத்திற்குள் தான் நன்கு சினை பிடிக்கும். இதை உணராது பலர் மாடு சினை பிடித்தால் பால் குறைந்துவிடும் என்பார்கள்; மாடு சினை பிடிப்பதை தவிர்ப்பார்கள். சினைக்கு வந்த மாட்டிற்கு கருவூட்டல் செய்ய மாட்டார்கள். நாட்டு மாடுகள் பல சினைப்பட்டதும் பால் கொடுப்பதை குறைத்துவிடும் அல்லது நிறுத்திவிடும். பல எருமைகளும் அப்படியே. இந்த எண்ணத்தில் பலர் கலப்பின பசுக்களுக்கும் காலத்தில் கருவூட்டல் செய்வதில்லை. ஆனால் கலப்பின பசுக்கள் சினை பிடித்தவுடன் பாலை நிறுத்துவதில்லை, பாலை குறைப்பதுமில்லை. இயற்கையாகவே கன்று ஈன்று 2 மாதங்கள் பாலின் அளவு அதிகரித்துகொண்டே செல்லும், பின் 1 மாதம் பாலின் அளவு மாறாமல் இருந்துவிட்டு, பின் 3 மாதத்திற்குமேல் பால் குறைய ஆரம்பிக்கும். இது கருவூட்டல் செய்தாலும், செய்யாவிட்டாலும் இயற்கையாக நிகழக்கூடியது. ஆகவே 3 மாதத்தில் சினை பிடிக்கும்போது, சினை பிடித்ததால் தான் பால் குறைகிறது என நினைக்கத் தேவையில்லை.
பலர் எண்ணெய் போன்ற திரவம் (கோழை) வடிவதால், பருவம் அடங்கிய பிறகு சினை ஊசி போடலாம் என நினைத்து பருவம் ஆரம்பித்து 2 நாள் கழித்தே சினை ஊசி போட வருகின்றனர். அப்பொழுது பருவமே இருப்பதில்லை. அவர்கள் நினைப்பது கோழையுடன் சேரத்து விந்துவும் வெளியே வந்துவிடும் என்பதே. உண்மை என்னவெனில், சரியான பருவத்தில் கர்ப்பபையில் செலுத்திய விந்து கோழையுடன் சேர்ந்து வெளியே வராது. ஏனெனில் கோழை உற்பத்தியாகும் இடம் கர்ப்பையின் வாய்ப்பகுதியாகும்.. அந்த இடத்தை கடந்து கர்ப்பப்பைக்குள்தான் விந்தணு செலுத்தப்படுகிறது. ஆகவே கோழை அதிகமாக அடித்தாலும் பரவாயில்லை, முதல் பருவ அறிகுறி தெரிந்ததும் 12 மணி நேரத்திற்குள் முதல் கருவூட்டல் செய்துகொள்ளுங்கள், மேலும் பருவம் 24 மணி நேரத்திற்கு நீடித்தால் மீண்டும் ஒரு கருவூட்டல் செய்துகொள்ளுங்கள்.
கருவூட்டலுக்கு முன் மாடுகள் பராமரிப்பு
கருவூட்டலுக்கு கொண்டு செல்லும் மாடுகளை அடித்தோ உதைத்தோ துன்புறுத்தியோ அல்லது அதிக பயத்திற்கு உட்படுத்தியோ கொண்டு செல்வதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில், அவ்வாறு கொண்டு செல்லப்படும் மாடுகளில் அட்ரீனலின் எனப்படும் கனநீர் (Hormone) சுரந்து கருப்பையின் இரத்த நாளங்களை சுருங்கச் செய்துவிடும். இதன் விளைவாக பிட்யூட்டரி எனப்படும் நாளமில்லாச் சுரப்பியன் கனநீரான ஆக்சிடோசின் இரத்த நாளங்கள் வழியாக கருப்பையை அடைவது தடைப்பட்டுவிடும். இதன் விளைவாக கருப்பையின் சுருங்கி விரியும் தன்மை பாதிப்படைந்து விந்தணுக்கள் கரு முட்டையோடு இணைவது தடைபடும். மேலும், கருவூட்டல் தளத்திற்கு கொண்டு செல்லப்பட்ட மாடுகளுக்கு உடனடியாக கருவூட்டல் செய்யாமல் பத்து முதல் பதினைந்து நிமிடங்கள் கட்டி வைத்து பின்பு கருவூட்டல் செய்வதன் மூலம் மேற்கூறிய பாதிப்பில் இருந்து பாதுகாக்கலாம்.
கருவூட்டல் செய்வதற்கு முன்பு மாடுகளின் பிறப்பு உறுப்பினை சுத்தமான நீரினைக் கொண்டு கழுவி சுத்தப்படுத்துவது அவசியம். ஏனெனில், பிறப்பு உறுப்பில் சாணம், சிறுநீர் போன்றவை ஒட்டி இருப்பதோடு நுண் கிருமிகளும் இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. இவைகள் கருவூட்டல் உபகரணத்தின் வாயிலாக கருப்பையினுள் செல்வதால் கருப்பை அழற்சி ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.
கருவூட்டலுக்கு பின் மாடுகள் பராமரிப்பு
கருவூட்டல் செய்த மாடுகளை உடனடியாக ஓட்டிச் செல்லாமல் 10 நிமிடங்கள் மர நிழலில் கட்டி வைத்த பின்பு ஓட்டிச் செல்வது நலம். ஏனெனில் உடனடியாக ஓட்டிச் செல்வதால் முன்பே குறிப்பிட்டது போல ஆக்சிடோசின் என்ற கனநீர் தடைபட வாய்ப்பு உள்ளது. சிலர் கருவூட்டல் செய்த மாடுகளின் தலையை உயரமாக உயர்த்தி மரக்கிளை போன்றவற்றில் கட்டி மாட்டை படுக்கவிடாமல் செய்வதோடு தண்ணீர், தீவனம் போன்றவற்றையும் தராமல் பட்டினிபோட்டு விடுவர். இப்படிச் செய்வதன்மூலமாக செலுத்தப்பட்ட விந்தணுக்கள் திரவ ஒழுக்கின் மூலம் வெளியே வரவிடாமல் தடுத்து விடலாம் என்ற கருத்து நிலவுகிறது. இது முற்றிலும் தவறான கருத்தாகும்.

