Tuesday, August 21, 2012

கைப்பேசி என்கிற எட்டப்பன்!

கைப்பேசி என்கிற எட்டப்பன்!


உனக்கு ஒரு பரம ரகசியமான விஷயம் சொல்லப் போகிறேன். தப்பித் தவறிக்கூட நீ அதை வேறு யாரிடமும் சொல்லிவிடக் கூடாது?” என்று நீங்கள் கைப்பேசி மூலம் உங்களுடைய நண்பரிடம் குசுகுசுவென்று ஒரு செய்தியைச் சொல்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். ஆனால், அந்தப் பரம ரகசியத்தை இந்தியாவிலிருந்து மட்டுமன்றி, அகில உலகத்திலிருந்தும் பல நூறு பேர் ஒட்டுக் கேட்டுக்கொண்டும் பதிவு செய்துகொண்டுமிருக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியாது!
வனவிலங்குகள், கடல் ஆமைகள், திமிங்கிலங்கள் போன்றவற்றின் கழுத்தில் ஓர் அலைபரப்பிக் கருவியைப் பொருத்திவிட்டு, வானில் சுற்றி வரும் புவியியல் இடமறியும் செயற்கைக் கோளின் உதவியுடன் அந்த விலங்குகளின் நடமாட்டத்தை உயிரி ஆய்வர்கள் கண்காணிப்பார்கள்.
கைப்பேசி உண்மையில் உங்கள் கழுத்தில் கட்டப்பட்டுள்ள ஒரு ரேடியோ காலர். நீங்கள் நடந்தாலும் நின்றாலும் பறந்தாலும் எங்கே இருக்கிறீர்கள், என்ன செய்கிறீர்கள், யார் யாருடன் தகவல் பரிமாறிக் கொள்கிறீர்கள் என்பன போன்ற விவரங்களை அக்கணமே கைப்பேசி நிறுவனங்களின் ஆவணங்களில் பதிவு செய்யும் எட்டப்பன். அதைக் கொண்டு அழைக்கவும் அழைக்கப்படவும் முடிவது உங்களுக்கு ஆசை காட்டும் தூண்டிற் புழு.
கடந்த ஆண்டில் அமெரிக்கக் காவல் துறையினரும் பாதுகாப்புத் துறையினரும் கைப்பேசி நிறுவனங்களிடமிருந்து 13 லட்சம் கைப்பேசி உரையாடல்களைப் பற்றிய பதிவுகளைக் கோரிப் பெற்றிருக்கிறார்கள். பல சமயங்களில் உளவுத்துறையினர் உரிய வாரண்டுகள் ஏதுமில்லாமலேயே கைப்பேசி நிறுவனங்களின் ஆவணங்களை அலசி ஆராய்ந்திருக்கிறார்கள்.
ஜிபிஎஸ் மூலம் புவிப்பரப்பில் துல்லியமாக இடம் அறியும் தொழில்நுட்பமும் கைப்பேசிகளின் பரிணாம வளர்ச்சியும் எதையும் யாரிடமிருந்தும் மறைக்க முடியாத நிலையை ஏற்படுத்தியுள்ளன. ஐஃபோன், ஸ்மார்ட்ஃபோன் என்று பற்பல பயன்பாடுகளுடன் அதிநவீனக் கருவிகள் சந்தைக்கு வந்துள்ளன. அவற்றைக் கைப்பேசி என்று அழைப்பதுகூட இன்றளவில் பொருத்தமில்லை. அவற்றின் மூலம் கைப்பேசி நிறுவனங்கள் கடவுள் நிலைக்கு உயர்ந்து உங்களுடைய ஒவ்வோர் அசைவையும் மேலேயிருந்து பார்த்துக் கொண்டிருக்கின்றன.
காரிருளும் பனிமூட்டமும் அவற்றின் பார்வையைத் தடுக்க முடியாது. ஆழ்கடலுக்கு அடியிலும் சுரங்கங்களுக்குள்ளும் அடர்ந்த வனாந்தரங்களுக்குள்ளும்கூட அவற்றால் பார்க்க முடியும்.
ஸ்மார்ட் ஃபோன் போன்ற அதிநவீனமான கருவிகள் பற்பல பயன்பாடுகளை உள்ளடக்கியுள்ளன. அவற்றை ஒருவர் பயன்படுத்தும்போதெல்லாம் அவரைப் பற்றிய தன்னிலை விவரங்கள் பதிவு செய்யப்படுகின்றன. எந்த எந்தக் கடைகளில் என்ன என்ன பொருள்களை எப்போதெல்லாம் வாங்குகிறார்; அவருடைய வங்கிக் கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது; என்று எப்போது எவ்வளவு பணத்தை வங்கியிலிருந்து எடுக்கிறார் அல்லது வங்கியில் செலுத்துகிறார்; மின்னஞ்சல் மூலம் யார் யாருடன் எப்போதெல்லாம் தொடர்பு கொள்கிறார்; எந்த இணைய தளங்களைப் பார்வையிடுகிறார்; எந்தவிடத்துக்கு, எந்த நேரத்தில், உறங்கப்போய் எப்போது கண் விழிக்கிறார்; இத்யாதித் தகவல்களை அவர் தன்னையும் அறியாமல் கைப்பேசி நிறுவனங்களில் உள்ள கருவிகளில் பதிவு செய்து கொண்டேயிருக்கிறார்.
பல கைப்பேசி நிறுவனங்கள் இத்தகைய தகவல்களைச் சேமித்து வைத்துக்கொண்டு அவற்றை வர்த்தக நிறுவனங்களுக்கு விற்பனை செய்கின்றன. உங்களுக்கு ஓர் அயல்நாட்டு அல்லது உள்நாட்டு ஓட்டலிலிருந்து அழைப்பு வந்தால் வியப்படைய வேண்டாம். அந்த ஓட்டல் இருக்கும் ஊருக்கு நீங்கள் அலுவல் நிமித்தம் அடிக்கடி செல்கிறீர்கள் என்பதையும் அடுத்த மாதம் முதல் வாரத்தில் அங்கு சென்று பத்து நாள்கள் தங்கத் திட்டமிட்டுள்ளீர்கள் என்பதையும் அது கைப்பேசி நிறுவனத்தின் மூலம் தெரிந்துகொண்டது என எளிதாய் ஊகிக்கலாம்.
சுற்றுலாப் பயணிகள் ஒரு புதிய ஊரிலுள்ள முக்கியமான இடங்களுக்குச் செல்லும் பாதையறிய வரைபட வசதியுள்ள கைப்பேசிகளைப் பயன்படுத்துகிறார்கள். அது ஒவ்வொரு கணமும் அவர்களுடைய நடமாட்டத்தைக் கண்காணிக்க உதவுகிறது.
ஒவ்வோராண்டும் தனியார் வர்த்தக நிறுவனங்கள் தமது வாடிக்கையாளர்களின் போக்குவரத்துகள், உரையாடல்கள், நிதி நிலவரங்கள் மட்டுமன்றி, சிந்தனைப் போக்குகளைக் கூடக் கண்டறியவும் கண்காணிக்கவும், தொகுத்து வைக்கவும், தமக்குள் பரிமாறிக் கொள்ளவும் உதவுகிற புதிய சேவைகளைக் கொண்ட கைப்பேசிகளை உருவாக்குவதற்குப் பல மில்லியன் டாலர்களைச் செலவழிப்பதாகக் கொலராடோ பல்கலைக் கழகத்தில் சட்டப் பேராசிரியராக உள்ள பால் ஓம் கூறுகிறார்.
இதையறியாத மக்கள் தேனில் வந்து விழும் ஈக்களைப்போல ஆவலுடன் ஸ்மார்ட் ஃபோன், ஐ போன் என அதிநவீனக் கருவிகளை வாங்கிப் பயன்படுத்தி உணர் கருவிகள் மற்றும் இணையச் சுற்றுகளின் இடையறாத கண்காணிப்பு வலையில் வலுவில் வந்து சிக்குகிறார்கள்.
அதிநவீனக் கைப்பேசிகளின் உதவியால் பூமியில் எந்தவொரு பொருளின் இருப்பிடத்தையும் ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தின் மூலம் புள்ளி துல்லியமாகக் கண்டுபிடித்துவிட முடியும். ஒருவர் எந்த இடத்தில் இருக்கிறார் என்று தெரிந்தால், அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பதை ஓரளவு ஊகித்துவிட முடியும்.
ஒரு கைப்பேசி நிறுவனத்திலுள்ள கருவிகள் அதன் வாடிக்கையாளர்களின் கைப்பேசிகள் எந்த இடங்களிலுள்ளன என்பதை இடையறாது பதிவு செய்து கொண்டே இருக்கின்றன. பல சமயங்களில் காவல் துறையினர் அப்பதிவுகளைக் கோரிப் பெறுவதுண்டு. குறுந்தகவல் செய்திகள் மூலம் விளம்பரம் செய்வோரும் இப்பதிவுகளைக் கோருவார்கள்.
இப் பதிவுகள் ஓராண்டுக் காலத்துக்குப் பராமரிக்கப்பட்ட பின் அழிக்கப்படுவது வழக்கம். ஆயினும், அரசு, நீதிமன்றங்கள் அல்லது காவல்துறையின் கோரிக்கைகளுக்கு இணங்கச் சேமிப்புக் காலம் நீட்டிக்கப்படும். ஒருவரது நடமாட்ட விவரங்களிலிருந்து அவருடைய ஜாதகத்தையே கணித்துவிட முடியும். அவர் நாள் தவறாமல் அலுவலகம் சென்று காலை முதல் மாலை வரை அங்கேயே தங்கி இருக்கிறாரா; இடையிடையே வெளியே சென்று சொந்த வேலைகளை முடிக்கிறாரா; மாலையில் அலுவலகத்திலிருந்து நேராகச் சொந்த வீட்டுக்குப் போகிறாரா அல்லது வேறு வீட்டுக்குப் போகிறாரா; அல்லது பார், சூதாட்ட விடுதி என்று பொழுது போக்குகிறாரா; ஜிம் அல்லது பீச்சில் நடை பயின்று உடல் நலத்தை அக்கறையுடன் பேணிப் பராமரிப்பவரா; எந்த மருத்துவரிடம் எந்த நோய்க்குச் சிகிச்சை பெறுகிறார்? எந்தப் பொழுதுபோக்கு கிளப் அல்லது தொழிற்சங்கம் அல்லது அரசியல் கட்சியில் உறுப்பினராயிருக்கிறார்? சிக்கனமானவரா அல்லது செலவாளியா; இன்னோரன்ன ஏராளமான தன்னிலைத் தகவல்களைக் கைப்பேசிகள் மூலம் திரட்ட முடியும்.
கைப்பேசிகளை ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ள மட்டுமே பயன்படுத்திய காலம் மலையேறிவிட்டது. அதிநவீனக் கைப்பேசிகளின் பயன்படு நேரத்தில் 20 சதவிகிதம்தான் தகவல் பரிமாற்றத்துக்குப் பயன்படுவதாக ஓர் இங்கிலாந்து ஆய்வு தெரிவிக்கிறது. மீதி நேரமெல்லாம் இணைய தளத்தில் மேய்வது, விளையாட்டு, இசை, சமூக வலைத்தளங்களைப் பார்வையிடுவது எனச் செலவழிக்கப்படுகிறது.
அதிநவீனக் கைப்பேசியை வைத்திருப்பவருக்கு கைக்கடிகாரம், கேமரா, கால்குலேட்டர், சிடி பிளேயர், பண்பலை ரேடியோ போன்ற சாதனங்களே தேவையில்லை. அவற்றின் பணிகளையெல்லாம் ஓர் அதிநவீனக் கைப்பேசியால் நிறைவேற்றிக் கொள்ள முடியும். கடன் அட்டைகள், வங்கிக் கணக்கு வரவு செலவுகள், மின் கட்டணம், தொலைபேசிக் கட்டணம் ஆகியவற்றைச் செலுத்துவது எல்லாமே கைவிரல் முனைகளில் சாத்தியமாகிவிட்டன.
சினிமா டிக்கெட் முதல் ரயில் அல்லது பஸ் டிக்கெட் வரை கைப்பேசி வாங்கித் தரும். ஒரு மடிக்கணினிக்குச் சமானமாகச் செயல்படக்கூடிய கைப்பேசிகள் சந்தைக்கு வந்துவிட்டன.
கண்காணிப்பு வலையில் சிக்க விரும்பாத கிளர்ச்சியாளர்கள், பயங்கரவாதிகள், கடத்தல் மன்னர்கள் போன்ற சட்டவிரோதிகள் பொய் முகவரி கொடுத்து அல்லது அனாமதேயமாக ரொக்கப் பணம் தந்து பிரீபெய்டு முறையில் கைப்பேசி இணைப்பு பெறுவார்கள். ஓரிரு நாள்கள் அவற்றைப் பயன்படுத்திவிட்டு கைப்பேசிகளை உடைத்து நொறுக்கி விடுவார்கள். அவை இருக்குமிடம் தெரிந்தாலும் அவற்றை அந்த நபர்களுடன் தொடர்புபடுத்த முடியாது. பல நாடுகளில் பிரீபெய்டு முறையில் ரொக்கமாகக் கட்டணத்தைச் செலுத்தினால் பெயரையும் முகவரியையும் தெரிவிக்க வேண்டாம். அரபு நாடுகளிலும் பர்மாவிலும் கிளர்ச்சியாளர்கள் இந்த வசதியைப் பயன்படுத்திக் கண்காணிப்பிலிருந்து தப்பிவிடுகிறார்கள். நம் நாட்டில் அது முடியாது.
நம்மைப் போன்ற சாமானியர்கள் அழைப்பு அனுப்பவும் பெறவும் மட்டுமே வசதி செய்யும் கைப்பேசிகளை வாங்கி வைத்துக்கொண்டு கண்காணிப்பாளர்களின் கவனத்தை அதிக அளவில் கவராமல் பயன்படுத்தலாம். நாம் போகுமிடம் அவர்களுக்குத் தெரியக் கூடாது என்பதற்காகக் கைப்பேசியை வீட்டிலேயே வைத்துவிட்டுப் போவதில் அர்த்தமில்லை. கைப்பேசியைப் பயன்படுத்தாதபோது அதை அணைத்து வைக்கலாம். ஆனால், நம்மை யாராவது அழைத்தால் தெரியாமல் போகும். பாட்டரியை வெளியே எடுத்து வைத்தாலும் போதும். ஆனால், மீண்டும் உள்ளே பொருத்துவதற்குத் தனித்திறமை வேண்டும். கைப்பேசியே இல்லாமலிருப்பது உத்தமம். ஆனால், அது அசாத்தியம். உண்மையை ஒப்புக் கொள்வோம். கைப்பேசி ஓர் இன்றியமையாத இன்னல், விலக்க முடியாத வில்லன், ஒதுக்க முடியாத ஒற்றன்தான் என்றாலும் அது இல்லாமல் வாழ்க்கை பூரணம் பெறாது!
நன்றி -தினமணி