ஏனெனில் , விந்தணுக்கள் கருப்பையின் நடுப்பகுதியில் செலுத்தப்படுவதால், பிறப்பு உறுப்பிலிருந்து வெளிப்படும் திரவ ஒழுக்கு மூலமாக விந்தணுக்கள் வெளிவர வாய்ப்பு இல்லை. மாறாக மாடுகளை மேற்கூறிய கொடுமைகளுக்கு உட்படுத்துவதே அதன் சினைப் பிடிப்புத் தன்மையை பாதித்துவிடும். எனவே, கருவூட்டல் செய்த மாடுகளுக்கு போதுமான அளவு தீவனம், குடிநீர் போன்றவற்றை அளிப்பது அவசியம்.

வெயில் நேரங்களில் மாட்டின் மேல் குளிர்ந்த நீரைத் தெளிப்பதன் மூலம் சினைப் பிடிப்பு விகிதத்தை அதிகரிக்கலாம். மேலும் மாட்டிற்கு கருவூட்டல் செய்துவிட்டோம், சினைப் பிடித்துவிடும், மூன்று மாதங்கள் கழித்து சினைப் பரிசோதனை செய்துகொள்ளலாம் என்று இருந்துவிடாமல், கருவூட்டல் செய்தபின் 21 நாட்களுக்குள் ஏதாவது சினைத் தருண அறிகுறிகள் தென்படுகிறதா என்பதைக் கவனித்து கருவூட்டல் செய்வது மிகவும் அவசியம்.
சினை ஊசி போட்டு 3 மாதம் கழித்து சினை பிடித்துள்ளதா என பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். ஏனெனில் சினை ஊசியில் 40 முதல் 60 சதவீதம் வரை மட்டுமே சினை பிடிக்கும். நிறைய பேர் சினை பிடித்துவிட்டது என்ற நம்பிக்கையில் 7-8 மாதம் வரை இருந்துவிட்டு, தற்செயலாக 'எதற்கும் சந்தேகத்திற்கு பார்க்க வந்தேன்' என வருகிறார்கள். அப்பொழுத சில மாடுகள் சினையாக இருப்பதில்லை. இவர்கள் சினை ஊசி போட்டு 3 மாத த்திலேயே சினை பார்த்திருந்தால் 4 மாதம் வீணாவதை தவிர்த்திருக்கலாம்.
சினைத் தருண முடிவில் உதிரப்போக்கு
சில மாடுகளில் சினைத் தருணம் முடிவுற்ற 48 முதல் 96 மணி நேர இடைவெளியில் பிறப்பு உறுப்பு வழியாக உதிரப் போக்கிற்குப்பின் கருவூட்டல் செய்வதை தவிர்க்க வேண்டும். கருவூட்டல் செய்த மாடுகளில் காணப்படும் உதிரப்போக்கிற்கும், சினை பிடிப்புத் தன்மைக்கும் தொடர்பு இல்லை. இருந்தபோதிலும், இத்தகைய உதிரப்போக்கு கண்ட மாடுகளில் நோய்க்கிருமிகள் எளிதில் கருப்பையினை அடைய வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எனவே இத்தகைய மாடுகளின் பிறப்பு உறுப்பை நன்றாகக் கழுவி மாட்டுக் கொட்டகையை சுத்தமாக வைத்தல் அவசியம் ஆகும்.
கிடாரிகள்
சினை ஊசி போட வரும் பல கிடாரிகள் கர்ப்பப்பை வளர்ச்சி இருப்பதில்லை. இதற்கு முக்கிய காரணம் கன்றாக இருக்கும்போது தேவையான பால் தராததே ஆகும். கர்ப்பபை வளருவதற்கு காலம் கடந்து நாம் செய்யும் முயற்சிகள் அதிகம் தோல்வியையே தழுவுகின்றன. இதுவே கன்றாக இருக்கும்போது தேவையான பால் மற்றும் தீவனம் அளிக்கும் பெரிய பண்ணைகளில் 2 ஆண்டுகளில் பசுங்கிடாரிகள் கன்று ஈன்று விடுகின்றன. ஆகவே கன்றாக இருக்கும்போதே தேவையான பால் மற்றும் தீவனம் அளித்து கர்ப்பபை வளர்ச்சியை ஏற்படுத்த வேண்டும். காலம் கடந்து அதாவது கிடாரியின் 2 வயதில் இதற்கான முயற்சி செயவதை தவிர்க்க வேண்டும்.
கிடாரிகளுக்கு சினை ஊசி போடும்பொழது கீழ்க்கண்ட மூன்று விதிகளும் பின்பற்றப்படவேண்டும்.
கிடாரியின் எடை, அதன் தாயின் எடையில் 3ல் 2 பங்கு எடை அடைந்த பிறகே கருவூட்டல் செய்ய வேண்டும்.
கிடாரியின் வயது பசுவிற்கு வயதும், எருமைக்கு 2-2½ வயதும் அடைந்த பிறகே கருவூட்டல் செய்ய வேண்டும்.
கர்ப்பப்பை தேவையான வளர்ச்சி அடைந்துவிட்டதா என பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
இந்த 3 விதிகளும் ஒத்துப்போனால் மட்டுமே கிடாரிகளுக்கு சினை ஊசி போட வேண்டும்.
பருவ அறிகுறிகள் காட்டாமை
அதிக பால் கொடுக்கும் மாடுகள் பருவ அறிகுறிகள் காட்டும் தன்மையை தற்காலிகமாக இழந்துவிடுகின்றன.
மெலிந்த உடல் நிலையில் உள்ள (உதாரணமாக எலும்புருக்கி நோய் தாக்கிய) மாடுகளில் பருவ அறிகுறி காட்டாமை அதிகமாகக் காணப்படும்.
சத்துப் பற்றாக்குறை காரணமாக இனப்பெருக்கத்தில் பங்கு கொள்ளும் கனநீரின் குறைபாடு ஏற்பட்டு இத்தகைய தன்மை ஏற்படுகிறது.
வயதான மாடுகளில் இந்நோய் அதிகமாகக் காணப்படுகிறது.
கருப்பையின் சூலகத்தல் கடினக்கட்டி ஏற்படுவதால் இந்நோய் ஏற்படுகிறது.
அதிக வெப்பநிலை உள்ள காலங்களில் சினைப் பருவம் தோன்றாமை அதிகமாகக் காணப்படுகிறது.

மேற்கண்ட அறிகுறிகள் தென்பாட்டால் கால்நடை மருத்துவரின் ஆலோசனையுடன் கால்நடைகளைக் கையாளுவது நல்லது.

பருவத்தே பயிர் செய்வீர்!
பணம் பலம் பெறுவீர்!