Monday, August 13, 2012

முள்ளங்கியின் மருத்துவ குணங்கள் :-

முள்ளங்கியின் மருத்துவ குணங்கள் :-

முள்ளங்கி சமைத்து உண்ணக் கூடிய கிழங்கு இனமாகும். நீண்ட வெண்ணிறக் கிழங்காகக் காய்கறிக் கடைகளில் கிடைக்கும். கிழங்கு, இலை, விதை மருத்துவக் குணம் உடையவை. கிழங்கு சிறுநீரைப் பெருக்கும். குளிர்ச்சியை உண்டாக்கும். இலை பசியைத் தூண்டி சிறுநீரைப் பெருக்கித் தாதுவைப் பலப்படுத்தும். விதை காமத்தைப் பெருக்கும். பொதுவாக கிழங்குகளை இரவில் உண்பது உடலுக்கு நல்லது கிடையாது. இதில் அதிகமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்து இருக்கின்றன. கர்ப்பிணிப் பெண்கள் கிழங்கைத் தவிர மற்றவற்றை உண்ணக் கூடாது. தமிழகம் எங்கும் பயிரிடப்படுகின்றது.
வேறு பெயர்கள்: முளா, தசணாக்கியா, முலகஞ்சாமியம், விசுறுகுபந்தம்

வகைகள்:

வெள்ளை முள்ளங்கி:

இதன் கிழங்கு நீண்ட வெள்ளை நிறத்தில் இருக்கும். இதையே நாட்டு முள்ளங்கி என்று கூறுவார்கள். இதில் பிஞ்சு முள்ளங்கியே மருத்துவத்திற்கு மிகவும் சிறந்தது.

சிவப்பு முள்ளங்கி:

இதன் கிழங்கு நீண்டு சிவப்பு நிறத்தில் இருக்கும். இதைச் சமையலுக்குப் பயன்படுத்துவார்கள்.

நீலம் கலந்த மஞ்சள் முள்ளங்கி:

இதன் கிழங்கு நீண்டு நீலம் கலந்த மஞ்சள் நிறத்தில் காய்கள் இருக்கும். இதைப் பெரும்பாலும் சமையலுக்கே பயன்படுத்துவார்கள்.

ஆங்கிலத்தில்: Raphanus sativus; Linn; Brassicaceae

இனி மருத்துவக் குணங்களைப் பார்ப்போம்:


முள்ளங்கி இலைச் சாற்றை 5 மி.லி. அளவு எடுத்து 3 வேளை தொடர்ந்து சாப்பிட்டு வர மலச்சிக்கல், சிறுநீர்க்கட்டு, சூதக்கட்டு, எளிய வாத நோய்கள் குணமாகும்.

முள்ளங்கிக் கிழங்குச் சாறு 30 மில்லி 2 வேளை குடித்து வர சிறுநீரகக் கோளாறு, நீர்த்தாரைக் குற்றங்கள் குணமாகும்.

முள்ளங்கியை உணவுடன் சேர்த்து வர சூட்டைப் பெருக்கி உடம்பை சமச்சீராக வைத்துக் கொள்ளும். எனவே தாராளமாக சிறுநீர் வெளியேறும். பசியை உண்டாக்கி, மலச்சிக்கலைப் போக்கும். அதி மூத்திரம், நீர்த்தடை, வயிற்று எரிச்சல், ஊதின உடம்பு, குடைச்சல், வாதம், வீக்கம், சுவாசக்காசம், கபநோய், இருமல் குணமாகும்.

முள்ளங்கியை சிறுசிறு துண்டுகளாகச் சீவி உலர்த்தியது ஒரு கைப்பிடியளவு எடுத்து, அத்துடன் நெருஞ்சில் முள் காய், சீரகம், கொத்தமல்லி, ஏலரிசி, சோம்பு, வாலுளுவை, கார்போக அரிசி, வாயுவிடங்கம் இவற்றை வகைக்கு அரை கைப்பிடியளவு எடுத்து சேர்த்து இடித்துப் பொடியாக்கி, 25 கிராம் பொடியை 200 மி.லி. நீரில் போட்டு 50 மில்லியாக சுண்டக் காய்ச்சி வடிகட்டி 2 வேளை 25 மில்லியளவாக குடித்து வர மூத்திரம் மிகவும் குறைந்ததாகவும், மாவு கலந்தாற் போலவும், பால் போன்றும் போகும். இதனால் உடம்பிலும், முகத்திலும், வயிற்றிலும் உள்ள வீக்கங்கள் குறையும். மூத்திரம் வெள்ளையாகப் போவதோடு வீக்கம் வற்றிவிடும்.

முள்ளங்கியைச் சிறு சிறு துண்டுகளாகச் சீவி உலர்த்தியது, கைப்பிடியளவு எடுத்து கஞ்சி செய்து குடித்துவர வீக்கம், சுவாசக் குறைபாடுகள் குணமாகும்.
பச்சை முள்ளங்கியை சாறு பிழிந்து சிறிது இந்துப்புச் சேர்த்து பொறுக்கும் அளவிற்கு காய்ச்சி வடிகட்டி காதில் 2 சொட்டுவிட காது குத்தல், காது வலி, காதில் சீழ் வடிதல் குணமாகும்.

முள்ளங்கியை தினமும் உணவில் சாப்பிட்டு வர மூலம், மூத்திரக் கல்லடைப்பு குணமாகும்.

முள்ளங்கி சமூலத்தை சாறுபிழிந்து 200 மில்லியளவு எடுத்து சிறிது சர்க்கரை சேர்த்து 3 வேளை குடிக்க நீர்ச்சுருக்கு நீங்கும்

Saturday, August 11, 2012

தொடர் காய்கறி சாகுபடி..!!!!!!!!

தொடர் காய்கறி சாகுபடி..!!!!!!!!




எந்தெந்த மாதத்தில் என்னென்ன காய்கறிகள் பயிரிட்டால் அதிக மகசூல் பெற்று கூடுதல் லாபம் ஈட்டலாம் என்பது குறித்து விழுப்புரம் மாவட்ட தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் விளக்கியுள்ளனர்.

நமது அன்றாட வாழ்வில் முக்கிய பங்கு காய்கறிகள் வகிக்கிறது. பெரியவர்களுக்கு 85 கிராம் பழமும், 300 கிராம் காய்கறிகளும் அன்றாடம் தேவை என ஆய்வுகள் கூறுகின்றன. தற்சமயம் உற்பத்தியாகும் காய்கறிகள் பெரியவர்களுக்கு சராசரியாக 220 கிராம் மட்டுமே கிடைக்கக் கூடியதாக உள்ளது.

காய்கறிகள் சாகுபடி குறுகிய காலத்தில் அதிக மகசூல் மற்றும் அதிக வருமானம் தரக்கூடியதாக உள்ளதால், வர்த்தக ரீதியில் காய்கறி சாகுபடி செய்வது தற்போதைய தேவையாக உள்ளது.

காய்கறிகளில் சாதாரண ரகங்கள் சாகுபடிக்கு கீழ்கண்டவாறு பருவங்களும் மாதங்களும் முன்னர் கடைபிடிக்கப்பட்டது.
  • தைப்பட்டம்: (டிசம்பர்-ஜனவரி) மாதத்தில் கத்தரி, பூசணி, புடல், பீர்க்கன்.
  • மாசிப்பட்டம்: (பிப்ரவரி, மார்ச்) மாதங்களில் தக்காளி, வெண்டை, காராமணி, மிளகாய், பூசணி, புடல், பீர்க்கன்,வெள்ளரி,
  • ஆடிப்பட்டம்: (ஜூன், ஜூலை) மாதங்களில் தக்காளி, வெண்டை, காராமணி, மிளகாய், பூசணி, புடல், பீர்க்கன், வெள்ளரி

என அந்தந்த பட்டங்களில் அதற்குரிய காய்கறிகளை விவசாயிகள் பயிரிட்டு வந்தனர்.