பசுக்களின் வயதைக் கணக்கிடும் முறை

பசுக்களின் வயதைக் கணக்கிடும் முறை


  • மாடுகளின் வயதை அதன் கீழ்த் தாடையிலுள்ள எட்டு நிரந்தர முன் வரிசைப் பற்களின் வளர்ச்சியை வைத்து கணக்கிடலாம்.
  • மாடுகளில் நிரந்தரப் பற்களாக் கீழ்தாடையில் 4 ஜோடி அதவாது 8 முன் வரிசைப்பற்கள் இருக்கும், மேல் தாடையில் முன் வரிசைப்பற்கள் இருக்காது.
  • பொதுவாக கலப்பின மாடுகளில்
  • 2 வருட வயதில் மத்திய ஜோடி நிரந்தர முன் வரிசைப் பற்கள் முளைக்கும்.
  • 2 1/2 வருட வயதில் இரண்டாவது ஜோடி நிரந்தர முன் வரிசைப் பற்கள் முளைக்கும்.
  • 3 வருட வயதில் 3 வது ஜோடி பற்களும்
  • 3 1/2 - 4 வருட வயதில் கடைசி ஜோடி நிரந்தர முன்வரிசைப் பற்களும் முளைத்து விடும்.
  • 6 வருட வயதில் இருந்து இப்பற்கள் தேய ஆரம்பிக்கும்.
  • 10 வயது ஆகும் போது எல்லா முன்பற்களுமே தேய்ந்த நிலையில் இருக்கும்.

Friday, April 13, 2012

சாமந்தி பூ தாவரப்பூச்சிக் கொல்லி தயார் செய்தல்

சாமந்தி பூ தாவரப்பூச்சிக் கொல்லி தயார் செய்தல்

  • தாவரங்களிலிருந்து கிடைக்கக் கூடிய சில பொருட்கள் தாவரப்பூச்சிக் கொல்லியாகவும், நூற்புழுக் கொல்லியாகவும், பூச்சிகளைக் கவரக்கூடிய பொருட்களாவும், தடுத்து விரட்டக்கூடிய பொருட்களாகவும் பயன்படுகின்றன. அவற்றில் முக்கியமானது சாமந்தி பூவிலிருந்து கிடைக்கும் பைரித்ரம் பூச்சிக்கொல்லி ஆகும்.
  • கிரைசாந்திமம் சினரேரி போலியம் எனப்படும் சாமந்தி வகைச்செடிகளிலிருந்து இது அதிக அளவில் தயாரிக்கப்படுகிறது. இந்த செடியிலுள்ள பூக்களைப் பறித்து உலர்த்தி நன்கு பொடி செய்து கொள்ள வேண்டும். பின்பு அதனுடன் களிமண் தூள், சுண்ணாம்பு அல்லது டால்கம் தூள் போன்ற செயல் திறனற்ற பொருட்களைக் கலந்து பைரித்ரம் தூவும் தூள் தயாரிக்கப்படுகிறது. பூக்களிலுள்ள நச்சுப் பொருளை பிரித்து எடுத்து தெளிப்பதற்கும் பயன்படுத்தலாம். ஒரு பங்கு பைரித்ரம் மருந்துடன் 10 பங்கு பைப்ரோனில் பியூட்டாக்சைட் என்ற இராசயனப் பொருளை கலந்து பைரகோன் எனும் பெயரில் பூச்சிக்கொல்லி மருந்து தயாரிக்கப்படுகிறது. சாறு உறிஞ்சும் பூச்சிகள், வீட்டில் காணப்படும் பூச்சிகள் போன்றவற்றைக் கட்டுப்படுத்தவும், கால்நடைகளைத் தாக்கக் கூடிய வெளி ஒட்டுண்ணிகளை தடுத்து விரட்டவும் பயன்படுகிறது.
தகவல்: வேளாண்மைத்துறை, உழவர் பயிற்சி நிலையம், புதுக்கோட்டை.

மா சாகுபடியில் விளைச்சலை அதிகரிப்பதற்கான நுட்பங்கள்

மா சாகுபடியில் விளைச்சலை அதிகரிப்பதற்கான நுட்பங்கள்
பிப்ரவரி முதல் வாரத்தில் பூ பூக்காத கிளைகளில் 0.5 சத யூரியா கரைசல் (5கிராம் யூரியா 1 லிட்டர் தண்ணீரில் கலந்து) அல்லது பொட்டாசியம் நைட்ரேட் 1.0 சதம் (10கிராம் பொட்டாசியம் நைட்ரேட்டை 1 லிட்டர் தண்ணீரில் கலந்து) தெளிப்பதால் 10-15 நாள்களில் கிளைகளில் பூக்கள் தோன்றும்.
வளர்ச்சி ஊக்கிகளைத் தெளித்தல்
பூக்கும் தருணத்தில் என்.ஏ.ஏ என்ற அளவில் வளர்ச்சி ஊக்கி மருந்தை 20பி.பி.எம். என்ற அளவில் (அதாவது 20 மில்லி கிராம் மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து) இரண்டு முறை, பூக்கும் தருணத்தில் ஒரு முறையும், பிஞ்சுகள் மிளகு அளவில் இருக்கும் போது ஒரு முறையும் தெளிப்பதால், பூக்கள் பிஞ்சுகள் உதிர்வது தடுக்கப்பட்டு காய்ப்புத் தன்மை அதிகரிக்கும்.
தகவல்: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், கோவை.

எள் மகசூல் பெருக்கிட

எள் மகசூல் பெருக்கிட

மாசிப்பட்டம் மடியில் பணம் என்பது எள் விவசாயத்திற்கான வழக்குச்சொல். ஆனால் இந்த ஆண்டில் தாளடி, பிந்திப்போனதால் பல இடங்களில் அறுவடைதற்போது தான் நடைபெற்று வருகிறது.  இந்நிலையில் தொடர்ந்து கோடையிலும் நெல் சாகுபடி செய்யலாமா?  என்று சிலர் சிந்திக்ககூடும். இது நடக்கக்கூடிய காரியமா?  மின் வெட்டு நம்மை நாளும் அச்சுறுத்தி வருகிறது.  இந்நிலையில் குறைந்த நீரில் குறைந்த மகசூல், அதிக லாபமும் பெற என்ன செய்யலாம் என்பதே நம் எண்ணமாக இருக்கவேண்டும்.  அதன் அடிப்படையில் நம்முன்னே நல்ல மகசூல் தரக்கூடிய பயிராக தென்படுவது எள்ளும், உளுந்துமே.  எள் சாகுபடியில் 200 கிலோ – 300 கிலோ மகசூல் மட்டுமே பெற்றுக்கொண்டிருந்த நிலையில் விருத்தாச்சலம் ஆராய்ச்சி நிலைய வல்லுநர்களின் வழிகாட்டுதலோடு ஏக்கருக்கு ஒரு டன் வரை எடுத்த் விவசாயிகள் அன்பில் முதல் திருக்காட்டுப்பள்ளி, திருவையாறு ஆகிய பகுதிகளில் உள்ளனர்.  இவ்வாறு அதிக மகசூல் எடுக்க முதலில் நாம் செய்யவேண்டியது என்ன?
எள் விதைப்பதற்கு முன்னாடி வயலை உழுது மேலாக உழவு செய்யனும்.  பிறகு எள் விதைப்பு செய்யனும்.  அதற்கு பிறகு தான் படல் போட்டு இழுத்துவிடனும்.  ஒரு ஏக்கருக்கு 1 – 1/4 கிலோ விதை எள் தேவை.  படி அளவில் சொல்லனும்னா 1 – 1/2 படி விதை எள் தேவை.  ஒரு பாக்கெட் பாஸ்போ பாக்டீரியா, சூடோமோனாஸ் 20 கிராம் தேவை.  முதலில் ஒரு லிட்டர் தண்ணீரில பாஸ்போபாக்டீரியாவை கொட்டி கலக்கிவிட்டு, பிறகு எள்ளை கொட்டி குச்சியால கலக்கிவிடனும்.  அதற்கு பிறகுதான் சூடோமோனாஸை கொட்டி கலக்கனும்.  எள் தண்ணீரை எல்லாம் உறிஞ்சி கெட்டியாகிவிடும்.  அதற்கு அப்புறம் தான் எள்ளை எடுத்து சாக்குல கொட்டி உலர்த்திவிடனும்.  பிறகு விதைகளை எடுத்து விதைப்பு செய்யலாம்.  15 நாள் களை எடுத்துவிட்டு எள் பயிரை களைத்துவிடனும்.  ஒரு சதுர மீட்டருக்கு 10 செடி இருக்குமாறு பார்த்துக்கிட்டு களை எடுக்க லேசான ஈரமும், களை எடுத்த பிறகு எடுத்த களைகளை காயவிட்டு பிறகு தண்ணீர் விடனும்.  இவ்வாறு செய்தால் நல்ல மகசூலும், விளைச்சலும் கிடைக்கும்.
மாசிப்பட்டம் தாண்டி விட்டது என்று என்னவேண்டாம்.  நம் பகுதிகள் பங்குனியிலும் நல்ல மகசூல் பெற்றதை பார்த்திருக்கின்றோம்.  அதேபோல் சித்திரைப்பட்டம் உளுந்து சாகுபடியை பங்குனி கடைசி வாரத்தில் மேற்கொள்வதும் நன்மை பயக்கும்.  எனவே எள்ளா? உளுந்தா? என்பதை முடிவு செய்து அதற்காக முயற்சி எடுக்கவேண்டியது உங்கள் கையில்.