தற்சமயம் வீரிய ஒட்டுரக காய்கறிகள் அறிமுகமான பின்னர், என்னவகையான காய்கறிகளை சாகுபடிக்கு தேர்ந்தெடுக்கலாம் என்பது குறித்து கோலியனூர் தோட்டக்கலை உதவி இயக்குநர் க. வீராசாமி கூறியது:

  • ஜனவரி: (மார்கழி, தை) கத்தரி, மிளகாய், பாகல், தக்காளி, பூசணி, சுரை, முள்ளங்கி, கீரைகள்.
  • பிப்ரவரி: (தை,மாசி) கத்தரி, தக்காளி, மிளகாய், பாகல், வெண்டை, சுரை, கொத்தவரை, பீர்க்கன், கீரைகள், கோவைக்காய்.
  • மார்ச்: (மாசி, பங்குனி) வெண்டை, பாகல், தக்காளி, கோவை, கொத்தவரை, பீர்க்கன்.
  • ஏப்ரல்: (பங்குனி, சித்திரை) செடி முருங்கை, கொத்தவரை, வெண்டை.
  • மே: (சித்திரை, வைகாசி) செடி முருங்கை, கத்தரி, தக்காளி, கொத்தவரை.
  • ஜூன்: (வைகாசி, ஆனி) கத்தரி, தக்காளி, கோவை, பூசணி, கீரைகள், வெண்டை.
  • ஜூலை: (ஆனி, ஆடி) மிளகாய், பாகல், சுரை, பூசணி, பீர்க்கன், முள்ளங்கி, வெண்டை, கொத்தவரை, தக்காளி.
  • ஆகஸ்ட்: (ஆடி, ஆவணி) முள்ளங்கி, பீர்க்கன், பாகல், மிளகாய், வெண்டை, சுரை.
  • செப்டம்பர்: (ஆவணி, புரட்டாசி) செடிமுருங்கை, கத்தரி, முள்ளங்கி, கீரை, பீர்க்கன், பூசணி.
  • அக்டோபர்: (புரட்டாசி, ஐப்பசி) செடிமுருங்கை, கத்தரி, முள்ளங்கி.
  • நவம்பர்: (ஐப்பசி, கார்த்திகை) செடிமுருங்கை, கத்தரி, தக்காளி, முள்ளங்கி, பூசணி.
  • டிசம்பர்: (கார்த்திகை, மார்கழி) கத்தரி, சுரை, தக்காளி, பூசணி, முள்ளங்கி, மிளகாய் ஆகிய காய்கறிகளை பயிரிடலாம்.

இங்கு குறிப்பிட்டவைகளில் அந்த காலகட்டத்தில் எந்த காய்கறிக்கு மார்க்கெட் விலை அதிமகமாக உள்ளது என்பதை அறிந்து பயிரிட்டால் கூடுதல் லாபம் பெறலாம் என்றார் வீராசாமி.

தோட்டக்கலைத் துறையில் உள்ள துல்லிய பண்ணைத் திட்டத்தின் கீழ் 65 சதவீத மானிய விலையில் சொட்டு நீர்ப்பாசன உதவிகள் மற்றும் ரூ. 15,000 மதிப்பில் நீரில் கரையும் உரம் ஆகிய இடுபொருள்களுக்கான மானிய உதவிகளைப் பெற்று காய்கறி சாகுபடி செய்ய முன்வருமாறு பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

நன்றி: தினமணி

நாம் உட்கொள்ளும் உணவு

நாம் உட்கொள்ளும் உணவு வாயுனுள் ஆரம்பித்து ஆசனவாய் வழியாக சக்கையாக வெளிவரும் நிகழ்வுகளின் முழுமையான தகவல்கள். நேரம் கிடைக்கும் படித்து அறிந்துகொள்ளுங்கள் .

வாயிலே உணவைப்போட்டுக் கொள்கிறோம். திடப்பொருளானால் அதை மெல்கிறோம். திரவமானால் விழுங்குகிறோம். அது தொண்டையில் இறங்குகிறது. இந்த உணவுக்கு என்ன நேர்கிறது? ஜீரணமாதல் என்னும் சுவையான நிகழ்ச்சியைப் பற்றி இப்போது கவனிப்போம். நல்ல உணவுப் பழக்கங்களின் தேவையை உணரவும் இந்த விவரங்கள் பயன்படும்.

வாயிலே நேர்வது என்ன?

வாயிலே உணவை மெல்லும்போது அது சின்னஞ்சிறு துகள்களாக நொறுங்கி உமிழ்நீருடன் நன்றாகக் கலக்கிறது. வாயிலே எப்போதும் சுரக்கும், நிறமற்ற திரவமே உமிழ்நீர். உமிழ்நீர் வெறும் நீர்தானே என்று நினைக்கலாம். அப்படியல்ல அதிலுள்ள நுட்பமான என்ஸைம்கள் உணவை செரிக்கின்றன. உமிழ்நீரிலுள்ள என்ஸைம் பொருளாக மாற்றுகிறது.

சொல்லப்போனால். செரித்தல் என்பது இந்த இயக்கம்தான். இந்த மாற்றம் தான். எத்தனையோ விதமான உணவுப் பொருள்களை உடல் ஈர்த்துக் கொள்ளும் வண்ணம் பலவகை என்ஸைம்கள் மாற்றுவதும், அந்தச் சத்து உடலின் தேவைக்குப் பயன்படுவதுமே செரித்தல் என்னும் இயக்கம். என்ஸைம்களை உடலின் பல உறுப்புகள் தயாரிக்கின்றன. உணவை ஜீரணிக்க ஏற்ற இடங்களில் இந்தச் சாற்றைச் செலுத்துகின்றன. கடைசியாக, செரித்ததுபோக எஞ்சிய பொருளே மலமாக வெளியேறுகிறது. ஜீரண இயக்கத்தை படிப்படியாக தொடர்ந்து பார்ப்போம்.

சாப்பிடத் தொடங்கும் போது, ஏன், நல்ல உணவு மணக்கும் போதே, வாயிலே நீர் சுரக்கிறது. வாயிலுள்ள மூன்று ஜோடி உமிழ்நீர்ச் சுரப்பிகளிலிருந்து உமிழ்நீர் சுரக்கிறது. இரண்டு காதுகளுக்கும் கீழ், முன்புறத்தில் ஒரு ஜோடி; கீழ்த்தாடையின் பின்புறம் ஒரு ஜோடி; நாக்கின் அடியில் மூன்றாவது ஜோடி. தினமும் நமது வாயில் சுரக்கும் உமிழ்நீர் சுமார் பத்து கப் இருக்கும் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். உமிழ்நீரிலிருக்கும் என்ஸைம், கார்போஹைடிரேட்டைப் பொடிப்பொடி யாக்கி, எளிதில் கரையும் சர்க்கரைப் பொருளாக மாற்றுகிறது என்று பார்த்தோம். உணவைக் கடித்து மென்றால். உமிழ்நீர் தன் வேலையைச் செய்ய உதவியாக இருக்கும். அதனால் தான் ஒவ்வொரு கவளத்தையும் முப்பத்திரண்டு முறை – எத்தனை பற்கள் உண்டோ அத்தனை முறை – கடித்து மெல்ல வேண்டும் என்று வேடிக்கையாகச் சொல்வதுண்டு.

அடுத்து, உணவு தொண்டையில் இறங்குகிறது. விழுங்கும்போது தொண்டையிலே தளரும் குரல்வளை மூடி, சரியாக வழிவிட்டு, உணவுக் குழாய்க்குள் உணவு செல்லுமாறும் அதற்கு அருகிலேயே உள்ள காற்றுக் குழாய்க்குள் போகாமலும் பார்த்துக் கொள்கிறது. எப்போதாவது இந்த மூடி உடனுக்குடனே மூடிக்கொள்ளாமல் ஒரு சிறு பருக்கையோ, ஒரு துளி திரவமோ காற்றுக் குழாய்க்குள் நுழைந்துவிடும். அப்போது நாம் என்ன பாடுபடுகிறோம். இருமல் வருகிறது. புரை ஏறுகிறது. கண்ணிலே நீர் வந்துவிடுகிறது.

இரைப்பை

விழுங்கப்பட்ட உணவு, உணவுக்குழாய் வழியாக இறங்கி, இரைப்பை என்னும் முக்கியமான உறுப்புக்குள் வந்து சேர்கிறது. இது ஒரு பை போன்றது. ஓயாமல் சுருங்கி, விரிந்து இயங்கிக் கொண்டேயிருக்கும் பை. இந்த அசைவினால் உள்ளே இருக்கும் உணவு நன்கு அரைக்கப்படுகிறது. இரைப்பைக்குள் பல புதிய என்ஸைம்கள் சேர்கின்றன. இரைப்பையின் உட்சுவரில் உள்ள சுரப்பிகள் சுரக்கும் என்ஸைம்கள், இவை இவற்றிலே ஒன்று ரென்னின்; நாம் பால் அருந்தியிருந்தால். அதிலுள்ள புரோட்டீனை மெத்தென்ற தயிராக்குவது இதுவே. மற்றொரு என்ஸைம், பெப்சின். இது புரோட்டீன் வகைகளை பெப்டோன் என்னும் எளிதில் கரையும் ஜீரணப் பொருளாக மாற்றுகிறது.

பெரிய அளவில் ஹைடிரோகுளோரிக் அமிலத்தைத் தயாரிக்கிறது. இரைப்பை. இரசாயனச் சோதனைச் சாலைகளில் கண்ணாடிக் குப்பியில் வைத்திருக்கும் அதே அமிலம் தான். இந்த அமிலம் செய்யும் வேலைகள் பல. ஒன்றோடொன்று இணைந்திருக்கும் புரோட்டீன் துகள்களை இது வளரச் செய்து தகர்க்கிறது. இந்த புரோட்டீன்களை பெப்டோனாக மாற்றும் வேலையில் ஈடுபட்டுள்ள பெப்சின் என்னும் என்ஸைமுக்கு ஒரு வலுவைத் தருகிறது. பலவகை உணவுகளில் கலந்துள்ள கனிமச்சத்தைப் பிரித்தெடுப்பதும் இந்த அமிலம்தான்; உணவுடன் வந்து சேர்ந்துவிடும் பாக்டீரியா நுண் கிருமிகளை அழிப்பதும் இதுவே. வாயிலே உணவு இருப்பது சில நிமிட நேரம் தான்.

ஆனால் இரைப்பையிலே அது பல மணிநேரம் தங்குகிறது. நன்றாகச் சாப்பிட்ட பின்னர் சுமார் இரண்டு மணி நேரம் வரை ரென்னின், பெப்சின், ஹைடிரோ குளோரிக் அமிலம் மூன்றும் இரைப்பையில் மிக அதிகம் சுரக்கின்றது. ஜீரணப் பணி வெகு தீவிரமாக நடைபெறுகிறது. இரைப்பையில் நிகழ்வது என்ன என்பதைச் சுருக்கமாகச் சொல்வதானால், பெரும்பாலும் புரோட்டீன் பண்டங்கள் துகளாகி, இரண்டும் என்ஸைம்கள் மற்றும் ஹைடிரோ குளோரிக் அமிலத்தின் உதவியுடன் பெப்டோன்களாக மாறுகின்றன எனலாம். மருத்துவர்கள் இரைப்பை நிகழ்ச்சியை ‘காஸ்ட்ரிக் ஜீரணம்’ என்கிறார்கள்.

அவ்வப்போது இரைப்பையின் அடிவாய் மூடி சிறிது திறந்து கொள்ளும்; ஓரளவு ஜீரணமான உணவு – கூழாய், பசையாய் விளங்கும் உணவு – அதன் வழியே செல்லும் மூடி உடனுக்குடன் மூடிக்கொள்ளும். நமது உடலுக்குள் நிகழும் அற்புத இயக்கங்களிலே இதுவும் ஒன்று. இரைப்பையிலே உணவு நெடுநேரம் தங்கிச் சிறிது சிறிதாக வெளியேறுவதால் நாம் தினம் மூன்று நாலுமுறை உணவு உண்டால் போதும். இரைப்பை ஒரேடியாகக் காலியாகிவிட்டால், அப்புறம் பசி நம்மை எப்போதும் வாட்டிக் கொண்டே இருக்கும்!

சிறுகுடல்

கூழான, பாதி செரித்த உணவு எடுத்துச் செல்லும் பகுதியே சிறுகுடல். இதன் மேல் பகுதிக்கு டியோடினம் என்று பெயர். இது ஓரடி நீளம் இருக்கும். சிறுகுடலின் பிற பகுதியைவிட அகன்றது இந்தப் பகுதி. இந்த டியோடினத்திற்குள் சொட்டுச் சொட்டாகக் கொட்டுகிறது ஓர் என்ஸைம் சாறு. இது இரண்டு பொருள்களின் கலவை. ஒன்று பித்தச் சாறு, கல்லீரலிலிருந்து வரும் காடியான சாறு. இரைப்பைக்கும் குடலுக்கும் இடையிலுள்ள கணையம் என்னும் உறுப்பிலிருந்து வருவது மற்றொரு சாறு. இந்த உறுப்புகள் எங்கே உள்ளன என்பதை அறிய உதவுகிறது. வரைபடம் மூன்றாவது பொருள் ஒன்றும் ஜீரணத்துக்கு உதவுகிறது. இதுவே குடல்சாறு, குடலில் வழியெங்கும் சுரக்கும் சாறு இது. நமது சிறுகுடல் மெல்லியதாக இருந்தாலும் மிகவும் நீண்டது; நம் உயரத்தைப்போல் ஐந்தாறு மடங்கு இருக்கும்! அதனால் அது பக்குவமாக, கச்சிதமான மடிப்புகளுடன், வயிற்றுக்குள், தொப்புளுக்குப் பின்னே உள்ளது. இந்த நீண்ட சிறுகுடலுக்குள்ளே தான் ஜீரண இயக்கத்தின் பெரும் பகுதி நிகழ்கிறது.

ஜீரண இயக்கம் என்பது சற்றுச் சிக்கலான பணி. கணையம் அனுப்பும் சாற்றில் பல என்ஸைம்களும் உள்ளன. ஹார்மோன் என்னும் ஊக்குவிக்கும் சாறுகளும் உள்ளன. இவை எல்லாமாகச் சேர்ந்து, முன்னரே பெட்டோனாக மாறிய புரோட்டீன் உணவுகளை மேலும் தகர்க் கின்றன. தனித்தனி அமினோ அமிலங்களாக மாற்றுகின்றன. கணையச்சாறு, கார்போஹைடி ரேட் மற்றும் கொழுப்புச் சத்தை ஜீரணித்து விடுகிறது. கார்போ ஹைடிரேட் மாவுச் சத்தைச் கணையச் சாறு எளிதில் கரையும் குளுக்கோஸ் பொருளாக மாற்றுகிறது. கொழுப்பை இன்னும் எளிய பொருளாக மாற்றுகிறது. இந்த மாற்றத்தை நிகழ்த்த கல்லீரல் ஒரு பொருளைத் தயாரிக்கிறது.

மனித உடலில் கல்லீரல் தான் இரசாயன சோதனைச்சாலை. லிவர் என்னும் ஆங்கிலச் சொல்லுக்கு கல்லீரல் என்றும் பொருள்; வாழ்பவர் என்றும் பொருள். இதை வைத்து, வாழ்க்கை எப்படி இருக்கிறது? லிவரைப் பொறுத்து இருக்கிறது என்ற சிலேடையாகச் சொல்வதுண்டு. இரண்டு பொருளிலும் இது உண்மையான வாசகம். கல்லீரலுக்குள் இதயத்திலிருந்து இரத்தம் வருகிறது. இரத்தத்திலுள்ள சர்க்கரை அளவையும், தசைகளில் இவற்றின் சேமிப்பையும் சீராக வைத்துக் கொள்வது கல்லீரலின் பொறுப்பு. இது இரத்தத்திலிருந்து அமினோ அமிலங்களை எடுத்து புரோட்டீன் மாற்றி, சேகரித்து வைத்துக் கொள்கிறது. உடலில் வேறு எங்கேயாவது தேவைப்படும் போது இந்த புரோட்டீனை இரத்தத்தில் வழியாக அங்கே அனுப்புகிறது. உடலிலே விஷப்பொருள் ஏதாவது வந்துவிட்டால் இந்த விஷத்தை முறிப்பது கல்லீரலே. பல வைட்டமின்களையும் கனிச்சத்துகளையும் சேகரித்து வைத்துக் கொள்வதும் அதுவே.

கல்லீரல் தயாரிக்கும் பொருள்களில் ஒன்று பித்தச்சாறு. இது பசுமை கலந்த மஞ்சளான, காடியாபன ஒரு சாறு. அதிலே என்ஸைம் சத்து ஒன்றும் இல்லை. ஆனால் பல பயனுள்ள இரசாயனப் பொருள்கள் இதிலே உள்ளன. இவற்றின் வேலை, உணவை நுட்பமான சின்னஞ்சிறு துகள்களாக்கிக் கலவைச் சாறில் மிதக்கச் செய்து. இந்தச் சாற்றுக்கு எம்ல்ஷன் என்று பெயர். பால் இத்தகைய ஓர் எம்ல்ஸன்தான். உணவு இவ்வாறு எம்ல்ஸன் நிலைக்கு வந்துவிட்டால் என்ஸைம்கள் அதனை ஜீரணிப்பது எளிது. முக்கியமாக, கொழுப்புப் பொருளைப் பித்தநீர் இந்தப் பக்குவத்துக்குக் கொண்டு வந்தால் தான் குடலிலே இது ஜீரணமாகும்.

இவ்வாறு நாம் உண்ட உணவெல்லாம் நீரிலே கரையும் பல வகைத் துகள்களாகத் தகர்க்கப்பட்டுப் பல பொருள்களாக மாறுகின்றன. இதற்கு என்ன நேர்கிறது? இந்தச் சத்துக்கள் உடலிலே ஈர்க்கப்பட வேண்டும். இது நிகழ்வது சிறுகுடலிலேதான். சிறு குடலின் உட்சுவரிலே பல உள்ளன. இவற்றுக்கு ‘வில்லி’ என்று பெயர். ஜீரணமான உணவிலிருக்கும் சத்தை இவை உறிஞ்சிக் கொண்டு நேரே இரத்தத்தில் கலக்கச் செய்கின்றன. உடனே இரத்தம், தனது சுற்றோட்டத்தில் இந்தச் சத்துக்களை எடுத்து உடலெங்கும் பரப்புகிறது. ஜீரணமாக கொழுப்புச் சத்து நிணநீர் நாளத்தின் வழியாகத் தனியே எடுத்துச் செல்லப்படுகிறது. பிறகு கழுத்தின் அருகே இரத்தத்தில் அந்தச் சத்து கரையச் செய்கிறது. இவ்வாறு நாம் உண்ணும் உணவு இரத்தத்தை அடைகிறது. இரத்தத்தின் மூலம் உடலின் எல்லாப் பகுதிகளுக்கும் செல்கிறது. உடலுக்குச் சக்தி தரவும், உடல் வளர்ச்சிக்கும், உடலின் இயக்கங்களை நிறைவேற்றவும் உதவுகிறது.

வைட்டமின்களும் கனிச்சத்தும் சாதாரணமாக நீரில் கரையக் கூடியன. இல்லாவிட்டாலும் இரத்தத்தில் கரையும் வகையில் அவற்றுக்குத் தேவையான மாற்றம் தரமுடியும். வைட்டமின் ஏ மட்டும் விதிவிலக்கு. அது கொழுப்பில் கரைவது. சிறுகுடலில் கொழுப்பு போலவே இது உறிஞ்சப்படுகிறது. வைட்டமின்களும் கனிச்சத்தும் செரிமானத்தின் போது நுண்துகள்களாக உடைபடுவதில்லை இதர சத்துப் பொருள்கள் ஜீரணமானதும் இவை அப்படியே உடலிலே கரைந்து கலந்து விடுகின்றன.

பெருங்குடல் :

சிறுகுடலைத் தொடர்ந்துள்ள பெருங்குடல் வழவழப்பானது. சிறுகுடலில் உள்ளதுபோல அதற்குள்ளே உறிஞ்சுகுழாய் ஒன்றும் இல்லை. தடிமனான சைக்கிள் ட்யூபைப் போன்றது அது. படத்தைப் பார்த்தால் ‘ப’ எழுத்தைக் கவிழ்த்தது போன்று இது விளங்கக் காணலாம். ஜீரணமான உணவு இதன் வழியே செல்லச் செல்ல அதன் உட்சுவர் வழியே உணவிலுள்ள நீரேல்லாம் இரத்தத்திலே உறிஞ்சப்படுகிறது. இதனால் உணவு திரவநிலை குறைந்து திடப் பொருளாக மாறுகிறது. ஜீரணமான உணவிலே வேறு சில மாற்றங்களும் நேர்வதால் சற்று துர்நாற்றம் வருவதற்கும் காரணமாகிறது. ஜீரணமாகாத பொருளெல்லாம் சேர்ந்து ஆசன வாய் என்னும் வெளியேற்ற வழியாக மலமாக வெளியேறுகிறது

கோவிலில் தீபம் காட்டுவது ஏன்?

கோவிலில் தீபம் காட்டுவது ஏன்?
---------------------------------------------------
தீப வழிபாடு நம் தமிழகத்தில் பழங்காலத்தொட்டு நடைபெற்று வருகிறது.கோவிலில் தெய்வத்திற்கு செய்யப்படும் பதினாறு உபச்சாரங்களில் தீப ஆராதனையும் ஒன்று.கோவிலில் காட்டப்படும் தீபம் ஞானத்தின் அறிகுறியாகும்.

தீபத்தை இறவனுக்கும் காட்டுவதற்கு முன்னால்,ஒரு திரை போடப்படுகின்றது.தீபத்தை காட்டும்பொழுது திரை விலக்கப்படுகிறது.இதன் தத்துவம் என்னவென்றால்,நம்முடைய ஆணவம் என்கின்ற திரையை விலக்கினால் மனதில் ஞான ஒளி பிறந்து.நம்முடைய மனம் தெய்வ நிலையை அடையும் என்பதாகும்.

தெய்வத்திற்கு மூன்றுமுறை தீபம் காட்டப்படுகிறது,முதலில் காட்டுவது உலக நன்மைக்காவும்,இரண்டாவது காட்டுவது ஊர் நன்மைக்காகவும்,மூன்றாவது காட்டுவது பஞ்ச பூதங்களின் நன்மைக்காகவும் ஆகும்.

பூசைக் காலத்தில் பலவித தீபங்கள் காட்டப்பெறுகின்றன. தீபாராதனைக் காலத்தில் தெய்வங்கள் பலவும் தீபங்களில் வந்து அமர்ந்து இறைவனைத் தரிசித்துச் செல்வார்கள் என்பது மரபு. பல அடுக்குகளைக் கொண்ட நட்சத்திர தீபம் முதல் பல தீபங்கள் காட்டப் பெறுகின்றன.

நட்சத்திரங்கள் இறைவனை வழிபட்டு ஒளி பெறுகின்றன என்ற கருத்தில் நட்சத்திர தீபம் காட்டப் பெறுகின்றது. ஒன்பது தீபங்கள் நவசக்திகளைக் குறிக்கும்.

ஏழு தீபங்கள் சப்தமாதர்களைக் குறிக்கும். ஐந்து தீபம் – நிவிர்த்திகலை, பிரதிட்டாகலை, வித்தியாகலை, சாந்திகலை, சாந்தி அதீதகலை என்ற ஐந்து கலைகளைக் குறிக்கும். மூன்று தீபம் சந்திரன், சூரியன், அக்னி என்ற மூன்று ஒளிகளைக் குறிக்கும். ஒற்றைத் தீபம் சரசுவதியையும், சுவாகாதேவியையும் சுட்டும்.

அறிவியல் பூர்வமாக பார்த்தால் அந்த காலத்தில் மின்சார வசதி இல்லாததால் இறைவனின் முகம் தெளிவாக தெரிவதற்கு தீபம் காட்டபடுவதாக சிலரின் கருத்தாக இருக்கும்.எது எப்படி இருந்தாலும் பஞ்சபூதங்களில் ஒன்றான அக்னியை தீபமாக காட்டுவதில் நிறைய தத்துவங்கள் அடங்கிருப்பது என்பதே உண்மை.

காப்பீடு… கவனம்!

காப்பீடு… கவனம்!


நம்மில் சிலர், காப்பீட்டு விண்ணப்பப் படிவத்தில் கொடுக்கும் தகவல் குறித்து அதிகம் அலட்டிக்கொள்வதில்லை. அதனால் பெரிதாக என்ன பாதிப்பு ஏற்பட்டுவிடப் போகிறது என்ற அலட்சியம். அது சரிதானா?

உதாரணத்துக்கு இதைப் பாருங்கள்... 3 லட்ச ரூபாய் வருடாந்திர வருமானம் கொண்டவர் ராஜேஷ். இவர் பல்வேறு காப்பீட்டு நிறுவனங்களில் மொத்தமாக ரூ. 25 லட்சத்துக்குக் காப்பீடு செய்திருக்கிறார். மீண்டும் ரூ. 1 கோடிக்கு காப்பீடு பெறுவதற்கு ஒரு புதிய டெர்ம் இன்சூரன்ஸுக்கு ராஜேஷ் விண்ணப்பித்தார்.

அப்போது, மேலும் கூடுதலாக ரூ. 50 லட்சத்துக்கு மட்டுமே காப்பீடு பெற முடியும் என்று கூறி ராஜேஷின் விண்ணப்பத்தைக் குறிப்பிட்ட காப்பீட்டு நிறுவனம் நிராகரித்து விட்டது.

ஏன் அவ்வாறு செய்தது?

ராஜேஷ் தனது பணிவாழ்க்கைக் காலம் வரை (58 வயது) வாழ்வார் என்றால் அவர் மொத்தமாக ரூ. 75 லட்சம் சம்பாதிப்பார். அதாவது, ரூ. 3 லட்சம் * 25 ஆண்டுகள். ஆண்டுதோறும் ராஜேஷின் சம்பளம் உயரும் என்றாலும், வருடங்கள் குறையும் என்பது போன்ற காரணங்களால் உத்தேசமாகத்தான் இந்தக் கணக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.

ராஜேஷ் ஏற்கனவே ரூ. 25 லட்சம் காப்பீடு பெற்றிருக்கிறார். புதிதாக ரூ. 1 கோடிக்கு காப்பீடு பெற்றால் அவரது மொத்தக் காப்பீடு ரூ. 1.25 கோடியாக உயரும். ராஜேஷ் உயிரோடு இருந்தால் எவ்வளவு சம்பாதிப்பாரோ அதைவிட அதிகமாக அவரது மரணத்துக்குப் பின் பெறும் நிலை ஏற்படும்.

எளிமையாகக் கூற வேண்டும் என்றால், ராஜேஷின் வாரிசுதாரர்கள் அவர் உயிரோடு இருந்தால் எவ்வளவு பெறுவார்களோ, அதைவிட அதிகமாக அவர் இறந்தால் பெறுவார்கள். இந்த `லாஜிக்'கின் அடிப்படையில்தான் புதிய காப்பீட்டு நிறுவனம் ரூ. 1 கோடிக்கான அவரது விண்ணப்பத்தை நிராகரித்தது.

நீங்கள் லாபம் அடைவதற்கான அமைப்பல்ல, காப்பீட்டுத் திட்டம். ஒருவர் உயிரோடு இருப்பதைவிட, காலமானால் அதிகப் பயன் கிட்டும் என்ற கருத்து ஏற்பட்டால், காப்பீடு தவறாகப் பயன்படுத்தப்படலாம். காப்பீட்டுத் திட்டம் எதற்காக உருவாக்கப்பட்டதோ அந்த அடிப்படை நோக்கமே அடிபட்டுப் போகும். ஏற்கனவே காப்பீடு தொடர்பான பல குற்றங்கள் உலகளவில் காணப்படுகின்றன.

ஒருவர் தான் ஏற்கனவே பெற்றிருக்கிற காப்பீடுகளை தெரிவிக்காமல் அல்லது ஒன்றிரண்டு காப்பீடுகளை மட்டும் தெரிவித்தால், அவர் காலமாகும்போது அவருக்கான `கிளெய்மை' நிராகரிக்க காப்பீட்டு நிறுவனத்துக்கு உரிமை உண்டு. புதிய காப்பீடைப் பெறுவதே பலனளிக்காமல் போகும்.

எனவே உங்களின் காப்பீட்டு முகவர், அனைத்துத் தகவல்களையும் அளிக்கும்படி வற்புறுத்தினால் எரிச்சல்பட்டு, `எனக்குக் காப்பீடே வேண்டாம்' என்று மிரட்டாதீர்கள். முழுமையான தகவல்கள் இல்லாமலே அவர் விண்ணப்பத்தை அனுப்பிவிடக்கூடும். ஆனால் அதனால் நஷ்டமடையப் போவது உங்கள் குடும்பம்தானே தவிர, முகவர் அல்ல.

Wednesday, August 8, 2012

நிச்சயமற்ற மழையைச் சமாளிக்க சம்பா பருவத்தில் நேரடி புழுதி நெல் விதைப்பு

நேரடி புழுதி நெல் விதைப்பு பணி
நேரடி புழுதி நெல் விதைப்பு பணி


மாறிவரும் கிராம சமூக பொருளாதார காரணிகளால் வேளாண்மைக்கு பணியாளர்கள் கிடைப்பது ஒரு பிரச்னையாக மாறி வருகிறது.

இதை சமாளிக்க தமிழக அரசு வேளாண்மையில் இயந்திர மயமாக்கலை ஊக்குவித்து வருகிறது. மேலும் டெல்டா மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை குறைந்து குறுவை சாகுபடி குறைந்துள்ளது. மேட்டூர் அணையில் போதுமான நீர் இல்லாமையால் எதிர்வரும் சம்பா பருவமும் நிச்சயமற்ற சூழல் விவசாயிகளிடையே எழுந்துள்ளது.


இந்நிலையில் சம்பா பருவத்தில் நேரடி புழுதி விதைப்பு செய்தால் வெற்றிகரமான சாகுபடி செய்யமுடியும் என்கிறார் கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை வேளாண் உதவி இயக்குநர் எஸ்.ரமேஷ். நேரடி புழுதி விதைப்பு குறித்து அவர் தெரிவித்தது:
சம்பா பருவத்துக்கு நாற்று விடும் பருவமான ஆகஸ்ட் மாத இறுதியில் அல்லது செப்டம்பர் மாத முதல் வாரத்தில் பாசனத்துக்கு மேட்டூர் நீர் கிடைக்காது என்ற சூழ்நிலை ஏற்பட்டால் புழுதி நேரடி விதைப்பு முறை ஒரு சிறந்த தீர்வாகும். இம்முறை கடந்த 2004-ல் இதேபோன்ற நிச்சயமற்ற காலநிலையில் வேளாண் துறையால் இம்முறை பரிந்துரைக்கப்பட்டு விவசாயிகளால் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்ட ஒன்றாகும்.
புழுதி விதைப்பு செய்வது எப்படி?

அவ்வப்போது கிடைக்கும் மழைக்கேற்ப நிலத்தை இரண்டு அல்லது மூன்று முறை புழுதி உழவு செய்துகொள்ள வேண்டும். செப்டம்பர் 5 லிருந்து 15 தேதிக்குள் விதைப்பு செய்து படல் இழுத்து விதைகளை மூட வேண்டும். இதை டிராக்டரைக் கொண்டு செய்ய முடியும். இவ்வாறு புழுதி விதைப்பு செய்யப்பட்ட விதைகள் மழை மூலமோ, பாசனம் செய்தோ போதுமான ஈரப்பதம் கிடைக்கும்போதோ முளைத்து வரும். வாரக்கடைசியில் மழை இல்லாவிட்டாலும் விதைகள் பாதிக்கப்படுவதில்லை. சில சமயம் மழை போதுமானதாக அமையாவிடில் வயலில் மேலாக உள்ள விதைகள் மட்டும் முளைத்துவரும். அடுத்து வரும் மழைக் காலங்களில் மீத விதைகள் முளைக்கும். இதனால் ஏற்படும் நாற்றின் வயது வேறுபாட்டை உர மேலாண்மை மூலம் சரிபடுத்திக் கொள்ள முடியும்.

விதை அளவு:

சம்பா பருவத்துக்கு நாற்றங்காலுக்கு பரிந்துரைக்கப்படும் அளவான ஏக்கருக்கு 16 கிலோவை போல இருமடங்கு அளவு விதையளவு நேரடி புழுதி விதைப்புக்கு பயன்படுத்த வேண்டும். அதாவது ஒரு ஏக்கருக்கு 30 லிருந்து 35 கிலோ வரை விதைகளை, விதைப்பு செய்யலாம். நேரடி புழுதி விதைப்புக்கு விதை டிரம் அல்லது விதைக் கருவி (நங்ங்க் ஈழ்ண்ப்ப்) கொண்டு விதைப்பு மேற்கொள்ளலாம். இவ்வாறு செய்யும்போது ஏக்கருக்கு 12 அல்லது 15 கிலோ விதையே போதுமானதாக இருக்கும். இம்முறையை கடைபிடித்தால் வேளாண்மைத்துறை வழங்கிவரும் திருத்திய நெல் சாகுபடிக்கான மானிய உதவிகளை பெற முடியும்.

நேரடி விதைப்புக்கு ஏற்ற ரகங்கள் மற்றும் வயது விவரம்:

காவித்திரி (இத-1009)- வயது 160 நாள், மேம்படுத்தப்பட்ட வெள்ளை
 பொன்னி – 140 நாள், அஈப-38- 135 நாள், இஞ-43 – 135 நாள், இஞ(த)-48, இஞ (த)-50 , ஆஆப-5204 – 135 நாள். செப்டம்பர் 15 தேதியிலிருந்து 30 வரை விதைப்பு செய்யும்போது அஈப-39 (125 நாள் பயிர்) ரகத்தை விதைப்பு செய்யலாம்.
 
களை நிர்வாகம்:

நேரடி புழுதி விதைப்பின் பிரச்னையாக கருதுவது களை எடுக்கும் பணி. இதற்கு விவசாயிகள் ரசாயன களைக்கொல்லிகளைப் பயன்படுத்தி தீர்வு காணலாம். பயிர் முளைத்து 15 நாட்களிலிருந்து 25 நாட்களுக்குள் வயலில் எம்மாதிரியான களைகள் முளைத்துள்ளன என்பதற்கேற்ப களைக் கொல்லிகளை தேர்வு செய்து களைகளை கட்டுப்படுத்தலாம். வயலில் கோரைகள் மட்டும் இருப்பின் 2,4 ஈ கலைக்கொல்லியை ஒரு லிட்டர் நீருக்கு 5 கிராம் என்ற அளவில் தெளித்து கட்டுப்படுத்தலாம். வயலில் புல் வகை களைகள் மட்டும் இருப்பின் ஃபெளோக்சா புரோப்பாரிதல் 9.3 சதவீத நஇ களைக் கொல்லியை ஒரு லிட்டர் நீருக்கு 2.5 மி.லி என்ற அளவில் தெளித்துக் கட்டுப்படுத்தலாம். வயலில் கோரைகள், புற்கள் என இரண்டு விதமான களைகளும் இருப்பின் பிஸ்பைரிபேக் சோடியம் 10 சதவீதம் நஇ களைக் கொல்லியை ஒரு லிட்டர் நீருக்கு 1 மி.லி என்ற அளவில் சேர்த்து தெளித்துக் கட்டுப்படுத்தலாம். இந்த களைக்கொல்லியைப் பயன்படுத்துகையில் வயலில் நீர் தேங்கி நிற்கக்கூடாது.

உர நிர்வாகம்:

பயிர் முளைத்தலிலிருந்து 30-ம் நாள் வயலில் நீர் நிறுத்தி அடியுரம் இட வேண்டும். அடியுரம் இட்டதிலிருந்து 20 நாட்கள் இடைவெளியில் மேலுரம் இட வேண்டும்.

பயிர் எண்ணிக்கை பராமரித்தல்:

நேரடி விதைப்பில் பயிர் எண்ணிக்கை சரியான முறையில் பராமரிக்க முடியும். நடவு செய்யும்போது ஆட்கள் பற்றாக்குறையால் பயிர் எண்ணிக்கை சரியாக பராமரிக்க முடிவதில்லை. நேரடி விதைப்பில் பயிர் எண்ணிக்கை ஒரு சதுரமீட்டருக்கு 60-ஐ விட அதிகமாக இருப்பின் களைத்து விட வேண்டும். பயிர் எண்ணிக்கை மிக குறைந்துவிட்டால் திருத்திய நெல் சாகுபடி செய்வது போன்று மேட்டுப்பாத்தி நாற்றாங்கால் விட்டு 12 முதல் 16 நாள் வயதுடைய நாற்றுகளை விட்டு பயிர் எண்ணிக்கை பராமரிக்க வேண்டும்.
நேரடி புழுதி விதைப்பின் நன்மைகள்: இதன் மூலம் சாகுபடி செலவு குறைவு. நாற்றங்கால் தயாரித்தல், நாற்று பறித்தல், நடவு செய்தல் ஆகிய பணிகள் இல்லாமையால் ஏக்கருக்கு ரூ.5 ஆயிரம் வரை சாகுபடி செலவு மிச்சமாகிறது. நெற்பயிரின் வயது 10 நாட்கள் வரை குறைகிறது. பயிர் எண்ணிக்கை பராமரிக்கப்படுவதால் கூடுதல் மகசூல் கிடைக்கிறது. எனவே டெல்டா மாவட்ட விவசாயிகள் நீர் நிச்சயமற்ற காலநிலையில் நம்பிக்கை இழக்காமல் வரும் சம்பா பருவத்தில் நேரடி புழுதி விதைப்பின் மூலம் சாதனை படைக்கலாம்

தினமணி செய்தி
ஜி.சுந்தரராஜன்
பரங்கிப்பேட்டை வேளாண் உதவி இயக்குநர் எஸ்.ரமேஷ்.